கை, கால்கள், கண்கள், காதுகள் என மனிதர்களின் உடல் உறுப்புகளின் வேகம் அசாத்தியமானதாக இருக்கிறது. ஆனால் மூளையின் வேகம் மிகவும் மெதுவானது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து ‘நியூரான்’ எனும் அறிவியல் ஆய்வு இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “மனிதர்களின் உடல் உறுப்புகளின் வேகம் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு பாம்பு உங்கள் பக்கத்தில் இருக்கிறது எனில் அந்த நேரத்தில் உங்கள் உடலின் செயல்பாடுகள் மிக வேகமானதாக இருக்கும். விரல்கள் தீயை உணரும் அடுத்த நொடி அங்கிருந்து நீங்கள் கையை எடுத்துவிடுவீர்கள். இவையெல்லாம் நொடிப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில் நடக்கிறது.
இதற்கு காரணம் நமது புலன்கள் ஒவ்வொரு நொடியும் பில்லியன் கணக்கான பிட்(bits) தரவுகளை சேகரிக்கின்றன. சேகரித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ப உணர்வு அமைப்புகள் செயல்படுகின்றன. ஆனால் மூளை வெறும் 10 பிட் (bits) தரவுகளை மட்டுமே நனவாக்கத்திற்கு பயன்படுத்துகிறது. உணர்வு அமைப்புடன் ஒப்பிடுகையில் இது மிக மிக குறைவான வேகம். இன்னும் சரியாக சொல்வதெனில், மூளை ஒரு நத்தையின் வேகத்தில்தான் செயல்படுகிறது என்று மார்க்ஸ் மேஸ்ட்டர் மற்றும் ஜியு ஜெங் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.
புத்தகம் வாசிக்கும்போதும், வீடியோ கேம்களை விளையாடும்போதும் நம் மூளை எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்த அவர்கள், கிடைக்கப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திரட்டி, அதை பகுப்பாய்வு செய்து நமது மூளை மிக மெதுவாகதான் இயங்குகிறது என்பதை உறுதி செய்துள்ளனர். மூளையின் நியூரான்கள் அபரிமிதமான செயலாக்க ஆற்றலைக் கொண்டிருந்தாலும், ஒரு நொடிக்கு 10 பிட்கள் மட்டுமே நனவான சிந்தனைக்கு ஒதுக்கப்படுகிறது என்று இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ரயில் பாதையில் சோலார் பேனல்
ரயில் தண்டவாளம் இடையே சோலார் பேனல்கள் நிறுவி, ரயிலுக்கான மின்சாரம் வழங்கும் தொழில்நுட்பத்தை சுவிட்சர்லாந்தின் ‘சன்-வேய்ஸ்’ நிறுவனம் உருவாக்கிஉள்ளது. சோதனை முறையில் 100 மீட்டர் துாரம், 48 சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரயில் பாதுகாப்பு, தண்டவாள பராமரிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என 2023இல் இதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. சோலார் பேனல் வழக்கமாக நிரந்தரமாக அமைக்கப்படும். ஆனால் இம்முறையில் பாரமரிப்பு உட்பட தேவைப்படும் போது அகற்றி கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.