கடந்த 11.5.2025 ஞாயிறன்று சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை மாநிலக் கலந்துரையாடலில் ஒன்பது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் 5 மற்றும் 8ஆம் வகுப்புக்குத் தேர்வு நடத்தி வடிகட்டுவதால் பெண்களின் இடைநிற்றல் அதிகமாகும் என்ற கருத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற மற்ற மாநிலங்கள் எப்படி இருந்தாலும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பெண்களின் கல்வி வளர்ச்சி மகத்தானது. இதற்கு அடித்தளமிட்டது தந்தை பெரியாரும், திராவிட இயக்கங்களுமே!
நீதிக்கட்சியின் பங்கும் முக்கியமானது. காங்கிரஸ்காரராக இருந்தாலும் பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சியைக் கல்வி நீரோடை பாயும் கழனியாக மாற்றியதில் தந்தை பெரியாருக்கு முக்கிய இடம் உண்டு.
ஒரு வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் இருந்தால் கல்விக்கு முக்கியத்துவம் – முதலில் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பார் தந்தை பெரியார்.
அந்த வகையில் இந்தியத் துணைக் கண்டத்திலேயே கல்வியில், அதிலும் சிறப்பாகப் பெண் கல்வியில் முதலிடத்தில் நின்று முகம் காட்டுவது தமிழ்நாடே!
அதில் மண்ணை அள்ளிப் போடும் ஏற்பாடுதான் ஒன்றிய பிஜேபி அரசின் தேசிய கல்வித் திட்டம். இதனை எதிர்த்து கழக மகளிரணி, மகளிர் பாசறை தீர்மானம் நிறைவேற்றியிருப்பது இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழி காட்டுவதாகும்.
அடுத்து முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பெண்களின் பாதுகாப்புப் பற்றியது. பெண் என்றால் காம இச்சையின் வடிகால் பண்டம் என்று எண்ணுகின்ற ஆண் திமிரை அடக்கி ஆளும் நிலைக்குப் பெண்கள் வார்த்து எடுக்கப்பட வேண்டும்; தற்காப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். (இதற்கு முன் பெண்களின் தற்காப்புக்காக துப்பாக்கி உரிமம் அளிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டதுண்டு). பெண்களின் பாதுகாப்புக்காகவும், உரிமைக்காகவும் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களைப் பற்றிய புரிதலை உண்டாக்க வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது. அறிவியல் சிந்தனையுடன் கூடிய பாலியல் கல்வி கற்பிக்கப்பட வேண்டியது அவசியம் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இதுபோன்ற திட்டங்களைக் கேட்பதற்கும், சிந்திப்பதற்கும் தயக்கம் ஏற்படக் கூடும். காலவோட்டத்தில் அதற்கான தெளிவும், திடமும் ஏற்படும் என்பதில் அய்யமில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரையில் பாலியல் வன்கொடுமை என்பது சமூகப் பிரச்சினையாகும். 2022ஆம் ஆண்டில் மட்டும் தேசிய குற்றப் பதிவுகள் பணியகத்தின் அறிக்கையின்படி நாடு முழுவதும் 31,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை பெறும் விழுக்காடு 27 முதல் 28 மட்டுமே! நான்கு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு மட்டும் நீதி கிடைக்கிறது.
இந்த நிலையில் மக்கள் தொகையில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள் தொடர்பான பிரச்சினைக்கு அனைத்து வகையிலும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுவதில் நம் பெண்கள் முனைப்பாக இருக்கிறார்கள். இவற்றிலிருந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டால்தான் தன்னுரிமையும் முற்போக்குச் சிந்தனைகளும் முகிழ்க்க முடியும்.
நம் நாட்டுக் கல்வி முறையும் அறிவைத் துலங்கச் செய்யும் கருப் பொருளைக் கொண்டதாக இல்லை. அதில் முக்கிய மாற்றம் தேவை.
இந்திய அரசமைப்புச் சட்டம் 51-A(h) பிரிவு ‘‘அறிவியல் மனப்பான்மை, எதையும் ஏன் என்ன எப்படி என்று கேள்வி கேட்கும் உரிமை, சீர்திருத்தம், மனிதநேயம் இவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை’’ என்று கூறுகிறது.
இதன் தொடர்ச்சியாக மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றுவது அவசியம் என்பதை கழக மகளிரணி, மகளிர் பாசறை தீர்மானமாக வலியுறுத்தியுள்ளது.
சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு 33 விழுக்காடு அளிக்கும் 106ஆவது சட்டத் திருத்தம் வந்தும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகுதான் இதனைச் செயல்படுத்த முடியும் என்று சாக்குப் போக்குச் சொல்லுவதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது.
தற்போது மக்களவையில் 14 விழுக்காடு, மாநிலங்களவையில் 13 விழுக்காடு என்ற நிலையே உள்ளது. தேசிய அளவில் சட்டமன்றங்களில் 9 விழுக்காடு அளவே உள்ளது.
உலகளவில் நாடாளுமன்றத்தில் சராசரியாக பெண்களின் பிரதிநிதித்துவம் 26.9 விழுக்காடாகும். இதில் பாகிஸ்தானைவிட (21 விழுக்காடு) இந்தியாவில் குறைவு (14 விழுக்காடு!).
பெண்கள் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், பெண்களின் மக்கள் தொகைக்கு நிகராக சட்டமன்றங்களில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதிநிதித்துவம் இருந்தாக வேண்டும்.
‘‘பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? முதலாளிகளால் தொழிலாளிக்கு விடுதலை உண்டாகுமா?’’ என்ற யதார்த்தமான வினாவை எழுப்பினார் தந்தை பெரியார் (‘குடிஅரசு’ 12.8.1928).
இதில் மற்றவர்களை விட திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைதான் வழிகாட்ட வேண்டும்; ஏற்கெனவே இத்திசையில் வீதிக்கு வந்து பல வடிவங்களில் போராட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டதுண்டு.
மக்கள் தொகை அடிப்படையில்தான் நாடாளுமன்றத்தில், மாநிலங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ற (Delimitation) நிலைப்பாடு – பெண்கள் அதிகம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள்.
அரசியலைக் காட்டி பெண்களின் விடுதலையைத் தடை செய்யும் சூழ்ச்சி இதற்குள் மய்யம் கொண்டுள்ளது என்பதையும் உணர்ந்த விழிப்போடு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன – கழகத்தின் மகளிர் அணியும், மகளிர் பாசறையும்! இப்படி எல்லா வகையிலும் காலத்திற்குத் தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட வகையில் மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் முன் கை நீட்டியுள்ளது. செயலாக்கம் பெற உழைப்பதே நம் முன் உள்ள பணியாகும்!