சென்னை, மே 14- நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் சென்னை, புறநகர் பகுதிகளில் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் வீட்டுமனை பட்டாக்கள் கொடுத்து இருக்கிறோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வீட்டுமனைப் பட்டா
திருவொற்றியூர் தொகுதியை சேர்ந்த 1,500 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று (13.5.2025) நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அவர், பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசியதாவது:-
கலைஞர் கருணாநிதி, ‘சொல்வதை செய்வோம். செய்வதைத்’ தான் சொல்வோம்’ என்று எப்போதும் சொன்னார். ஆனால், நம்முடைய முதலமைச்சர் இன்று சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து சாதனை படைத்து வருகின்றார். அந்த வகையில் சென்ற நாடாளுமன்ற தேர்தலின்போது சென்னையில பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இருக்கிற மக்களுக்கு, பட்டா கொடுக்க வேண்டும் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.
அதனடிப்படையில்தான் சென் னையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பட்டாக்களை வழங்கி இருக்கிறோம். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நானும் மற்றும் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களும் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பட்டாக்களை கொடுத்து இருக்கிறோம்.
கலைஞர் கனவு இல்லம்
குறிப்பாக, நம்முடைய வட சென்னை அனல்மின் நிலையத்துக்கு இடம் கொடுத்தவர்கள் 400 பேருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டதற்கான பட்டா பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது.
அதை கேள்விப்பட்ட நமது முதலமைச்சர், உடனே அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனடிப்படையில் இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு பிறகு அந்த 400 பேருக்கும் பட்டா வழங்கப்படுகிறது.
சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும், யாரும் வீடு இல்லாமல் கஷ்டப்படக் கூடாது என்று ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை முதலமைச்சர் நிறைவேற்றி வைத்தார்.
அதன் மூலமாக வீடு இல்லாத தமிழ்நாட்டு மக்களுக்கு இன்றைக்கு லட்சக்கணக்கில் வீடுகள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
நான் உங்களிடம் கேட்ப தெல்லாம், நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய திட்டங் களை, சாதனைகளை நீங்கள் 4 பேருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இந்த அரசினுடைய, பிராண்ட் அம்பாசிடர்களாக (தூதுவர்கள்) மக்களாகிய நீங்கள் செயல்பட வேண்டும். இந்த பகுதி மக்களுக்காக இன்னும் 18 ஆயிரம் பட்டாக்கள் தயார் செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவிலேயே அதையும் உங்களிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக கொடுக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பி.கே.சேகர் பாபு. மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஆர். டி.சேகர், டாக்டர் எழிலன், அய்ட்ரீம் மூர்த்தி, எபினேசர், பிரபாகர ராஜா, கே.பி.சங்கர், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ் குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், நில நிர்வாக ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.