“பெரியாரியத்தின் பெரும்பயன் தமிழ்நாட்டைத் தாண்டிட வேண்டும், பெரியார் என்ற மகத்தான மானிடத் தத்துவத்தின் அருமை, பெருமை, தேவையை உலகெங்கும் பரப்புதல் மிக மிகத் தேவையானது” என்கிறார் இந்தக் கட்டுரையாளர். ஒரு பொது நிலைப்பார்வையுடன் தமிழ்நாடு அரசுக்கும் மற்ற ஆய்வு வெளியீட்டாளர்களுக்கும், அரிய சிந்தனைக்கும் இக்கட்டுரை ஓர் அறிவு விருந்தாகும். மற்றொன்று, பற்பல இந்திய மொழிகளில் தந்தை பெரியார் கருத்துரைகளும், கட்டுரைகளும் பலப்பல தனித் தனி ஆய்வாளர்கள் – எழுத்தாளர்கள் மூலம் வெளிவந்துள்ளன. ஹிந்தி, வங்காளம், பிரெஞ்சு, கன்னடம், மராத்தியம் முதலிய பல மொழிகளிலும் வந்துள்ளன. ஊன்றிப் படியுங்கள்! உணர்வினைப் பெறுங்கள்!!
– ஆசிரியர்
நேற்றைய (13.5.2025) தொடர்ச்சி…
பெரியாரது படைப்புகளைப் பொருள் அளவிலான நூல்களாகவோ, தேர்வு நூல்களாகவோ வெளியிட்ட பெரியார் இயக்கத்தினர் அனைவரும் வணிக நோக்கோடு விலையிடவில்லை என்பது உண்மைதான். கொள்கைப் பரப்பு நோக்கில் குறைந்த விலையில் பெரியார் நூல்கள் விற்கப்பட்டாலும், அன்றைய உற்பத்திச் செலவுகளுக்கு ஈடுகட்டக்கூடிய அளவில் விலை வைப்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
இன்றைய அரசியல் சூழலில் பெரியார் படைப்பு களை வெளியிட ஒன்றிய அரசு பொருள் ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆனால், கடந்த 58 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்துவரும் பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ள கட்சிகள் இரண்டும் பொருளுதவி செய்திருக்கலாம். செய்யவில்லை என்பதைப் பேசுவது தனி அரசியல் ஆகிவிடக்கூடாது. இன்றைய நிலையில், கட்சி அரசியலுக்குள் பெரியாரைக் கொண்டுவர வேண்டியதில்லை. இனிச் செய்யவேண்டியது என்ன என்பதை மட்டுமே எண்ணவேண்டும்.
பெரியார் படைப்புகள் அனைத்தையும். கால அடிப்படையில் தொகுத்தால் 200 தொகுதிகளையும் தாண்டலாம். பெரியாரது பொதுக்கூட்டம் அல்லது நிகழ்வுகளின் உரைகள் பெரிதும் பெரியார் நடத்திய இதழ்களிலேயே முழுமையாக வெளியிடப்பட்டிருப்பதால், அவை யாவும் உண்மைத் தன்மை கொண்டவையாகவே அமைந்துவிட்டன. எனவே, பெரியாரது எழுத்துகளும் பேச்சுகளும் ஒரே தன்மை கொண்ட படைப்புகளாகவே கருதத் தக்கனவாக அமைந்துள்ளன.
தமிழில் இவற்றைக் கால வரிசையில் வெளியிடத் தமிழ்நாடு அரசு பொருள் ஒதுக்கீடு செய்யவேண்டும். பெரியாருடைய அனைத்துப் படைப்புகளையும் வெளி யிடுவதை உறுதி செய்யவேண்டும். இதனால், தொடக்க நிலையில் இரண்டு பயன்கள் கிடைத்துவிடுகின்றன.
முதலாவது, பெரியாரது எழுத்துகள் அனைத்தும் கால வரிசையில் முழு வடிவம் பெற்றுவிடுகின்றன.
அடுத்து, இந்த நூல்கள் யாவும் மிக மிகக் குறைந்த விலையில் மக்களைச் சென்றடையும் வாய்ப்பினைப் பெறுகின்றன.
இந்தப் பணிகளை மேற்கொள்ள, பெரியார் கொள்கைகளுக்காகத் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்ற இயக்கத்தினர், தனியார் சிலர் கொண்ட குழு ஒன்றினைத் தமிழ்நாடு அரசு அமைக்கலாம்.
பெரியார் படைப்புகள் தொடர்பான இதழ்கள், நூல்கள் போன்ற அனைத்தையும் திரட்டிக் கால அளவில் ஒழுங்குப்படுத்தி வெளியிடும்போது, முன் வெளியீட்டுத் திட்டம், விலை குறைவு போன்ற வாய்ப்புகளால் பல்லாயிரக்கணக்கில் அவற்றுக்கு வேண்டுதல் இருக்கும் என்பதில் அய்யமில்லை.
இத்தகைய பணிகளில் பெரியார் பற்றாளர்கள் பலரும் ஏதோவொரு வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவோராகவே இருக்கின்றனர். இதனால், தொகுப்பு முயற்சிகளை முன்னெடுப்பதும் முறைமைப்படுத்துவதும் முழுமைப்படுத்துவதும் பெரும்பணியாகத் தெரிந்தாலும், எளிதில் நிறைவேற்றக் கூடியனவாகவே அமைந்திருக்கும்.
இத்தகைய பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, பெரியார் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்கின்ற கடமை யையும் உடன் நிகழ்வாக மேற்கொள்ளலாம். ஆங்கில மொழிபெயர்ப்புதான் பெரிதும் அடிப்படையாக அமைந்து பிற மொழிகளுக்குச் செல்ல உறுதுணையாக இருக்கப்போகிறது.
பல கருத்துகள், விவரங்கள், விளக்கங்கள் போன்றவை திரும்பத் திரும்ப வருவனவாக இருக்கும் என்பது உண்மைதான். இருப்பினும், அவை யாவற்றையும் ஆவணங்களாக, தரவுகளாக எடுத்துக் கொள்ளவேண்டுமேயன்றிப் புறக்கணிக்கவோ அல்லது கழிக்கவோ எண்ணவேண்டியதில்லை. ஒரு பொருளை விளக்கிப் பேசும்போது அல்லது எழுதும்போது, ஒரு சொல் அல்லது ஒரு வரிகூடப் புதிய பொருளைக் கொடுக்கலாம்; விவரங்களைச் செறிவாக்கலாம்; முழுப் புரிதலைத் தரலாம். தொகுப்பு முயற்சிகளில் இவையெல்லாம் இயல்பானவையாக இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
பெயர்கள், நிகழ்வுகள் போன்றன வரலாற்றில் இடம்பெற்றிருந்தாலும், இன்றைய தலைமுறை யினருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்புகள் மிகுதி. இவற்றைப் புரிந்துகொள்ளும் அளவில் குறிப்புகள் தரப்பட்டால், தொகுப்பின் பயன் முழுமையடையும். ஆனைமுத்து அய்யா அவர்கள், ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ நூல் தொகுப்பினை விரிவுபடுத்திச்’ செம்மையுடன் வெளியிட்டபோது இத்தகைய பணியினைச் சிறப்புற மேற்கொண்டிருந்தார்.
ஆசிரியர் வீரமணி அய்யா போன்றோருடன், பெரியாரியலில் ஆழம் கண்ட பல அறிஞர்கள் இன்று இருக்கின்றனர். இவர்களோடு அண்மைக் கால வரலாற்றினை ஆய்வு செய்து வரும் அறிஞர் களின் பங்களிப்பினையும் வேண்டுமெனில் பெற்றுக் கொள்ள இயலும். குறிப்பாக, ஆங்கிலத்திலும் இந்திய ஒன்றியத்தின் பிற மொழிகளிலும் பெரியார் படைப்புகளை வெளியிடும்போது, விவரக் குறிப்புகள் முற்றாகப் புரிதலுக்கான பின்னணித் தகவல்களாக அமைந்துவிடும்.
இந்தப் பெரும் பணியோடு இணைந்து செய்ய வேண்டிய வேறு சில கடமைகளும் காத்திருக்கின்றன.
- பெரியார் வரலாறு
- பெரியார் கைப்பட எழுதிய மடல்கள், குறிப்புகள்
- பெரியார் தொடர்பான படங்கள்
- பெரியாரது காலத்தில், அவரது செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு இதழ்கள் வெளியிட்ட செய்திகள், கட்டுரைகள், நேர்காணல்கள்
- பெரியார் குறித்த நிகழ்வுகளின் நாள் குறிப்புப் பதிவுகள்
போன்ற அனைத்தும் ஆவணப் பதிவுகளாகத் ‘திரட்டப்படுவதும் நாளைய தலைமுறையினருக்கான அறிமுகமாகவும் வழிகாட்டுதலாகவும் அமையும்.
பெரியார் காலத்திலேயே, 1939 வரையிலான அவரது வாழ்க்கை வரலாற்றினைத் ‘தமிழர் தலைவர்’ என்ற தலைப்பிட்டு சாமி. சிதம்பரனார். அவர்கள் முதல் பகுதியாகப் பதிவு செய்தார். இதன் தொடர்ச்சியினை, ‘உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு’ என்ற தலைப்பில் ஆசிரியர் வீரமணி அவர்கள் இரண்டு முதல் பத்து தொகுதிகள் வரை விரிவாக எழுதியிருக்கிறார்.
மேலும், கவிஞர் கருணானந்தம் 1979இல் பெரியார் வரலாற்றினை 800 பக்க அளவில் வெளி யிட்டிருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் ஆயிரம் பக்க அளவில் எழுதியிருந்த பெரியார் வரலாறு வெளிவராமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களன்றி மஞ்சை வசந்தன், பேரா. நன்னன் போன்ற பலரும் பெரியார் வரலாற்றினைப் படைத்துத் தந்திருக்கின்றனர். ‘இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு’ என்று நாரா. நாச்சியப்பன் எழுதியதும், ‘தந்தை பெரியாரின் கதை’ என்று சுகுமாரின் படைப்பும் இளம் பருவத்தினருக்கான நூல்களாக வெளிவந்துள்ளன.
இவற்றுக்கு அப்பால், பெரியாரை முறையாக அறிமுகப்படுத்தும் நூல்கள் வரவேண்டியுள்ளன என்றுதான் கூறவேண்டும்.
இவற்றோடு, பெரியார் வரலாற்றை முழுமையாக விளக்கிக்கூறும் நூல்கள் பல பக்கங்களாக அமையாமல், எளிதில், விரைவில் படிக்கக்கூடியனவாகவும் வெளிவரவேண்டும். பல பக்கங்கள் கொண்ட வாழ்க்கை வரலாற்று நூல்கள் வேண்டியுள்ளன என்றாலும், அனைவரும் அவற்றை முழுமையாகப் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனால், ஆழமான அறிமுகத்துடன் கூடிய சிறு நூல்களும் வெளிவரவேண்டும். இவையல்லாமல், மாணவர்களுக்குப் பாட நூலாக வைக்கும் அளவில் பெரியார் வாழ்க்கையினை அறிமுகப்படுத்தும் வகையிலான நூல்களும் வேண்டப்படுகின்றன. இவை பின்னர் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் வெளியிட ஏதுவாக அமையும்.
பெரியார் அறையில் அமர்ந்து கொண்டு அரசியல் அல்லது பரப்புரை செய்தவராக இருக்கவில்லை. தான் வாழ்ந்த முதுமைக் காலம் வரை இயக்கத்தினரோடு தொடர்புகொண்டு இயங்கிக்கொண்டிருந்த பெருமகனார் அவர். இயக்கத் தோழர்களுக்கு அவர் தன் கைப்பட எழுதிய மடல்கள் நூற்றுக்கணக்கில் இருக்க வாய்ப்புகள் உண்டு. பெரியார் இயக்கத்தினர் பெரிதும் தலைமுறைகளாகக் கொள்கைப் பிடிப்பில் வளர்க்கப்பட்டிருப்போர் என்பதால், இத்தகைய மடல்களை அவர்கள் காத்து வைத்திருப்பர். ஒரு வரி மடலாகவும் அவை இருக்கலாம், பல பக்கங்கள் கொண்டனவாகவும் இருக்கலாம். இவற்றைத் திரட்டி ஒளியச்சுப் படமாகவே வெளியிட இன்றைய நுட்ப வளர்ச்சி ஒத்துழைக்கிறது.
காந்தி, அம்பேத்கர் தொடர்புடைய படங்கள் யாவும் நூல் வடிவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. பெரியார் நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட படங்கள் நூற்றுக்கணக்கில் அல்ல, ஆயிரக்கணக்கில் இருக்கலாம். இவை யாவும் முடிந்த அளவு’ பதிவு செய்யப்படவேண்டும்.
பெரியார் காலத்தில் அவரது செயல்பாடுகளை முழுமையாக வெளியிட அன்றைய இதழ்கள் பெரிதும் தயக்கம் காட்டின. வேறு வழியின்றிப் பதிவு செய்யவேண்டிய அழுத்தம் இருப்பினும், ஒரு பத்திச் செய்தியாக, ஒரு சில வரிகளில் முடித்துக்கொள்ளும் நடைமுறையே பெரிதும் பின்பற்றப்பட்டு வந்தது. அவரது நேர்காணல்கள் ஆனந்த விகடன், கல்கண்டு போன்ற இதழ்களில் விரிவாக வந்திருப்பதையும் மறக்க முடியாது. இவை யாவற்றையும் தொகுத்து வெளியிடலாம். காந்தியின் இறுதி 100 நாள்களில் அவர் குறித்து ‘இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான செய்திகள் யாவும் திரட்டப்பட்டு, அவர்களது வெளியீடாக வந்திருப்பதை இங்குக் குறிப்பிடலாம்.
அடுத்து, காந்தியின் அன்றாடப் பணிகளை நாள், இடம் என்ற அளவில் நிகழ்வுகளின் விவரங்களை நூலாக்கி, ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு வெளியிட்டிருக்கிறது. இதுபோன்று, பெரியாருடைய நாள் நிகழ்வுகளை வெளியிடலாம். ஆசிரியர் வீரமணி அவர்களின் ‘உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு’ நூலின் ஒன்பது தொகுதிகளில் இவையெல்லாம் அடங்கியிருக்கின்றன என்றாலும், நாள், நிகழ்வு, ஊர், பேசிய தலைப்பு என்ற அளவில் மட்டும் தொகுத்துத் தந்தால் பெரியார் ஓய்வின்றிச் செயல்பட்டுக்கொண்டிருந்த விவரங்களை மட்டு மல்லாது, எங்கெல்லாம் சென்று தனது பரப்புரையினை முன்னெடுத்தார் என்ற விவரங்களும் எளிதில் மனதில் பதியும்படி கிடைக்கும்.
இவையன்றி, பெரியார் தொடர்பானவற்றை மேலும் வெவ்வேறு வகையில் வெளிப்படுத்த முடியும்.
பெரியார் சிலைகளிலும் சிலைகளின் கட்டமைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ள ஒரு சில வரிகளிலும் மட்டும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. பிற இன மக்கள் பெறாத, பார்க்காத விடியலைத் தமிழினத்துக்கு முன்னெடுத்தவராகப் பெரியார் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவருடைய பணிகள் இன்னும் தமிழ்நாட்டிலேயே முற்றுப்பெறவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது.
முருகன் வேலினைத் தூக்கிக்கொண்டு வெறி ஊர்வலம் சென்றாலும், திருப்பரங்குன்ற மலை உரிமை குறித்துப் பேரணிகள் நடத்தினாலும், தமிழ்நாட்டின் மக்களைத் திக்கு மாற்றிவிட முடியாது என்ற அளவில் தமிழ்நாடு தெளிவு பெற்றிருக்கிறது. இருப்பினும், பகைவர்களின் முயற்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவர்களுடைய முயற்சிகள் யாவும் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடுகின்றன என்பதும் உண்மைதான். இதற்கான அடிப்படை, சமூக மறுமலர்ச்சிக் கருத்துகள் இங்கு தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதால்தான் என்பதைப் பெரியார். பற்றாளர்களும் முற்போக்காளர்களும் உணர்ந்து கொண்டிருக்கின்றனர். முற்போக்கு எண்ணங் களும் கல்வியறிவும் மிக்க மாநிலமாகக் கருதப்படும் கேரளத்தில்கூட, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு மகளிர் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது, அதனை ஏற்றுக்கொண்டதால், அடுத்த தேர்தலில் பொதுவுடைமைக் கட்சியினரைக் கொண்ட கூட்டணி தோல்வியைத் தழுவ வேண்டிய தாயிற்று. இதைப் போன்று, பிற மாநிலங்களில் மக்களை பிளவுபடுத்தி வாக்குகளை அள்ளுகின்ற பா.ஜ.க.வின் செயல்முறைகள் ஓரளவு வெற்றியினைக் கண்டு கொண்டிருக்கின்றன.
இதனால், முன் எப்போதையும்விடத் தற்போது பெரியாரின் வேண்டல்கள், தமிழ்நாட்டைத் தாண்டியும் செல்லவேண்டிய நெருக்குதல்கள் உள்ளாகியிருக்கின்றன. சமூக மறுமலர்ச்சி என்ற அளவில், சமூக நீதியினை அடிப்படையாகக் கொண்டு பிற மாநிலங்களில் உள்ள மக்கள் தெளிவு பெறாத நிலையில் நீடித்துக்கொண்டிருக்கின்றனர். அரசியல் அடிப்படையில் தெளிவு பிறந்தாலும், சமூகத் தடைகள் குறுக்கிட்டுத் தடுப்பதைக் காண முடிகிறது. பெரியாரது அனைத்துப் படைப்புகளையும் தொகுத்து, தமிழ்நாட்டைத் தாண்டிப் பிற இனங்கள் சார்ந்த மொழிகளில் வெளியிடுவது மட்டுமே தீர்வு என்று கூற முடியாது. ஆனால், இது முதல் படியாக அமையும் என்பதில் சிறிதும் அய்யமில்லை. இந்த முயற்சியினை அடுத்து, பெரியாரியத்தினை உள்வாங்கிக்கொண்டு முற்போக்கு இயக்கங்கள் தங்கள் செயல்பாடுகளை வடிவமைத்துக் கொண்டால்தான் மாற்றங்களுக்கான வழி பிறக்கும். பகைகளை வெல்ல முடியும்.
தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் உரிமைகளை வென் றெடுப்பதோடு நின்றுவிடாமல், பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாகப் பல முன்னெடுப்புகளை நிகழ்த்தி வருகிறார். மாநிலங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கத் தமிழ்நாடு மட்டும் போராடினால் போதாது. சமூக மறுமலர்ச்சி – சமூக நீதி என்ற விடியலுக்குள் நுழைந்தால்தான், பிற மாநிலங்களில் உள்ள இன மக்கள், மாநில உரிமைகள், தன்னாட்சி, தனித்துவம் போன்றவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.
அதற்கான முதல் முயற்சியாகப் பெரியாரது படைப்புகளை முழுமையாகத் தொகுத்து, கால வரிசையில் வெளியிடுவதை விரைவுபடுத்த வேண்டும். உடன் நிகழ்வாக, அவற்றை அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இவைதாம் முதல் கட்டமாகப் பெரியாரித்தின் பெரும் பயன்கள் தமிழ்நாடு எல்லைகளைத் தாண்டுவதற்குத் துணையாக அமையும்.
இந்தப் பணிகளைத் தமிழ்நாடு அரசு தானாக முன்னெடுத்துப் பொருள் ஒதுக்கீடு செய்து நிறைவு செய்யவேண்டும். காந்திக்கு ஒன்றிய அரசு செய்தது. அம்பேத்கருக்கு மராட்டிய அரசு தொடக்கத்திலும், பின்னர் ஒன்றிய அரசும் செய்தன. தமிழ்நாடு இதில் பின்தங்கிவிடவில்லை என்பது உறுதிப்படவேண்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மைக்கு அடிப்படையாக இருக்கின்ற பெரியாரியத்துக்கு வேறு எவரும் உதவப்போவதில்லை. பெரியார் பற்றாளர்களோடு, பொதுவுடைமையினர் உள்ளிட்ட அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் பார்வைக்கு இதனைக் கொண்டு செல்லவேண்டும். அகழ்வுகளை விரிவுப்படுத்தி, இரும்பின் காலத்தை வெளிக்கொண்டுவருவதில் தொடங்கி, மாநில உரிமைகளை நிலைநாட்டுவது வரை பல நகர்வுகளுக்குத் தமிழ்நாடு அரசு முன்னிரிமை கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டின் முயற்சிகளுக்குத் துணை நிற்க மற்ற மாநிலங்களையும் அணியப்படுத்துவது காலத்தின் வேண்டலாகும்.
இதற்கு, பெரியாரியத்தின் பெரும்பயன்கள், ‘தமிழ் நாட்டின் எல்லைகளைத் தாண்டிச் சென்றாகவேண்டும் என்பதுதான் முதல் புரிதலாக இருக்கிறது; முழுமையான புரிதலும் அதுதான்.