மதுரை, மே13-மதுரையில் நேற்று (12.5.2025) காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் மண்டகப்படி பகுதிகளுக்குள் அதிகாலை 3 மணி முதல், அனுமதிச்சீட்டு வைத்திருந்த பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பொறியாளர் பூமிநாதன் (வயது 65) என்பவரும், கள்ளழகரை தரி சிப்பதற்காக அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அருகில் இருந்த வர்கள், அவரை மீட்டு அங்கு நிறுத்தி இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால், அனைத்துப் பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் ஆம்புலன்ஸ் வெளியேற முடியாத சூழல் உருவானது. இதனால் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் வாகனம் அங்கும் இங்குமாக சுற்றி வந்தது.
பின்னர் வேறு வழியின்றி கள்ளழகர் இறங்கும் பகுதியான தண்ணீர் நிரப்பப்பட்ட பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டுச் சென்றது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பூமிநாதனை, மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய பின்னர், கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ராமராயர் மண்டகப்படியை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில், யானைக்கல் கல்பாலம் அருகே மதுரையைச் சேர்ந்த கண்ணன் (வயது 43) என்பவர் மூச்சுப்பேச்சின்றி மயங்கிக் கிடந்தார். அவரை அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. 2 பக்தர்கள் திடீர் சாவு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.