பெண்கள் பாலியல் பண்டமா? சிறப்பு நீதிமன்றத்தின் சிறப்பான தீர்ப்பு! பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!

Viduthalai
3 Min Read

பொள்ளாச்சி, மே 13  பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில் 9 பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்க ளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும் நீதிபதி நந்தினிதேவி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று பொள்ளாச்சியில் நடந்த கூட்டுப் பாலியல் வழக்கு. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ‘ஆபாச வீடியோ’ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இதுதொடர்பான காட்சிப் பதிவு வெளியானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்நிகழ்வு கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்தது.

வழக்கு சி.பி.அய்.க்கு மாற்றம்

முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்குக் காவல்துறையினர் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.அய்.க்கு மாற்றம் செய்யப்பட்டது.

சி.பி.அய். அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (வயது 25), சதீஷ் (வயது 28), வசந்தகுமார் (வயது 27), மணிவண்ணன் (வயது 28), ஹெரன்பால் (வயது 29), பாபு (வயது 27), அருளானந்தம் (வயது 34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது 2019 மே 21 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் சி.பி.அய். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது.

கழகத் தலைவரின் கருத்து!

இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது! வழிகாட்டத்தக்கது!!
வக்கணைப் பேசியோருக்கு சரியான பாடம்!!!

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை 

13.5.2025    

தீர்ப்பு தேதி அறிவிப்பு!

மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24 ஆம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. அறைக்கதவுகள் மூடப்பட்டு இணையம் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு மே 13 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

அதன்படி இன்று (13.5.2025) தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதால் இந்த வழக்கில் கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்படுவதற்காக சேலம் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய காவல்துறை யினரின் பாதுகாப்புடன் இன்று காலை கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த காவல்துறையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பளிக்க நீதிபதி நந்தினி தேவி நீதிமன்றத்திற்கு வந்தார். இதையடுத்து கைதான 9 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் வெளியாகாத வகையில் மகளிர் நீதிமன்ற அறைக்கதவு கள் அனைத்தும் மூடப்பட்டன. சிபிஅய் அதிகாரி கள், குற்றம் சாட்டப்பட்டோர், வழக்கு தொடர்புடை யோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

நீதிபதி நந்தினி தேவி அளித்த தீர்ப்பில், பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தண்டனை விவரங்கள் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

9 நபர்களையும் சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு அரசு தரப்பில் முறையிடப்பட்டது. தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் 9 பேருக்கும் தரப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

தண்டனை விவரம்

இந்தநிலையில் குற்றவாளிகள் 9 பேரின் தண்டனை விவரங்களை நீதிபதி நந்தினி தேவி வாசித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *