* சுற்றுலா சென்ற அப்பாவி மக்களைக் சுட்டுக்கொன்ற தீவிரவாதத்திற்குக் கடும் தண்டனை!
* இதற்குக் காரணமான பாகிஸ்தான்மீது இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து பாடம் கற்பித்தது வரவேற்கத்தக்கதே!
நாடாளுமன்றத்தைக் கூட்டி, நடந்தவற்றை விளக்கி அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்க பிரதமர் முன்வரவேண்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
ஜம்மு காஷ்மீர் பகுதிக்குச் சுற்றுலா சென்ற அப்பாவிகள் 26 பேரை சுட்டுக் கொன்றது எந்த வகை யிலும் நாகரிகமாகாது – இதன் பின்னணியில் இருந்த பாகிஸ்தானுக்கு, இந்திய இராணுவம் சரியான பாடம் கற்பித்துள்ளது பாராட்டத்தக்கது. சோதனைகள் வரும்போது ஓரணியில் திரளவேண்டும் என்பதற்கு அடையாளம்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பேரணி என்றும், பிரதமர் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி, நடந்த வற்றை விளக்கி, அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கி ைணக்கவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பாகிஸ்தானின் மறைமுக ஆதரவோடு, ஜம்மு – காஷ்மீர் பகுதியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும், காஷ்மீரின் இயற்கை அழகினை அனுபவிக்கச் சென்ற நமது மக்களில் 26 பேரை – அங்குள்ள தீவிர வாதிகள், மதவெறியை சுவாசிக்கும் ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றும், காயப்படுத்தியும், அப்பாவி மக்களைக் கொன்று உயிர் பறித்த மனித அநாகரிக காட்டுமிராண்டிச் செயலுக்கும், அதன் பின்னணியில் உள்ள பாகிஸ்தானின் அரசுக்கும் தக்க பாடம் கற்பித்தனர், பதிலடி கொடுத்தனர்.
இந்திய ஒன்றிய அரசும், அதன் இராணுவமும், பிரத மர் மோடி அவர்களது தலைமையில், உடனடியாகப் பொங்கி எழுந்து, புத்தி புகட்டும் வண்ணம் ‘ஆப ரேஷன் சிந்தூர்’ என்ற கடும் இராணுவ போர் நடவ டிக்கைக்கு ஆயத்தமாகி, நல்ல பாடத்தை நான்கு நாட்கள் போரிலேயே இந்தியா எதை, எப்படி, எப்போது கடைப்பிடிக்க வேண்டுமோ அதன்படி – பாகிஸ்தான் இராணுவமும், அந்த அரசும் உணரும்படி வெற்றிகரமாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நம் நாட்டின் சுயமரியாதையையும் நிலைப்படுத்தி, அப்பாவி சுற்றுலா பயணிகள் வாழ்வில் விளையாடிய கயமைக்குத் தக்க எதிர் நடவடிக்கைகளை உலகத்தார் அறிய நம் நாட்டின் பலத்தை உணரச் செய்தனர்.
இதற்குமுன் இருமுறை போரில்
இந்தியாவிடம் தோல்வியுற்ற பாகிஸ்தான்!
இந்தியாவிடம் தோல்வியுற்ற பாகிஸ்தான்!
பாகிஸ்தான், முன்பு இருமுறை தோல்விகளைச் சந்தித்தும் (இந்தியாவுடன் போரில் ஈடுபட்டு) சரியான சரித்திர பாடத்தை இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை.
நாம் நமது முந்தைய அறிக்கையில் குறிப்பிட்டபடி, தீவிரவாதத்தை கருவறுத்தலில் துளிகூட சமரசத்திற்கு இடமே இல்லை. இதில் அரசியல் கருத்து வேறு பாடுகளோ, மனமாச்சரிய நிலைகளோ குறுக்கிடக் கூடவே, கூடாது!
அதை உலக நாடுகள் நான்கு நாள்கள் போர்மூலம் உணர்ந்துள்ளன. நம் எதிரி நாடாகத் தன்னைக் கருதி விஷமங்களைச் செய்யும் பாகிஸ்தானையும், சில நாள்க ளில் உணரச் செய்துள்ளது உள்ளபடியே பாராட்டி வரவேற்கத்தக்கது.
பிரதமர் மோடி, இந்திய இராணுவத்தின் முக்கிய பொறுப்பாளர்கள், ஆட்சித் துறை ஆளுமைகள், முழு ஒத்துழைப்பை எவ்வித நிபந்தனையுமின்றி அளித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், போருக்கு ஒத்துழைப்பு நல்கிய மக்கள் அத்துணைப் பேருக்கும் கிடைத்த வெற்றி என்றால், மிகையாகாது!
சோதனைகள் வரும்போது –
ஓரணியில் திரள்வோம் என்பதற்கு அடையாளம்தான் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மக்கள் பேரணி!
ஓரணியில் திரள்வோம் என்பதற்கு அடையாளம்தான் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மக்கள் பேரணி!
சோதனைகள் வரும்போது, அதனை சாதனை களாக்கிக் காட்டுவோர் – ஓரணியில் ஒருமுகப்பட்டுச் செயல்படுவோர் என்பதற்குச் சான்று நமது தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 10.5.2025 அன்று சென்னை மெரினா கடற்கரையில் நடத்திய மாபெரும் மக்கள் பேரணியும் ஒன்று.
‘‘நாவலன் தீவினர்
எல்லாரும் நல்லவர்
எல்லாரும் வீரர் எல்லாரும் கவிஞர்
இமயச் சாரலில் ஒருவன் இருமினால்
குமரி வாழ்வான் மருந்துகொண்டோடினான்”
என்று புரட்சிக்கவிஞர் பல ஆண்டுகளுக்கு முன்பே கவிதை வரிகளில் மனித ஒருமைப்பாடுபற்றி வருணித்துள்ளார் என்றாலும், பாகிஸ்தான் நாடு போர் நிறுத்த ஒப்பந்தத்தின்மூலம் நான்கு நாள்கள் தாக்குதலைக் கண்டே வழிக்கு வந்த பிறகும், சில்லறை விஷமங்களில் தாக்குதல் நடந்தால், அதனைக் கண்டு, அதற்கு மேற்பட்ட பாடத்தைத் தருவோம் என்று நமது பிரதமரும், இராணுவத் தளபதிகளும் எவ்வித மன ஒதுக்கீடும் இன்றி, பிரகடனப்படுத்தியுள்ளது முற்றிலும் தேவையானவை ஆகும்!
இதுதான் வாய்ப்பு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், இதில், ‘‘தான் மத்தியஸ்தம் செய்யத் தயார்’’ என்று கூறி, அறிவிப்பு தருவதும், அதனை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக மறுத்ததும்கூட வரவேற்கத்தக்கதாகும்!
‘‘இது எங்கள் இரு நாட்டுப் பிரச்சினை; அதில் மற்ற வர் மூக்கை நுழைக்க அனுமதிக்கமாட்டோம்’’ என்று உடனடியாக இந்தியா அறிவித்தது பொறுப்புடன் கடமையாற்றும் நிலைப்பாட்டினை உணர்த்தியது.
இதனையொட்டி, இரண்டு முக்கிய நடவடிக்கைகள் – நாடே ஒருமுகப்பட்டு ஓரணியில் திரண்டுள்ள நிலையை மேலும் வலுப்படுத்தும்.
உடனடியாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தினைக் கூட்டி, நமது ஒற்றுமையை (National Solidarity) காட்டி, எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
வெளியுறவுத் துறை செயலாளர்மீதான
அவதூறு ஏற்புடையதல்ல!
அவதூறு ஏற்புடையதல்ல!
அடுத்து, வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரிமீது, ஹிந்துத்துவவாதிகள் அவதூறு பரப்பி, அவரது குடும்பத்தைப்பற்றி கொச்சையாகப் பேசுவது விரும்பத்தக்க செயலாகாது. இது உலக நாடுகள் பார்வைக்குப் போனால், நமது நாட்டின் மதிப்பு, இவ்வளவு சிறப்பான வெற்றியின் காலை இழுப்பதுதான இழுக்கு அல்லவா! விக்ரம் மிஸ்ரியின்மீதும், அவரது குடும்பத்தினர்மீதும் அவதூறு பரப்புவோர்மீது ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து, ஒருங்கிணைப்பு, கீழறுப்பு செயல்களில் ஈடுபடும் மதவெறியர்களைத் தடுத்து, தக்க தண்டனை தரவேண்டும்.
இது அவசர, அரசியல் நடவடிக்கையாகும். அய்.ஏ.எஸ். அமைப்புகளை, ஆளுமைகளை மனம் நொந்த நிலைக்குத் தள்ளலாமா? நியாயமா?
‘Eternal Vigilance is the Price for our Liberty’
‘‘எப்போதும் விழிப்புடன் இருப்பதே நமது சுதந்தி ரத்தைக் காக்க கொடுக்கவேண்டிய விலை ஆகும்’’ என்ற பழமொழியை நினைவூட்டி முடிக்கிறேன்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
13.5.2025