சென்னை, மே 13 மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்து வரும் 28ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 2 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகங்களுக்கான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பட்டறை பயிற்சி வரும் 28ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சிப் பட்டறையின் முக்கிய மதிப்பு முன்மொழிவுகள் வணிக சந்தைப்படுத்துதலின் அடிப்படைகள், வளர்ச்சிக்கான அலகு பொருளாதாரம், முக்கிய அளவீடுகளைப் புரிந்துகொள்ளுதல், டிஜிட்டல் சந்தைப்படுத்துதலின் இரகசியங்கள், வெற்றிக்கான தந்திரங்கள் மற்றும் கருவிகள் குறிப்புக்கான நிகழ்வு ஆய்வுகள்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி, அலைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஅய்அய் அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032, கைபேசி எண்கள் 9360221280, 9543773337 முன்பதிவு அவசியம், அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
கோடை மழை காரணமாக
மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்
தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு
சென்னை, மே 13 “தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பெய்த கோடை மழை காரணமாக, அன்றாட மின்தேவை குறைந்தது. இதனால், அன்றாட மின்தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்,” என மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மின் தேவை
தமிழ்நாட்டில் அன்றாட மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. கோடைக் காலத்தில் வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகம் உள்ளதால், மின்தேவையும் அதிகரிக்கிறது. இதன்படி, கடந்த 2024 மே 2-ஆம் தேதி 20,830 மெகாவாட்டாக மின்தேவை அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது.
நடப்பாண்டு மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது.
அத்துடன், மின்சார வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த ஆண்டு கோடைக் காலத்தில் மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிகரிக்கும் மின்தேவையை பூர்த்தி செய்வதற்காக ஏப்ரல், மே மாதங்களில் கூடுதலாக 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.9-க்கு வாங்க தனியார் நிறுவனங்களுடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்தது.
கடந்த மாதத்தில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில் மின்தேவை 19 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது.
கோடை மழை
மேலும், கடந்த மாதம் இறுதியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்தது. அத்துடன், கடந்த வாரத்தில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால், அன்றாட மின்தேவை 17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,
“கடந்த ஏப்ரல் மாதம் இறுதி முதல் மே மாதம் முதல் வாரம் வரையிலான நாட்களில் அன்றாட மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சில மாவட்டங்களில் பெய்த கோடை மழையால் இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. இனியும் அதிகரிக்கப் போவதில்லை. அப்படி அதிகரித்தாலும் காற்றாலை மின்சாரம் கிடைத்து விடும் எனவே, மின்தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.