“பெரியாரியத்தின் பெரும்பயன் தமிழ்நாட்டைத் தாண்டிட வேண்டும். பெரியார் என்ற மகத்தான மானிடத் தத்துவத்தின் அருமை, பெருமை, தேவையை உலகெங்கும் பரப்புதல் மிக மிகத் தேவையானது” என்கிறார் இந்தக் கட்டுரையாளர். ஒரு பொது நிலைப்பார்வையுடன் தமிழ்நாடு அரசுக்கும் மற்ற ஆய்வு வெளியீட்டாளர்களுக்கும், அரிய சிந்தனைக்கும் இக்கட்டுரை ஓர் அறிவு விருந்தாகும்.
மற்றொன்று, பற்பல இந்திய மொழிகளில் தந்தை பெரியார் கருத்துரைகளும், கட்டுரைகளும் பலப்பல தனித் தனி ஆய்வாளர்கள் – எழுத்தாளர்கள் மூலம் வெளிவந்துள்ளன.
ஹிந்தி, வங்காளம், பிரெஞ்சு, கன்னடம், மராத்தியம் முதலிய பல மொழிகளிலும் வந்துள்ளன.
ஊன்றிப் படியுங்கள்! உணர்வினைப் பெறுங்கள்!!
– ஆசிரியர்
தந்தை பெரியார் அவர்கள், தாம் வாழ்ந்த காலம் முழுதும் தமிழ் மக்களையும் தமிழ் நாட்டையும் நடுவப் படுத்தியே செயல்பட்டு வந்தார் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அவர் எழுதியனவும் பேசியனவும் தமிழாகவே இருந்தன. பரப்புரைகளும் போராட்டங்களும் தமிழ் மக்கள் சார்ந்தே அமைந்திருந்தன.
‘ரிவோல்ட்’ போன்ற ஒரு சில முயற்சிகள் அல்லாமல், பெரியார் நடத்திய பல்வேறு இதழ்கள் யாவும் தமிழிலேயே வெளிவந்தன. அவரது காலத்தில் பரப்புரைக்காகப் பதிப்பிக்கப்பட்ட நூல்களும் தமிழ் மொழியிலேயே இருந்தன.
சமூக, பொருளிய, பண்பாட்டு, அரசியல் தளங்கள் எதிலும், தான் வாழ்ந்த காலம் முழுதும் பெரியார் தனித்து ஒதுங்கியிருக்கவில்லை. அனைத்திலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவரது பங்களிப்பு அழுத்தமாகவும் ஆழமாகவும் தொடர்ந்துகொண்டிருந்தது.
அன்றைய சென்னை மாமாநிலத்தில், இன்றைய தமிழ் பேசும் மக்களைக் கொண்ட தமிழ்நாடு, தெலுங் கினைத் தாய்மொழியாகப் பெற்றிருந்த ஆந்திரம் ‘ஆகியவற்றோடு, கன்னடம், மலையாளம், ஒரியா போன்ற மொழிகள் பேசுகின்ற சில வட்டங்கள் அல்லது பகுதிகள் இணைக்கப்பட்டிருந்தாலும், பெரியாரின் பொதுவாழ்வுச் செயல்பாடுகள் பெரிதும் இன்றைய தமிழ்நாட்டின் எல்லைகளுக்குள்ளேயே முன்னிடம் பெற்றிருந்தன.
கேரளத்தில் உள்ள வைக்கம் போராட்டத்தின் போக்குகளையே மாற்றி, வெற்றிகளை வென்றெடுத்த பெரியாரின் பங்களிப்புப் பெரிது என்பது உண்மைதான். இருந்தாலும், பெரியாரின் அன்றாட நிகழ்வுகள் தொடர்ந்து தமிழ்நாட்டி லேயே மேலோங்கி நின்றன. தமிழ் பேசுகின்ற பகுதிகளுக்கு அப்பால் பெரியாரது சுற்றுப்பயணங்கள், பொதுக்கூட்டங்கள், இயக்கச் செயல்பாடுகள் என அவ்வப்போது தொடர்புகள் பல நீடித்திருந்தாலும், அவை சில வரையறைகளுக்குள்ளேயே இருந்தன எனலாம்.
தமிழ் பேசும் பகுதிகளைப் பொறுத்தளவில், அவர் செல்லாத இடங்களோ, உரையாற்றாத ஊர்களோ, தொடர்புகொள்ளாத மக்கள் பிரிவினரோ இல்லை என்றே கூறிவிட முடியும்.
பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு, சமய மறுப்பு, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள், தன்மானப் பரப்புரைகள், பெண் விடுதலை, பார்ப்பனிய எதிர்ப்புகள், இட ஒதுக்கீடு, மொழி, மாநில உரிமைகள், ஆங்கில ஆட்சி எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் விடுதலை உள்ளிட்ட இன்னும் பல முனைகளில் பெரியார் ஆற்றிய பணிகளைக் கூறிக்கொண்டே போக முடியும். மக்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த அனைத்தையும் பெரியார் எதிர்த்தார், மக்கள் இனத்தின் வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் அனைத்து முற்போக்குக் கூறுகளுக்கும் பெரியார். துணை நின்றார் என்று சுருக்கமாகக் கூறிவிட முடியும். பெரியாரியம் என்று தனித்துக் கூறுமளவுக்கு, சமூக, பொருளிய, பண்பாட்டு, அரசியல் மாற்றங்களுக்கான கருவிகளாகப் பெரியாரது பணிகள் மேம்பட்டிருந்தன என்பதில் மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழ்நாட்டு மக்களுக்காகத் தமிழில் பேசியனவாகவும் தமிழில் எழுதியனவாகவும் பெரியாரது கருத்துக்கள், கொள்கைகள், தத்துவங்கள், செயல்பாடுகள் போன்றவை இருந்தாலும், இவை யாவும் மனித இனம் முழுமைக்கும் வேண்டுவனவாக இருந்தன – இருக்கின்றன என்பதை எவரும் புறக்கணித்துவிட இயலாது. எடுத்துக்காட்டுகள், பெயர்கள், சொற்கள், நிகழ்வுகள் போன்றன தமிழ் நிலம் சார்ந்து இருப்பினும், பெரியாரது முன்னெடுப்புகள் யாவும் அனைத்து மக்களுக்கும் பொருந்துவனவாக இன்றும் இருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.
பெரியாரின் பெரும் பங்களிப்பின் அடித்தளத்தில்தான் தமிழ்நாடு பிற மாநிலங்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. இட ஒதுக்கீடு, இந்தித் திணிப்பு, பார்ப்பன மேலாண்மை மறுப்பு, சமூக நீதி, தன்னுரிமை வேட்கை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற இன்னும் பல நிலைகளில், பிற மாநிலங்களுக்குத் தமிழ்நாடு வழிகாட்டியும் வருகிறது.
பெரியாரது கருத்துகளின் தாக்கம் உரிய காலத்தில் இந்திய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தால், சமய அடிப்படையிலான பிரிவினைப் போக்குகளும் பாரதிய ஜனதா போன்ற அரசியல் கட்சிகளின் வளர்ச்சியும் வல்லமையும் கட்டுக்குள் அடங்கியிருக்கும். பெரியார் வாழ்ந்த காலத்திலேயே இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநில இனங்களின் முன்னேற்றத்தில் பல வகையான தடைகள் நிலவின. ஆயினும், ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றிருந்த தொடக்கக் காலக்கட்டத்தில், பெரியாரியத்தின் பரவலுக்கான புறச் சூழல்கள் முழுமையாக உணரப்படவில்லை.
இந்திய ஒன்றியத்தில் வாழும் மக்கள் இனங்களின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டைகளாக இருந்த பல தடைகளுக்கு, குறிப்பாக தன்மானம், தனியு ரிமை, தன்னாட்சி, சமயம் சார்ந்த மூடநம்பிக்கை ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, சமூக நீதி போன்ற பலவற்றுக்கும் தீர்வாகப் பெரியாரியத்தைப் பின்பற்றாத நிலையே அடிப்படையாக இருக்கிறது என்பதை இன்று முற்றிலுமாக அறிய முடிகிறது. இன்றைய இந்திய நிலைமைகளில், அரசியலாக இருந்தாலும் ஆட்சி முறையாக அமைந்தாலும், பண்பாட்டு முறைமைகளாக இருந்தாலும், சமூக நீதியாகப் பார்த்தாலும், பெரியாரியத்தின் கட்டத்தைக் கடக்காமல் அல்லது தாண்டாமல், அடுத்த கட்ட முன்னேற்ற நகர்வு ஏற்பட வாய்ப்பில்லை என்பதை இன்றைய நிலைமைகள் உறுதிப்படுத்தி வருகின்றன.
அரசியல், பொருளிய விடுதலைக்காக அல்லது மாற்றங்களுக்காக இயங்கும் பல இயக்கங்கள், பெரியாரியத்தை உள்வாங்கிக் கொள்ளாத அல்லது உள்வாங்கி கொள்ள முடியாத தன்மைகளால் ஒரு தேக்க நிலையும் ஏற்பட்டிருப்பதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. முற்போக்கு இயக்கங்களும் பெரியாரை உள்வாங்கிக்கொண்டுதான் தங்களது அரசியல் நகர்வுகளை வடிவமைத்துக் கொள்ளவேண்டும். பெயர் குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும், இது இன்றைய அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் செவ்வனே பொருந்தும் என்பதில் அய்யமில்லை.
பெரியாரியம் என்பது என்ன, அதன் சிறப்பிடம் எதில் உள்ளது, விளைவுகள் யாவை என்பவற்றைத் தமிழ்நாட்டு மக்களே முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பது புலப்படவில்லை. ஆயினும், பெரியாரது பணிகளின் பெரும்பயன்களை அவர்கள் ஏதோவொரு வகையில் துய்த்துக்கொண்டிருக்கின்றனர். இதனால், பெரியாரியத்தினுடைய பங்களிப்பின் பயன்கள், தமிழ் மக்களுடைய வாழ்க்கை முறைகளோடு கலந்து, வேறுபாடு தெரியாமல் ஒன்றிப்போயிருப்பதைக் காண முடிகிறது.
பெரியாரை ஏற்றுக்கொள்ளாதோராகத் தங்களைக் காட்டிக்கொள்வோர்கூட, பெரியாரியச் செயல்பாட்டு விளைவுகளுக்குள் தங்களை முழுமையாக ஆட்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதைப் பார்க்கலாம். அதாவது, பெரியாரின் தாக்கம், சமூகப் போக்குகளை மாற்றியமைத்து, அதை ஏற்காதவரையும். அதற்குள் உள்ளடக்கிக் கொண்டு விட்டது.
இந்திய அரசியல், சமூக வாழ்வில் பல முனைப்புகளில் தமிழநாடு தனித்து, முன்னிற்பதற்கான அடிப்படையாக இருப்பது பெரியாரின் பங்களிப்புதான் என்பது உறுதியான பின்னர், இதனை ஒன்றிய மக்களின் தெளிவுக்காகவும் விடியலுக்காகவும் பிற மொழி பேசுவோரிடமும் எடுத்துச்செல்வது இன்று இன்றியமையாத கடமையாகவே மாறியிருக்கிறது எனலாம்.
பெரியாரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றுவிட்டன. பெரியார் இறந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. பெரியாரை ஏற்றுக் கொண்டிருக்கின்ற இயக்கங்கள், தமிழ்நாட்டின் ஆட்சியில் கடந்த 58 ஆண்டுகளாக மாற்றின்றி நீடித்து வருகின்றன. இருப்பினும், பெரியாரைத் தமிழர்கள் தங்களுக்குள்ளேயே முடக்கிக்கொண்டுவிட்டார்களோ என்ற வினா இயல்பாகவே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பெரியாரியத்தின் பெரும்பயன் தமிழ்நாட்டைத் தாண்டிச் சென்றிருக்கவேண்டும். இன்றுள்ள நிலைமைகளில் சமூக மறுமலர்ச்சி முன்னிலை பெற்று வருவதைக் காண முடிகிறது. சமூக மாற்றங்களைக் கொண்டுவராமல், முற்போக்கு இயக்கங்கள் வளரவும், வளர்ந்தாலும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ளவும் இயலாது என்ற நிலை தெளிவாகத் தெரிகிறது. பொருளிய வளர்ச்சிக்கு இணையாக அல்லது பொருளிய வளர்ச்சியின் நிலைப்படுதலுக்கு முன்னேற்பாடாக, சமூக மறுமலர்ச்சியின் வேண்டல் அடிப்படையாக அமைந்திருக்கிறது என்பதைப் புறக்கணித்துவிட முடியவில்லை. இதனை, விடுதலைக்குப் பின்னரான 78 ஆண்டு காலங்களின் பட்டறிவு நமக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது.
பெரியாரது கொள்கைகள், இந்திய ஒன்றியத்தில் உள்ள பிற மொழி இனத்தவருக்கும் சென்று சேரவேண்டும் என்றால், அதற்கு முதன்மையான முதல் பணியாக அமைவது அவருடைய அனைத்துப் படைப்புகளையும் கால வரிசையில் தொகுப்பதாகும்.
பெரியார் மறைந்து அய்ம்பது ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரியார் எழுத்துகளும் பேச்சுகளும் கொள்கைகளும் கோட்பாடுகளும் அவர் முன்னெடுத்த முனைப்புகளும் முனை மழுங்காமல் தமிழர்களிடம் நிலைகொண்டிருக்கின்றன என்பதை எவரும் மறுக்கவில்லை. திராவிடர் கழகமும் அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று தனித்தனியே இயங்கிக் கொண்டிருக்கின்ற பல்வேறு இயக்கங்களும், பெரியார் எழுத்துகளையும் பேச்சுக்களையும் தொடர்ந்து தனி நூல்களாகவும் தொகுப்புகளாகவும் வெளியிட்டுக்கொண்டிருப்பதன் வாயிலாகப் பெரியாரின் இன்றைய இருப்பை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய பங்களிப்புகள் குறைத்து மதிப்பிடக்கூடியவனாக இல்லை என்றாலும், பணிகள் இவற்றோடு நிறைவு பெற்றுவிடவில்லை என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது. பெரும் தொகுதிகளாகப் பெரியார் எழுத்துகளும் பேச்சுக்களும் அச்சில் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கின்றன என்பது பாராட்டத்தக்க பணியாகவே அமைந்திருக்கிறது என்று துணிந்து கூறிவிட முடியும்.
மேலும், பெரியாரின் எழுத்துகளும் பேச்சுகளும் பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கணக்கில் வெளியிடப் பட்டுள்ளன; வெளியிடப்பட்டு வருகின்றன. பெரியார் நடத்திய வைக்கம் போர், ஹிந்தி எதிர்ப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு போன்ற பல வகைப்பட்ட போராட்டங்கள் குறித்த விளக்கங்களும் தனித்தனியே நூல் வடிவம் பெற்றுள்ளன. தமிழ்நாடு வரலாற்றை மாற்றியமைக்கக்கூடிய வகையில் பெரியார் நடத்திய மாநாடுகள், வெளியிட்ட அறிக்கைகள் போன்றவற்றின் விவரங்களும் நூல்களில் பதியப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, 1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு’, ‘செங்கல்பட்டு முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு ஒரு வரலாற்றுத் தொகுப்பு’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். பெரியாரின் கொள்கை விளக்க நூல்களாக ஆசிரியர் வீரமணி அவர்கள் எழுதிய ‘பெரியாரியல்’ (5 பகுதிகள்), ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ (7 பகுதிகள்) ஆகியனவும் நமக்குக் கிடைக்கின்றன. தமிழ் மண்ணுக்கு அப்பால் பெரியாரின் செயல்பாடுகளை வெளிக்காட்டும் வகையில் ‘வடநாட்டில் பெரியார்’ (2 பகுதிகள்), ‘அய்ரோப்பாவில் பெரியார்’, ‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’ போன்ற நூல்களும் இருக்கின்றன. பெரியாரைப் பற்றிப் பிற தலைவர்கள், அறிஞர்கள், படைப்பாளர்கள், ஆய்வாளர்கள் எழுதியனவும் வந்துள்ளன.
பெரியாரின் முழுமையான பங்களிப்பினை இவையெல்லாம் பல்வேறு கண்ணோட்டங்களில் தெரியப்படுத்துகின்றன. ஒருவர் எந்தப் பார்வையில் பெரியாரைப் பார்க்க விரும்பினாலும் அவ்வாறு நோக்கத்தக்க அளவில் நூற்றுக்கணக்கான படைப்புகள் நம் கண் முன்னே காத்திருக்கின்றன. எனவே, பெரியார் பற்றிய நூல்களுக்கும் பதிவுகளுக்கும் குறைவில்லை, பஞ்சமில்லை என்று துணிந்து கூற முடியும். இவற்றோடு பெரியார் எழுத்துகளும் பேச்சுகளும் நிறைவு பெற்று விடவில்லை என்பதையும் காண வேண்டியுள்ளது. பெரியாரியத்தின் இருப்பும் வேண்டலும் புரிதலும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு வலுவுடன் மேலும் கொண்டு செல்லப்பட வேண்டும்.
ஆனைமுத்து அய்யா அவர்களின் ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ முதல் முயற்சியாக தேர்ந்தெடுக் கப்பட்ட படைப்புகள் என்ற வகையில் 1974இல் மூன்று தொகுதிகளாக வெளிவந்தன. பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டு இருபது தொகுதிகளாக வெளி வந்திருந்தபோதிலும், அவையும் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்தாம். அடுத்தடுத்துப் பலரது முயற்சிகள் பெரு மளவில் பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் நூல் வடிவில் வெளிக்கொண்டு வந்தன என்றாலும், அவை யாவும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளாகவே அமைந்துவிட்டன.
தாய் அமைப்பு என்ற வகையில் திராவிடர் கழகம் பெரியாருடைய எழுத்துகளையும் பேச்சுகளையும் முழுமையாகக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது வரவேற்கத்தக்கதுதான். ‘பெரியார் களஞ்சியம்’ என்ற பொதுத் தலைப்பிட்டு, கடவுள் (5 தொகுதிகள்), மதம் (7 தொகுதிகள்), பெண்ணுரிமை (5 தொகுதிகள்), ஜாதி (17 தொகுதிகள்), பகுத்தறிவு (3 தொகுதிகள்), திருக்குறள் – வள்ளுவர் (ஒரு தொகுதி) ஆகிய பொருள்களில் வெளிவந்துள்ள 38 தொகுதிகளும், தனித்தனிக் கால வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. ‘குடிஅரசு’ இதழில் வெளியான படைப்புகள் கால அடிப்படையில் 42 தொகுதிகளாக வந்துள்ளன. இவை யாவற்றையும் ஒன்றிணைத்து, பெரியாருடைய எழுத்துகளும் பேச்சுகளும் அடங்கிய படைப்புகள் யாவும் கால அடிப்படையில் முழுமையாக, பெரியார் படைப்புகள் அல்லது பெரியாரின் தொகுப்பு நூல்கள் அல்லது வேறு ஏதாவது ஒரு பொருத்தமான பெயரில் வெளியிடுவது இன்றைய வேண்டலாகும். பொருள் அடிப்படையில் கால வரிசை என்பது கருத்துகள் அடுத்தடுத்துச் செழுமை பெற்றுவந்ததைக் காட்டுவதாக அமையும் என்பதில் அய்யமில்லைதான். இருப்பினும், அனைத்துப் பொருள்களையும் சேர்த்துக் கால வரிசையில் கொடுக்கும்போது, பெரியாரியலுக்கான அடிப்படைத் தரவுகளாகவே அவை அமைந்து பயன் தரும். ஒரு பொருளோடு தொடர்புள்ள மற்றொரு பொருள் குறித்த ஒப்பீட்டுக்கும் அவை துணையாக அமையும். கருத்துருவாக்கம் செழுமை பெற வெவ்வேறு பொருள்களின் புரிதல்கள் எவ்வாறு அடுத்தடுத்துப் பயனாக அமைந்தன என்பதும் தெளிவாகும்.
பல மொழிகளில் பெரியாரது படைப்புகள் வெளிவரும்போது, அந்தந்த மொழியினரின் புரிதலுக்கும் பயன்பாட்டுக்கும் ஏதுவாகக் கால அளவிலான முழுமைத் தொகுப்புகளே துணையாகும். மார்க்சு, எங்கல்சு, லெனின் போன்றோரது படைப்புகள் தனித்தனியாகப் பொருள் அடிப்படையில் நூல்களாக வந்திருக்கின்றன. அடுத்துத் தேர்வு செய்யப்பட்டவையும் பல தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இருந்தாலும், அவர்களுடைய படைப்புகள் அனைத்தும் முழுமையாகத் தொகுத்துக் கால வரிசையில் பல தொகுதிகளாக கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
இந்திய ஒன்றியத்தில் காந்தி, அம்பேத்கர் ஆகிய இருவருடைய படைப்புகளும் கால வரிசையில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுப் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் பெரும் பொருள் நல்கையுடன் காந்தியின் படைப்புகள் பல தொகுதிகளாக வெவ்வேறு மொழிகளில் கொண்டு வரப்பட்டன. காந்தி எழுத்துகளின் தாக்கங்களும் எதிர்பார்ப்புகளும் இன்றைய காலச் சூழலில் பெருமளவிலான வரவேற்பினைப் பெறவில்லை என்பதால் தொடக்க முயற்சிகளுக்குப் பின்னர் அடுத்தடுத்த பதிப்புகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டப்படவில்லை. அம்பேத்கரை பொறுத்தவரை, அவரது நூற்றாண்டினையொட்டி அப்போது தலைமை அமைச்சராக இருந்த வி.பி. சிங் அவர்கள் பெரும் பொருளை ஒதுக்கி, ஒன்றியத்தின் பல மொழிகளில் அனைத்துத் தொகுப்புகளும் வெளிவர வாய்ப்பளித்தார்.
தோழர் மாஜினி அவர்களது பொறுப்பில் பலர் இணைந்து அம்பேத்கரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து 37+1 தொகுதிகளாக நியூ செஞ்சுரி நூல் நிறுவனத்தின் சார்பில் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கச் செய்தனர். இவையெல்லாம் விரைவில் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பதையும் மறந்துவிடக்கூடாது. அம்பேத்கர் எழுத்துகளின் வேண்டல் என்பதோடு, குறைந்த விலை என்பதும் விரைவு விற்பனைக்குத் துணையானது.
தற்போது மொழிபெயர்ப்புச் செம்மையுடன் மீண்டும் 10 தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நூறு தொகுதிகளாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் பொருள் ஒதுக்கியுள்ளது பாராட்டத் தக்கதாகும். 300 பக்கங்கள் என்ற வரையறையுடன் 100 ரூபாய் விலையில் இவை விற்கப்படுகின்றன. தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சித் துறையும் நியூ செஞ்சுரி நூல் நிறுவனமும் இணைந்து இப்பணிகளை மேற்கொண்டுள்ளன. அரசு உதவி இல்லையெனில் இந்த தொகுப்பு நூல்கள் ஒவ்வொன்றின் விலையும் ரூ.300 முதல் 400 வரை இருந்திருக்கும். தமிழ்நாடு அரசின் உதவியினாலேயே மிகக் குறைந்த விலையில் நூல்களைத் தர முடிகிறது.
– தொடரும்