அயோத்தி ராமன் கோயில் பாதுகாப்பிற்கு ரூபாய் 38 கோடியில் திட்டமாம்
லக்னோ, ஜூன் 29 – அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் பாதுகாப்பிற்காக ரூ.38 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நிர்மான் நிகாமிடம் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கட்டப்பட்டு வரும் ராமர் நினைவுச் சின்னத்தின் பாதுகாப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் விவரிக்கும் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
வரும் நவம்பர் மாதத்துக்குள் பாது காப்புப் பணிகள் அனைத்தையும் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற் கான முதல்கட்ட திட்டம் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நிலம், நீர், காற்று போன்ற இயற்கை அச்சுறுத்தல்களிலிருந்து ராமர் கோயிலை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வுள்ளது.
நகர நிர்வாகம் கோயிலை வெளியில் இருந்துபாதுகாக்கும். உள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை மேற்பார்வையிடும். கோயிலுக்கு வெளியே துணை ராணுவப் படையினர் நிறுத்தப்படு வார்கள்.
சிசிடிவிகேமராக்கள் மற்றும் பிற நவீன கருவிகள் கோயில் பாதுகாப்புக்கு நிறுவப்படும். அனைத்து சிசிடிவி கேமராக்களையும் கண்காணிக்க ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மய்யம் உருவாக்கப்படும்.
இதற்கான திட்டம் அரசிடம் தெரிவிக்கப்பட்டு ரூ.38 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உள் கட்டமைப்பை உருவாக்க மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக மூத்த அரசு அதிகாரி கவுரவ் தியால் தெரிவித்துள்ளார்.