திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணியின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாணவர் கழகக் கூட்டத்தில் ஏழு தீர்மானங்களும், இளைஞரணி கூட்டத்தில் ஏழு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இரு அமைப்புகளும் ஓர் அடிப்படையான கருத்தை முன் நிறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.
மூட நம்பிக்கை என்பது மனித வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடைக் கல்லாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அந்நோய் பரவுமேயானால், அவர்களின் தனிப்பட்ட எதிர்காலத்தை மட்டுமல்ல; சமுதாயத்தின் எதிர்காலத்தையே இருள் குகையில் மூழ்கடித்து விடும்.
இந்தச் சூழலில் இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) பிரிவின்படி அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது, கேள்வி கேட்கும் உணர்வு, சமூக சீர்திருத்தம், மனிதநேயம் இவற்றை வளர்த்தெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என்ற முடிவு முக்கியமானது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ‘திராவிட மாடல்’ அரசு நூலகங்களை ஏராளமாகத் திறந்து வைப்பது சிறப்பான திட்டமாகும்.
மாணவர்களிடம் பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டவல்ல நூல்களுக்குப் பஞ்சமில்லை. ஏடுகளைப் பொறுத்தவரை இதில் ‘விடுதலை’ முதலிடத்தில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். மாதம் இரு முறை ‘உண்மை’ இதழ். மாதம் ஒரு முறை வெளிவரும் ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ ஆங்கில இதழ், சிறுவர் சிறுமிகளுக்குப் ‘பெரியார் பிஞ்சு’ இதழ்கள் வெளி வந்து கொண்டுள்ளன. இவற்றை அனைத்து நூல்கங்களிலும் இடம் பெறும் வண்ணம் ஆவன செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துவது, வியாபார நோக்கத்துக்காக அல்ல; பகுத்தறிவுக் கருத்துகளைக் கொண்டு செல்லுவதற்காகத்தான்.
மூடநம்பிக்கையின் காரணமாக அறிவும், காலமும், பொருளும், தன்னம்பிக்கையும் சூறையாடப்படுகின்றன. மதக் காரணங்களுக்காக, சடங்குகளுக்காக ஆண்டு ஒன்றுக்கு 180 நாள்கள் வீண்டிக்கப்படுவதாக ஒரு தகவல் கூறப்படுகிறது. இழந்த பணத்தைக்கூட ஈட்டி விடலாம்; ஆனால், காலத்தை இழந்தால் அதனை மீண்டும் மீட்டெடுப்பது என்பது இயலாத ஒன்றாகும்.
அய்.அய்.டி.யின் இயக்குநராக இருப்பவர்கூட மாட்டு மூத்திரத்தைக் குடித்தால் நோய் தீரும் என்று சொல்லும் அளவுக்கு – படிப்புக்கும், அறிவுக்கும் இடைவெளி வெகு தூரம் என்பது விளங்கிடவில்லையா?
கும்பமேளா என்ற பெயரால் எத்தனைக் கோடி மக்கள் புண்ணிய நதி என்று கூறி அசுத்த நீரில் முழுக்குப் போடுகிறார்கள். கிருமிகள் நீரின் மூலம் பரவுவது அதிகம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் அரசே இந்தக் கும்பமேளா பற்றி, வசீகரமாகப் பிரச்சாரம் செய்வதும், இதனைப் பயன்படுத்திப் பணம் பண்ணுவதும் எவ்வளவுக் கொடுமை!
இந்தக் கும்பமேளாவில் மரணம் அடைந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன.
இந்த நிலையில் மாணவர் கழகத்தினரும், இளைஞரணியினரும் துண்டறிக்கைகள் மூலமும், சுவர் எழுத்து மூலமும், பிரச்சாரக் கூட்டங்கள் மூலமும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் செய்வது என்ற முடிவு வரவேற்கத்தக்கதே!
மற்றொரு முக்கிய தீர்மானம், சமூகநீதிக்கு எதிராக ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் சட்டங்களும், நடவடிக்கைகளும் பற்றியதாகும். ஜாதியின் காரணமாகக் கல்வி மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் கண்களைத் திறந்து விட்டதிலும், கை கொடுத்துத் தூக்கி விட்டதிலும் இடஒதுக்கீட்டிற்கு முக்கிய பங்களிப்பு உண்டு.
இந்த இடஒதுக்கீட்டின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் கல்விக் கண்ணொளி பெற்று எழுந்து நடமாடும் நிலையில், நேரடியாக இவற்றில் கை வைக்க முடியாது என்ற நிலையில் பார்ப்பனீயத்துக்கே உரித்தான நயவஞ்சகத் தன்மையோடு ‘நீட்’ என்றும், பொருளாதார அளவுகோல் (EWS) என்றும் கொல்லைப்புற வழியைத் தேர்ந்தெடுத்து வீழ்த்தி வருகிறார்கள்.
குறிப்பிட்ட கல்வியில், துறைகளில் இடஒதுக்கீடு கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தி வருகிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள்.
இவற்றை முறியடிக்காவிட்டால் மீண்டும் பார்ப்பனரல்லாத மக்கள் பார்ப்பனீய ஆதிக்கம் என்ற யானையின் காலில் மிதிபட்டு நசுங்க வேண்டிய அவல நிலைதான் ஏற்படும் என்பதில் அய்யமில்லை.
இந்த நிலையில்தான் சென்னையில் ஞாயிறன்று நடைபெற்ற திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடலில் வரும் 20ஆம் தேதி நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் இளைஞரணி தோழர்களும், மகளிரும் பங்கேற்கவும் முடிவு செய்துள்ளனர். இன்னும் சொல்லப் போனால் கட்சிகளுக்கு, மதங்களுக்கு, ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் பெற்றோர்கள் கூடப் பங்கு கொள்ள வேண்டும்.
தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் சூறையாடப்படும் ஆபத்திலிருந்து அவர்களைக் காக்கும் கடமையும், அக்கறையும் அவர்களுக்கு உண்டல்லவா!
நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கட்டும்! நடக்கட்டும்!! ஒன்றிய அரசின் முடிவுகளை மண் மூடிப் போகச் செய்யட்டும்! செய்யட்டும்!!