புத்தர் தொடங்கிய அறிவுப் புரட்சியை 20ஆம் நூற்றாண்டில் தொடர்ந்தவர், தந்தை பெரியார்!
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு பாடம் நடத்தினார்!
தென்காசி, ஜூன் 29, குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில், 44 ஆம் ஆண்டு தொடக்க விழாவைத் தொடர்ந்து, மற்ற வகுப்புகள் நடந்தன.தென்காசி மாவட்டம் குற்றாலம் தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள வீகேயென் கூடுதல் கட்டட அரங்கத்தில், 28.06.2023 அன்று, காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை 7 வகுப்புகள் நடைபெற்றன. தொடக்க விழாவுக்குப் பிறகு திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், ‘பெரியார் ஓர் அறிமுகம்’ எனும் தலைப்பில் பாடம் நடத்திய பின், ‘ புராண இதிகாச புரட்டுகள்’ எனும் தலைப்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், ‘நீட் தேர்வு – தேசிய கல்விக் கொள்கை’ எனும் தலைப்பில் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், ‘சமூக நீதி வரலாறு’ எனும் தலைப்பில் கழக வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, ‘ தமிழர் – திராவிடர் – ஆரியர்’ எனும் தலைப்பில் பேராசிரியர் ப.காளிமுத்து, ‘ நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கம்’ எனும் தலைப்பில் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு ஆகியோர் பாடம் நடத்தினர். முதல் நாளின் இறுதி வகுப்பாக ‘பெரியார்’ திரைப்படம் திரையிடப்பட்டது.
முதல் வகுப்பான ‘ பெரியார் ஓர் அறிமுகம்’ எனும் தலைப்பில் வகுப்பு எடுத்த துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பள்ளிப் பருவத்தில் ஈ. வெ. ராமசாமி ஆகிய பெரியார், தனது பகுத்தறிவை எப்படி பயன்படுத்தினார் என்ற வரலாற்றை சுவையுடன் எடுத்துரைத்து, அதன் தொடர்ச்சியாக அவர் படைத்த புதிய வரலாற்றை மாணவர்களுக்கு கற்றுத் தந்தார்
அதைத் தொடர்ந்து பாடம் நடத்திய, முனைவர் துரை. சந்திரசேகரன், புராண இதிகாச புரட்டுகள் பற்றிய, தந்தை பெரியார் சிந்தனைகளை கற்றுக்கொடுத்தார். புராணங்கள் எத்தனை? அவதாரங்கள் எத்தனை? அவதாரங்கள் மொத்தமும் திராவிடர்களை கொல்வதற்காகவே எடுக்கப்பட்டது ஏன்? தந்தை பெரியார் புராண புரட்டுகளை இமாலயப் புரட்டு என்று குறிப்பிட்டது ஏன்? என்பன போன்ற அரிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பாடம் நடத்தினார்.
மூன்றாம் வகுப்பை நடத்திய பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், நீட் தேர்வு, புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றி புரியும் படியாக பாடம் நடத்தினார். என்னென்ன காரணங்களைச் சொல்லி இந்த நீட் தேர்வை கொண்டு வந்தார்களோ, அவையெல்லாம் நிறைவேற்றப்படவில்லை என்றும், மருத்துவர் கல்வி பயலுவதற்கு முன்பை விட இப்போது அதிகமாக செலவாகிறது என்றும், அதனால் மருத்துவக் கல்வி சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகி இருக்கிறது என்றும் விளக்கினார். இந்தத் தேர்வுகள் எல்லாம், திறன்களை மேம்படுத்துவதை பற்றி பேசுகின்றனவேத் தவிர, சிந்திக்கும் திறனை வளர்க்கவில்லை. ஆகவே இவை மிகவும் ஆபத்தானவை. தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவ கட்ட மைப்பை சிதைக்கக் கூடியவை என்பதை புரிய வைத்தார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, சமூக நீதி வரலாற்றை வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி காணொலிக் காட்சிகள் மூலமாக, தரவுகளுடன் விளக்கினார். சமத்துவம் வேறு சமூக நீதி வேறு என்பதை படக்காட்சி மூலம் பளிச்சென்று புரிய வைத்தார். தமிழ்நாட்டில் 69 சதவிகித விழுக்காடு இட ஒதுக்கீட்டின் விகிதாச்சாரத்தை விளக்கினார். இந்திய அளவில், தமிழ்நாட்டு அளவில் இட ஒதுக்கீட்டு வரலாற்றை சுருக்கமாக கூறினார். தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் சமூக நீதிதான் இன்றைக்கு ‘திராவிட மாடல்’ எனும் பெயரில் பேசு பொருளாக இருக்கிறது என்பதை விவரித்தார்.
அய்ந்தாம் வகுப்பை நடத்திய பேராசிரியர் காளிமுத்து, நாகர்கள் என்பது திராவிடர்கள் என்பதற்கு இன்னொரு பெயர் என்று அண்ணல் அம்பேத்கர் தனது நூலில் பதிவு செய்துள்ளதை முதலில் சுட்டிக்காட்டினார். அதற்கான ஆதாரங்களாக இந்தியா முழுவதிலும் உள்ள வாழ்விடங்களை எடுத்துரைத்தார். தென்னிந்திய மொழிகளில் இருக்கும் சமஸ்கிருதத்தை நீக்கி விட்டால், தூய்மையான செம்மொழியான தமிழ் கிடைக்கும் என்பதை எடுத்துரைத்தார். தமிழன் என்பதற்கு என்ன இலக்கணம்? திராவிடம் என்ற பெயரை, ‘ திரு + இடம் = திருவிடம்; திராவிடம்’ என்று பரிணாமம் பெற்றதாக, தந்தை பெரியாரின் ஆய்வை சுட்டிக் காட்டினார்.
ஆறாம் வகுப்பாக, செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, ‘ புத்தர் தொடங்கிய அறிவுப் புரட்சியை 20ஆம் நூற்றாண்டில் பெரியார் தொடர்ந்தார் என்று தொடங்கினார். புள்ளி விவரங்களை அடுக்காமல், வரலாற்றை ஒரு கதை போலச் சொன்னார். நூல்கள் எல்லாம் பெண்களை தாழ்த்தும் என்று புரட்சி கவிஞர் பாடியதைச் சொல்லி எல்லா மதங்களும் அப்படித்தான் என்றார். சாஸ்திரப்படி சட்டப்படி எல்லாரும் சூத்திரர் தான் என்பதற்குத் தரவுகள் தந்தார். பள்ளிக்கூடங்களில் யாரும் ஆசிரியராக இல்லை எல்லோரும் வாத்தியாராகத்தான் இருக்கிறார்கள் என்ற தந்தை பெரியார் வருந்தியதற்கான காரணத்தை விளக்கினார். தொடர்ந்து நீதிக்கட்சி வரலாற்றில் தொடங்கி சுயமரியாதை இயக்க வரலாற்றில் நிறைவு செய்தார். பெரியாரியல் பயிற்சிப் பட்டறை யின் முதல் நாளில் இறுதி வகுப்பாக ‘பெரியார்’ திரைப்படம் திரையிடப்பட்டது.
நிகழ்வில், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் கே. டி. சி. குருசாமி, கழகக் காப்பாளர்கள் மா. பால்ராஜேந்திரம், இல. திருப்பதி, பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா ஜெயக்குமார், கழகக் காப்பாளர் டேவிட் செல்லத்துரை, மாவட்டச் செயலாளர் வே. முருகன், ஊடகப் பிரிவின் மாநில தலைவர் அழகிரிசாமி, பேராசிரியர் திருநீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.