திராவிட மாணவர் கழக மாநிலக் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட ஏழு தீர்மானங்கள்

viduthalai
6 Min Read

சென்னை, மே 11 தேசிய கல்வி ஒழிப்பு, ‘நீட்’ தேர்வி லிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு, மாணவர்கள் மத்தியில் பரவிவரும் போதை ஒழிப்பு, ஜாதி-மத தாக்கத்திலிருந்து மாணவர்களை விடுவிப்பது உள்பட இக்கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

11.05.2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற  திராவிட மாணவர் கழக மாநிலக் கலந்துரை யாடல் கூட்டத்தில் முன்மொழியப்படும் தீர்மானங்கள்:

முன்மொழிந்தவர்: ஆ.அறிவுச்சுடர்

(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தீர்மானம் எண் 1:

தமிழர் தலைவரின் அளப்பரிய உழைப்புக்கு நன்றி!

நீட், தேசியக் கல்விக் கொள்கை, விஸ்வகர்மா யோஜனா என்று தொடர்ந்து சமூகநீதியைச் சவக்குழிக்கு அனுப்ப முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொடுஞ்செயல்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு, அதற்கெதிரான அணியைத் திரட்டி, விழிப்புணர் வூட்டி, இந்தப் பாதிப்புகள் தமிழ்நாட்டு மாணவர்களை அண்டாமல் காத்து வரும் தமிழர் தலைவரின் அளப்பரிய உழைப்புக்குத் திராவிட மாணவர் கழகம் தனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறது. தந்தை பெரியாரின் அடியொற்றி, 80 ஆண்டுகளுக்கும் மேலான பொது வாழ்க்கை, 60 ஆண்டுகளுக்கும் மேலான விடுதலை ஆசிரியப் பணி, 48 ஆண்டுகளாகத் தொடரும் இயக்கத் தலைமை ஆகியவற்றால், தமிழ்நாடும், இந்தியாவெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற்றுள்ள இட ஒதுக்கீடும், சமூகநீதி தொடர்பான விழிப்புணர்வும் வரலாற்றில் என்றும் நிலைக்கக் கூடியவை ஆகும். தொடரும் சவால்களை எதிர்கொள்ள தமிழர் தலைவரின் ஆணை ஏற்று, திராவிட மாணவர் கழகத்தின் செயல் பாடுகளைத் தீவிரமாக்கிட உழைப்பது என்று இக் கூட்டம் உறுதியேற்கிறது.

முன்மொழிந்தவர்: செ.பெ.தொண்டறம்

(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தீர்மானம் எண் 2:

மாநில உரிமை மீட்பு
தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டு

தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையை மறைமுகமாகக் கட்டுப்படுத்த முயன்ற தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் மூலம் தடுத்து, தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும், சமூகநீதியையும், பல்கலைக்கழகங்களின் உரிமையையும் மட்டுமல்லாமல், இந்திய மாநிலங்கள் அனைத்தின் உரிமையையும் மீட்டுள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு திராவிட மாணவர் கழகம் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

முன்மொழிந்தவர்: த.சிவபாரதி

(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தீர்மானம் எண் 3:

‘விடுதலை’, பகுத்தறிவு ஏடுகளை
பள்ளி, நூலகங்களில் இடம் பெறச் செய்க!

தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களில் சமூகநீதியும், அறிவியல் மனப்பான்மையும் தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டியுள்ளார். இவற்றையே மூச்சாகக் கொண்டு, கடந்த 90 ஆண்டுகளாக வெளிவரும் ‘விடுதலை’ நாளேட்டையும், ‘உண்மை’, ‘The Modern Rationalist’, ‘பெரியார் பிஞ்சு’ ஏடுகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கொண்டு செல்லுதல் இத்திசையில் பெரும் பயனை விளைவிக்கக் கூடியதாகும். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில், அனைத்துப் பள்ளிகளிலும், நூலகங்களிலும் இவ்வேடுகள் கிடைக்கச் செய்ய வேண்டுமென இக் கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

முன்மொழிந்தவர்: சு.ச.திராவிடச் செல்வன்

(சட்டக்கல்லூரி அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)

தீர்மானம் எண் 4:

2025-–2026 ஆம் ஆண்டுக்கான
திராவிட மாணவர் கழகத்தின் செயல் திட்டங்கள்:

(i) திராவிட மாணவர் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி களில் துண்டறிக்கை பிரச்சாரம் மேற்கொள்வது.

(ii) அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி, பள்ளி, கல்வி நிலையங்கள் அருகில் திராவிட மாணவர் கழகத்தில் இணைய அழைப்பு விடுத்து “JOIN DSF” சுவர் எழுத்து பிரச்சாரம் செய்வது.

(iii) கல்லூரி மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தை நடத்துவது.

(iv) திராவிட மாணவர் கழக உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது.

(v) அனைத்து மாவட்டத்திலும் திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களுக்குச் சமூக ஊடகப் பயிற்சி அளிப்பது.

(vi) உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை’ நாளிதழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் விதமாக PDF மூலமாக மாணவர்கள் மத்தியில் அனுப்பி பிரச்சாரம் செய்வது.

(vii) 1925-2025 நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்க வரலாறு, குடிஅரசு இதழ் வரலாறு ஆகிய இரு பொருளைக் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கருத்தரங்கம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்துவது.

முன்மொழிந்தவர்: ம.சூர்யா

(கோபி மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர்)

தீர்மானம் எண் 5:

போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம்

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கவனத்தைச் சிதைத்து, வாழ்க்கையை அழிக்கும் பல்வேறு போதைகள் நம்மைச் சூழ்ந்திருப்பதை இக் கூட்டம் மிகுந்த கவலையுடன் கவனத்தில் கொள்கிறது. மதம், ஜாதி, பதவி, சினிமா, சமூக ஊடகம், புகை, மது, மருந்து போதைகள் மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி வருகின்றன. திராவிட மாணவர் கழகம் போதை ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் முன்னெடுத்துள்ளது.

மனிதருக்கு இருக்க வேண்டிய அடிப்படைக் குணமான சுயமரியாதையை இல்லாதொழிப்பதில் போதைப் பழக்கங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நடக்கும் இக் காலகட்டத்தில், நம் மாணவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படாமல் காக்க, மீண்டும் அதே போன்று, பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மாணவர்களை ஈர்க்கக் கூடிய வகையில் கல்வி நிலையங்களிலும், மாணவர்கள் பெரிதும் வசிக்கும் இடங்களிலும் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள், பல்துறைப் போட்டிகள், வழிகாட்டல் முகாம்கள், துண்டறிக்கை, குறுங்காணொலிகள், திரையிடல்கள் ஆகியவற்றின் மூலம் தனித்துவத்துடன் ஆண்டு முழுவதும் போதை ஒழிப்புப் பிரச்சாரத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சாரத்தில் மாணவர் கழகத் தோழர்கள் அதிக அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வரவேண்டுமென்று இக் கூட்டம் அழைப்புவிடுக்கிறது.

முன்மொழிந்தவர்: சீ.தேவராஜ் பாண்டியன்

(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தீர்மானம் எண் 6:

மாணவர்களிடம் ஜாதி, மத அமைப்புகள் ஊடுருவலா? நடவடிக்கை தேவை!

ஜாதி, மத உணர்வைத் தூண்டும் விதமாகச் செயல்படும் அமைப்புகளை எக் காரணம் கொண்டும் மாணவர்களை அணுகவிடாமல் தடுப்பதும், மாணவர்களிடம் இத்தகைய உணர்வுகள் தலையெடுக் காமல் விழிப்புணர்வூட்டுவதும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டிய பணிகளாகும்.  சமூகநீதி, சமத்துவம், சமூக நல்லிணக்கத்துக்காக உழைக்கும் அனைத்து அமைப்புகளும், அரசும், குறிப்பாக காவல்துறையும், கல்வித்துறையும் இப் பிரச்சினையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இக் கூட்டம் அழைப்பு விடுக்கிறது.

முன்மொழிந்தவர்: ச.சஞ்சய்

(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தீர்மானம் எண் 7:

தமிழர் தலைவரின் ஆணையேற்போம்!

போராட்டக் களம் காண்போம்!

நீட் தேர்வால் தற்கொலைகள் தொடர்வதும், மாணவர்களும், பெற்றோரும் அலைக்கழிக்கப்படுவதும் நாளும் தொடர்கதையாகி வருகிறது. மருத்துவக் கல்வியையும், கட்டமைப்பையும் சிதைக்கும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கும் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை நிறைவேற்றி அனுப்பப்பட்டும், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மாநில உரிமைக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் விரோதமானவையாகும். நீட் தேர்வு ஒழிப்புப் போர் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இறுதி வெற்றி கிட்டும் வரை சற்றும் ஓயாமல், அயராமல் போராடி, நீட்டை ஒழித்து, சமூகநீதியையும் மாநில உரிமையையும் மீட்க தமிழர் தலைவரின் ஆணையேற்க இக் கூட்டம் உறுதி பூணுகிறது.

மும்மொழிக் கொள்கையையும், தேசியக் கல்விக் கொள்கையையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு திணிப்பதைக் கண்டித்து, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் மே 20 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *