சென்னை, மே 11- ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானின் ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும், வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான மக்கள் பேரணியை நடத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நமது ஆயுதப்படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் – இந்தியா மோதல் போக்கு
ஒன்றிய அரசு அவசர ஆலோசனை
புதுடில்லி, மே 11- மோதல் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நேற்று (10.5.2025) இரவு திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட் டது. இதனை மத்திய வெளி யுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதி செய்தார்.
இதற்கிடையே பாகிஸ்தான் எல்லையையொட்டிய காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மற்றும் அரியானா மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினார்.