‘உலகம் பெரியார் மயம், பெரியார் உலக மயம்’ என்கிற கருத்தை வலியுறுத்துகிற வகையில் கடந்த மார்ச் மாதம், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி, திராவிடர் கழக கொள்கை பரப்புச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோர், ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் நடத்திய பன்னாட்டு மகளிர் நாள் விழாவில் கலந்துகொள்ள, ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்தார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு முதல்முறையாக வருகைதந்த ஆசிரியர் வீரமணியையும், வழக்குரைஞர் அருள்மொழியையும் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் டாக்டர். அண்ணாமலை மகிழ்நன், துணைத் தலைவர் டாக்டர் ஆரூண் உள்ளிட்டோர் சிட்னி விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஒரு நாள் ஓய்விற்குப் பிறகு, ஆசிரியர் வீரமணி, சிட்னி நகரைச் சுற்றிப் பார்த்தார். இரவு உணவுக்கு சிட்னி பரமாட்டாவிலுள்ள அடையார் ஆனந்தபவன் உணவு விடுதிக்கு சென்றபொழுது, சிட்னி அடையார் ஆனந்த பவனின் பங்குதாரர் ரஜிந்த், ஆசிரியருக்கும், வழக்குரைஞர் அருள்மொழிக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
மறுநாள் ஆஸ்திரேலிய அரசின் பல்லினப் பண்பாட்டு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான எஸ்பிஎஸ் தமிழ்ப் பிரிவிற்காக (Special Broadcasting Service) தலைமை செய்தி ஆசிரியர் றெய்சல், செய்தி ஆசிரியர் குலசேகரம் சஞ்சயன் ஆகியோர் பேட்டி கண்டார்கள். பிறிதொரு நாள் வழக்குரைஞர் அருள்மொழியை பேட்டி கண்டார்கள். ஆசிரியர் வீரமணி ஏறத்தாழ 55 நிமிடங்களுக்கும் மேலாக பதிலளித்தார். அந்தப் பேட்டியிலிருந்து இரண்டு கேள்விகளுக்கான பதில்கள்.
சாரங்கபாணி எப்படி வீரமணியானார்?
கொள்கை வாரிசாக ஆனதால், சாரங்கபாணி, வீரமணியானேன் என்னுடைய ஆசிரியர் திராவிடமணி தான் என்னுடைய 10ஆவது வயதில் இந்தக் கொள்கையில் ஈடுபடுத்தினார். அவர் எனக்கு கல்வி போதித்ததோடு சேர்த்து இந்தக் கொள்கையையும் போதித்தார். அப்படி வந்தபோது, இந்தக் கொள்கையில் பகுத்தறிவு உணர்வு, மொழி உணர்வு, பண்பாடு இவையெல்லாம் இயைந்து வந்த காரணத்தினால், சாரங்கபாணி என்ற என்னுடைய பெயரை வீரமணி என்று மாற்றினார். 1943ஆம் ஆண்டு கடலூரில், பொது மேடையில் ஏற்றிப் பேச வைத்தார்.
தமிழகத்தில் ஆணவக் கொலை?
சாலைகளில் ஏராளமான கார்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், செய்தி எப்படி வருகிறது? விபத்திற்குள்ளான கார்கள் மட்டும்தான் செய்திகளாகின்றன. அதுபோன்று, ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்கள், மத மறுப்புத் திருமணங்கள், பதிவுத் திருமணங்கள், புரோகித மறுப்புத் திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. அவற்றையெல்லாம் விளம்பரப்படுத்த முடியாது. அதையெல்லாம் விளம்பரப்படுத்துவதும் இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆணவக் கொலைகள் நடைபெறுவது என்பது உண்மை. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், ஒட்டு மொத்தமான விகிதாச்சாரத்தை எடுத்துப் பார்த்தீர்களேயானால், இதுபோன்று நடப்பது குறைவு என்பது தெரியவரும்.
அடுத்ததாக, சிட்னியில் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் விழாவில், ஆஸ்திரேலிய கிரீன்ஸ் கட்சியின் மேனாள் செனெட்டர் லீ ரியன்னான், ஆஸ்திரேலிய லேபர் கட்சி செயற்பாட்டாளர் துர்க்கா ஓவன், வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோரின் உரைகளை அடுத்து ஆசிரியர் வீரமணி, ‘இன்னமும் இந்தச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயம் தான். பெண்ணியம் என்று சொல்வதைக்கூட, தந்தை பெரியார் ஏற்பதில்லை. பெண்ணுரிமை என்பதைவிட, ஆண் உரிமை என்பதைவிட, மனித உரிமை என்று சொல்வதுதான் சரியானது. நல்ல வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, இந்த மேடையில் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு மகளிர் நாள், அவர்கள் பேசுவதுதான் நியாயமானதாகும். பிறப்பதற்கே அவர்கள் போராடவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள். கருவில் பார்த்துவிட்டு, பெண் குழந்தை என்றால், அழித்துவிடுகிறார்கள்.
இந்தியாவில், வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன் இருந்த சூழல் வேறு. பெண் குழந்தை பிறந்தால், அதனுடைய கழுத்தைத் திருகி, கங்கையில் எறிந்தார்கள். வங்காளத்தில் பயிர்கள் நன்றாக வளரவேண்டும் என்று சொன்னால், பெண் குழந்தையை நரபலி கொடுத்தால்தான் பயிர்கள் நன்றாக வளரும் என்ற நிலை இருந்தது. இன்னமும்கூட பெண் குழந்தை பிறந்தால் அதற்கு வரவேற்பு கிடையாது. இரண்டாந்தர குடிமக்கள் மட்டுமல்ல, நாலாந்தர குடிமக்களை விட, மிருகங்களை விடக் கேவலமாக நடத்துகிறார்கள்” என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியரை 40 ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாணத்தில் பேட்டி கண்டு இலங்கை தினகரன் பத்திரிகையில் கட்டுரை வெளியிட்ட சிவாகைலாசம் சுந்தரதாஸ் என்ற ஈழப் பத்திரிகையாளர் சந்தித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.
சிட்னி நிகழ்ச்சி முடிந்த மறுநாள், ஆசிரியர் வீரமணியும், வழக்குரைஞர் அருள்மொழியும், ப்ரிஸ்பேன் நகரை வந்தடைந்தார்கள். ப்ரிஸ்பேன் பெரியார் அம்பேத்கார் சிந்தனை வட்டத்தின் பொறுப்பாளர்கள் முகுந்தாரஜ், டாக்டர் ப்ரதீப், பார்த்தீபன், கார்த்திகேயன், ஜகார்த்திக் குமார். கவிஞர் ரவிச்சந்திரன், மெல்பேர்ன் நந்தகுமார் உள்ளிட்ட தோழர்கள் வரவேற்றார்கள். அன்று மாலை பிரிஸ்பேன் நகரில் வழக்குரைஞர் அருள்மொழியும், ஆசிரியரும் உரையாற்றினார்கள்.
மறுநாள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடந்த பெரியாரிய அம்பேத்கரிய குடும்ப விழாவில் கலந்துகொண்டு விட்டு அதற்கடுத்த நான், ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவிற்கு வந்தனர்.
கான்பெர்ராவில், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் பொதுச் செயலாளர் சுமதி விஜயகுமார், மேனாள் திராவிடர் கழகப் பொருளாளர் தஞ்சை மா.குப்புசாமியின் பேரன் அறிவுமணி உள்ளிட்டோர் வரவேற்றார்கள். ஆசிரியரும், அருள்மொழியும் கான்பெர்ராவில் ஆஸ்தி ரேலியப் பாராளுமன்றத்தை சுற்றிப் பார்த்தார்கள். பின்னர் மெல்பேர்ன் நகருக்கு வந்துசேர்ந்தனர்.
மெல்பேர்னில், பன்னாட்டு மகளிர் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆஸ்திரேலியப் பாராளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர் மிஷெல் ஆனந்தராஜா, ஆஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர். கரீனா கார்லேண்ட் மற்றும் ஜான் முலாஹி ஆகியோர் சுலந்து கொண்டார்கள்.
மெல்பேர்ன் விழாவை ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டப் பொருளாளர் திருமலை நம்பி, செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் பாபு, அரங்க.மூர்த்தி, ராதிகா, தாயுமானவன் பாஸ்கரனார் உள்ளிட்ட தோழர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த விழாவில், வழக்குரைஞர் அருள்மொழியும், ஆசிரியர் வீரமணியும் தமிழிலும், ஆங்கிலத்திலும் உரையாற்றினர்.
ஆசிரியர் உரையில், “பன்னாட்டு மகளிர் உரிமை நாள் நிகழ்ச்சியில் சில சிந்தனைகளை நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த விழாவில், மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில், ஒருவர் ஆண்; இரண்டு பெண் எம்.பி.க்கள். மகளிர் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இது மகளிரின் உரிமைக்காகப் போராடுகின்ற இயக்கத்தின் மிகப்பெரிய வெற்றியாகும்.
அருள்மொழி சொன்னதைப்போல, இந்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழா. இங்கே நம்முடைய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்திலுள்ள மகளிர் உரையாற்றியதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தோம். அருள்மொழிக்கு அறிமுகம் தேவையில்லை. எங்களால் வளர்க்கப்பட்டு, ஆளாகி, மிகப்பெரிய திறமையினால், எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், சிறப்பாக செய்கின்ற எங்களுடைய கொள்கைச் சொத்துகளில் ஒருவர்.
இங்கே நான் வரும்போது எனக்கு 92 வயது. நான் இங்கிருந்து திரும்பிப் போகும்போது, 29 வயது. அதற்குக் காரணம் நீங்கள்தான். இங்கே எல்லோரும், “என்னங்க, இவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்களே, அதற்கு என்ன காரணம்? என்று கேட்கிறார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை, நீங்கள்தான் காரணம்… நீங்கள் என்றால், எல்லா இடங்களிலும் உள்ள நம்முடைய தோழர்கள்தான்.
ஒரு காலத்தில் எங்களை வரவேற்றது பொன்னாடைகள் அல்ல. பெரியாரை வரவேற்றது பொன்னாடைகள் அல்ல, கற்கள்தான். இன்னுங் கேட்டால், பெரியாருடைய இயக்கத்தில், முற்போக்குக் கருத்துகள், புரட்சிகரமான கருத்துகள் என்றால், ஜாதி ஒழிய வேண்டும்; பெண்ணடிமை நீங்கவேண்டும். இந்த இரண்டையும் இணைத்து ஒரே வரியில், ‘பிறவி பேதம் ஒழிக்கப்படவேண்டும்’ என்று பெரியார் சொன்னார். அதுதான், சுயமரியாதை இயக்கத்தினுடைய, மானுட நேயத்தினுடைய முதல் குறிக்கோள்” என்று ஆசிரியர் அறிவுப்பூர்வமான உரையை வழங்கினார். ஆசிரியர் வீரமணி, வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோரின் ஆஸ்திரேலியப் பயணம் மிகப்பெரிய வெற்றிகரமான பயணமாக அமைந்தது.
ஆசிரியர் வீரமணி, வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சிகள்தான் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முதல் திராவிட இயக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து, திராவிட மாடல் அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினையும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், ஏனைய திராவிட இயக்கத் தலைவர்களையும் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவதென ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் உறுதி பூண்டுள்ளது.
நன்றி: ‘நக்கீரன்’ 2025 மே 07-09