“நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய, தனக்காக அல்ல என்பதை நன்றாக உணர்ந்தேன்”
தன் வாழ்விணையர் நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள் இவை. அவர் அப்படி சொன்னதற்குக் காரணம் தான் வாழ்க்கைத் துணையாக மட்டு மல்லாமல் அவர்தம் கொள்கை வழித்துணையாகவும் நாகம்மையார் விளங்கினார் என்பதுதான்.
சேலம் மாவட்டம் தாதம்பட்டி யில் 1885ஆம் ஆண்டு பிறந்தவர் நாகரத்தினம் என்கின்ற நாகம் மையார். தந்தை பெரியாரை மணந்து கொண்டவர்.
1919ஆம் ஆண்டு பெரியார், காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து, காந்தியின் ‘ஒத்துழையாமை இயக்கத்தில்’ தீவிரமாக ஈடுபட்டபோது, ஆடம் பரமிக்க ஆடை, அணிகலன்களை ஒதுக்கி எளிமையை ஏற்றுக்கொண்டார் நாகம்மையார். 1921ஆம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த கள்ளுக்கடை மறியலின் போது ஆங்கிலேய அரசால் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டார். அப்போது நாகம் மையாரும் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் பல பெண்களுடன் சேர்ந்து மறியலைத் தொடர்ந்தனர். அப்போது தந்தை பெரியார் தன் தோப்பில் இருந்த 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி போராட்டத்தைத் தீவிரமாக்கினார். ஆங்கிலேயே அரசு அப்போது 144 தடை உத்தரவில் அதனை மீறிச் சென்ற பெரியார் கைது செய்யப்பட்டார்.
நாகம்மையார் முன்னின்று…
அதன் பின்னர் அந்தப் போராட் டத்தினை நாகம்மையாரும், பெரியா ரின் தங்கை கண்ணம்மாவும் முன் னின்று நடத்தினர். பெண்கள் விடு தலைப் போரில் கலந்துகொண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டது இந்திய வரலாற்றிலேயே அதுதான் முதல்முறை. அரசு விதித்திருந்த 144 தடை உத்தரவை மீறியதால் ஈரோடு நகரம் முழுவதுமே கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மக்களின் எழுச்சியைக் கண்ட அரசு கைது நடவடிக்கையைத் தொடர அஞ்சி, சமரசத்துக்கு முன்வந்தது. மறியல் போராட்டத்தைக் கைவிடுமாறு காந்தியைச் சிலர் வேண்டினார்கள். அதற்கு காந்தி “போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைத்தான் கேட்க வேண்டும்” என்றார்.
ஜாதி மத வேறுபாடுகளை நீக்கவும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கவும் மேடைகளில் முழக்கமிட்டவர் நாகம்மை.
பெண் கல்வியின் இன்றியமை யாமை, ஜாதி மறுப்பு மணம், வித வைகள் மறுமணம், சுயமரியாதைத் திருமணம் குறித்த கருத்துகளைத் தமது பரப்புரையில் வலியுறுத்தினார். 4.12.1923 அன்று திருச்சியில், மாகாண காங்கிரஸ் முதலாவது கமிட்டியில், அனைத்திந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் நாகம்மை. தமிழ்நாட்டில் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் நாகம்மையார் ஆவார். 1924ஆம் ஆண்டு ஏப்ரலில் கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்டம். இந்தப் போராட்டத்தினால் இரண்டு முறை சிறைப்பட்டார் தந்தை பெரியார் அப்போது நாகம்மையார், தமிழ்நாட்டிலிருந்து பெண்களைச் அழைத்துக்கொண்டு ஈரோட்டிலிருந்து வைக்கம் சென்று சேர்ந்தார்.
தமிழ்நாடு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் நாகம்மையாரின் தலைமையில் வைக்கம் போராட்டத்தில் அணி வகுத்து நின்றனர். போராட்டத்தினை முன் னெடுப்பதால் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று அறிந்தும், அதற்கு அஞ்சாமல் துணிவுடன் போராட்டக் களத்தில் நாகம்மையார் உறுதியுடன் நின்றார். பெரியார் சிறை சென்ற காலத்தில் நாகம்மை “குடிஅரசு, ரிவோல்ட்” ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். விருந்தோம்பலில் நாகம்மையாருக்கு இணையானவர் எவருமில்லை என்பார்கள். இதனை பழம்பெரும் சுயமரியாதைக்காரர்கள் பலர் பதிவு செய்துள்ளனர். தம் இல்லத்திற்கு வரும் யாவர்க்கும் இன்முகத்துடனும் இன்சொல்லுடனும் விருந்து படைப் பதைக் கண்டு அனைவரும் நெகிழ் வார்கள்.
”ஒரு சமயம் நானும், பெரியாரும் திருநெல்வேலிக்குப் பிரச்சார நிமித்தம் சென்றுவிட்டு ஈரோட்டுக்கு இரவு 12.30 மணிக்கு வந்தோம். அன்னம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அய்யப்பாட்டுடனே வந்தோம். அப்பொழுது நாகம்மை அம்மையார் அன்புடன் வரவேற்று, உடனே அறுசுவையுடன் அமுது படைத்ததை யான் என்றும் மறவேன்” என்று திரு.வி.க எழுதியிருக்கிறார்.
அருமையான பொருள்
அன்னை நாகம்மையார் தந்தை பெரியாருடன் மலேசியா, சிங்கப்பூர் சென்றுவிட்டு, இந்தியாவிற்குத் திரும்பும்போது, “தங்களுக்கு விருப்பமான, தேவையான மலாய் நாட்டுப் பொருள்கள் எவை” என்று கேட்ட தமிழர்களிடம், “நீங்களெல்லாம் இங்கே சுயமரியாதை இயக்கத்தைப் பாடுபட்டுப் பரப்பியிருக்கிறீர்களே, அதுவே எனக்கு அருமையான பொருள்” என்று உள்ளம் நிறைந்து பாராட்டினாராம் நாகம்மையார். தந்தை பெரியாருக்கும் அவர் கொள்கைக்கும் தொண்டாற்றிய நாகம்மையார் 1933ஆம் ஆண்டு, இதே நாளில் (மே 11) காலமானார்.
நாகம்மையாரின் பெயர் என்றும் நிலைத்திடும் வகையிலும் நாகம்மையின் சமூகப் பணியின் நினைவாகவும் ‘நாகம்மையார் இல்லம்’ என்ற பெயரில், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லம், தந்தை பெரியாரால் 1959ஆம் ஆண்டு திருச்சியில் உருவாக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு தனது பொன் விழாவினை இந்த இல்லம் கொண்டாடி யுள்ளது. இந்த இல்லம் இன்னும் எத்தனையோ பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது.
தியாகத்தையும், சமூகப் பணி யையும் போற்றும் விதமாக, தமிழ்நாடு அரசு பெண்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்காக “பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வித் திட்டம்” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது
இரங்கல்
நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் எழுதிய இரங்கல் கட்டுரையில் சில வரிகள்!
“நாகம்மாள் மறைந்தது, எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல் லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற் றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல் லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவுமே விளங்க வில்லையே!”