ஆசிரியர் விடையளிக்கிறார்

Viduthalai
4 Min Read

கேள்வி 1:  நீட் தேர்வுக்குச் சென்ற மாணவர்களிடம் விரும்பத்தகாத பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைப் பற்றியெல்லாம்  கவலைப்படாத பார்ப்பனர்கள், பார்ப்பன மாணவர்கள் அணிந்திருந்த பூணுலை கழற்றச் சொன்னதற்காக பார்ப்பன அமைப்பினர் மற்றும் இந்து அமைப்பினர் என அனைவரும் தேர்வு மய்யத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது அராஜகப் போக்கு அல்லவா?

– சு.சண்முகம், மணிமங்கலம்.

பதில் 1: தாலிக்கு இல்லாத மதிப்பு பூணூலுக்கு உண்டு என்று காட்டுகிறார்கள் – கவனித்தீர்களா? நம்ம அடிமைகளுக்கும் – அரசியல் கொத்தடிமைகளுக்கும் இதன் பிறகாவது புத்தி வருமா? சந்தேகம்தான். மூன்று சதவீத பார்ப்பனர்கள். அதில் பெண்களுக்கு பூணூல் அணியும் உரிமை மனுதர்மப்படி கிடையாது. எனவே அந்த ஒன்றரை சதவீதம். எப்படி ஆட்சியை ஆட்டி வைக்கிறது  – பார்த்தீர்களா?

‘நீட் தேர்வு’ என்ற நரிகளின் பதுங்குக் குழிக்குள் மாணவ – மாணவிகள் ஜாதி, மத வேறுபாடின்றி மனிதநேயத்தோடு, பண்போடு நடத்தப்பட ஒருபோதும் வாய்ப்பிருக்காது. புரிந்துகொள்வார்களா நம் மக்கள்?

கட்டுரை, ஞாயிறு மலர்

***

கேள்வி 2: 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்க மாநில அரசின் மூலம் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்திப்  பேசியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

– மா.குணசேகரன், மேற்கு தாம்பரம்.

பதில் 2: தவறான வாதத்தை அடிக்கடி கூறுகிறார். ஏற்கெனவே அது தீர்ப்பு (“Res judicata”) கூறப்பட்டு முடிவுற்றது. 9ஆவது அட்டவணைப் பாதுகாப்பு உள்பட உள்ளது. வம்பு, வல்லடி வழக்குகளைப் பெரிதாக எண்ண வேண்டியதில்லை.

69 சதவிகிதம் 30 ஆண்டுகளுக்கும் மேல் நடைமுறையில் உள்ளது. அவருக்கு வரலாறு தெரியாது. அவரது கட்சி 69 சதவிகிதத்தை ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்பதை அவரது தந்தையாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளல் நல்லது!

***

கேள்வி 3: எச்சில் இலையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்த விதித்த தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதைப் புரிந்துகொண்டு மூடநம்பிக்கையாளர்கள் திருந்துவார்களா?

கட்டுரை, ஞாயிறு மலர்

– ஆ.உமாமகேஸ்வரி, செங்கல்பட்டு.

பதில் 3: தீர்ப்பு எழுதி நியாயப்படுத்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முதலில் திருந்துவார்களா என்று கேளுங்கள். 150 ஆண்டு புனிதமாம்; தொடர உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டுமாம் – வழக்கு போடப்பட்டுள்ளதே!

***

கேள்வி 4: தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஏதுவாக, அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியைப் பயன்படுத்தவேண்டும் என்று ‘திராவிட மாடல்’ அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு அரசின் நடவடிக்கைகளை  எளிதாகப் புரிந்துகொள்ள ஏதுவாக இது அமையும் என்பது முக்கனியாய் இனிக்கும் செய்தி அல்லவா?

– பா.அங்காளம்மாள், திருவொற்றியூர்.

பதில் 4: ஆம். இனிக்கும் செய்தியே! பாராட்டுங்கள் ‘திராவிட மாடல்’ அரசினை.

***

கேள்வி 5: தேசிய மனித உரிமை ஆணையக் குழு ஏன் மணிப்பூர் செல்லாமல்  மேற்கு வங்காளத்துக்கு மட்டும் விரைவாக வருகிறது என்றும், மிகக்  கொடுமையான வகுப்புவாதக் கிருமிகளை பா.ஜனதா பரப்பி வருவதாகவும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா குற்றம்சாட்டி உள்ளாரே?

– மு.கவுதமன், பெங்களூரு.

பதில் 5: அது நியாயமான கேள்விதானே!

****

கேள்வி 6: 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சி மீண்டும் தொடர பெண்கள், இளைஞர்கள் – மாணவர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து வாழ்த்தொலி எழுப்பி வாழ்த்துவதை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

– சந்தானலட்சுமி,  கலைஞர் நகர்.

பதில் 6: 2026ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஏற்படவிருக்கும் திமுக அமோக வெற்றிக்கு முந்தைய மணியோசையாகவே பார்க்கிறோம்.

***

கேள்வி 7: ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மணமகள் குடும்பத்தினர் மணமகனுக்கு ரூ.21 கோடி மதிப்பிலான பொருட்களை வாரி வழங்கியுள்ளனரே – இதுபோன்ற வரதட்சணை விஷயங்களில் சட்டப்படி நடவடிக்கை இல்லாதது – ஏன்?

– செல்வி பாபு, செஞ்சி.

பதில் 7: சட்டப்படி நடவடிக்கையாக இத்தகைய அன்பளிப்புகளுக்கு போதிய வரி போடப்பட வேண்டும் – வருவாய் தேடும் மாநில, ஒன்றிய அரசுகள்!

***

கேள்வி 8: பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் களைந்து, ஏழை எளிய மக்களின் ஏற்றத்துக்கு முதற்படியாய் விளங்குகின்ற  ‘முதல்வரின் முகவரித்துறை’ மக்களுக்குக் கிடைத்திட்ட நல்வாய்ப்பு என்று கருதலாமா?

–  நளினி காமராஜ்,  திருவண்ணாமலை.

பதில் 8: நிச்சயமாக! முதல்வரின் முகவரித்துறை மற்ற அரசுத் துறைகளுக்குக்கூட நீண்டால் மக்கள் முழு நிறைவு கொள்வர். எந்தக் கோரிக்கைக்கும் ஒரு மாதத்திற்குள் தீர்வு எட்டப்பட ஒரு தனிச் சட்டமே நிறைவேற்றலாமே! ‘லஞ்சம்’ தானே விடைபெறும். முந்தைய திமுக தேர்தல் அறிக்கையில் இது இடம் பெற்றுள்ளது.

****

கேள்வி 9: அரசமைப்புச் சட்டத்தை அழிக்கத் துடிக்கும் பா.ஜ.க. அரசை எதிர்ப்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழ்நாடு இருப்பதாக காங்கிரஸ் மாநாட்டில் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசியிருப்பது – திராவிட மாடல் ஆட்சி முதுகெலும்புள்ள முதலமைச்சரைப் பெற்றுள்ளது என்று பெருமிதம் அடையலாமா?

– ரேவதி சுதாகர், புதுவை.

பதில் 9: அவர் முதுகெலும்போடு உள்ள முதலமைச்சர் என்பதைத் தாண்டி, பல முதலமைச்சர்களுக்கும் முதுகெலும்பின் முக்கியத்துவத்தை உணரச் செய்து வருகிறார். அதுதான் சரித்திரம்.

***

கேள்வி 10:  சமூகநீதியின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுவிழா நடத்துவதைக்கூட தமிழ்நாட்டிலுள்ள பா.ஜ.க. தலைவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது எதைக் காட்டுகிறது?

– க.மாரியப்பன், மாங்காடு.

பதில் 10: ஒட்டகத்தின் முதுகையோ, நாயின் வாலையோ எவராலும் நிமிர்த்த முடியாது என்பதைக் காட்டுகிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *