நான் முக அறுவை மருத்துவ மேற்படிப்பு முடித்து, அப்பொழுதுதான் குன்னூர் அரசு மருத்துவனையில் சேர்ந்து சிறிது காலம் கழிந்திருந்தது. அந்த மருத்துவமனை அதிகளவு வசதிகள் எதுவுமில்லாத ஒரு சிறிய தாலுகா மருத்துவமனை. இந்த நோயாளி தனலட்சுமிதான் என் முதல் அறுவை மருத்துவ நோயாளி.
முதலில் அவர் பயந்து விட்டார். பிறகு வருவதாகக் கூறிச் சென்று விட்டார். ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. திடீரென ஒரு நாள் தனலட்சுமி என் புற நோயாளிகள் பகுதிக்கு வந்தார். “சார், எனக்கு ஆப்ரேஷன் பண்ணி வாயைத் திறந்து விடுங்கள்” என்று கூறினார். “அன்னிக்கி பயந்து போய் விட்டீர்களே, இப்போழுது தைரியம் வந்துவிட்டதா?” என்று கேட்டேன். “சார், நேற்று என் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும், எனக்கும் சண்டை. அப்போது அந்தப் பெண், ‘உன் திமிருக்குத்தான், இந்த ஆத்தா உன் வாயை மூடிட்டா’ என்று திட்டினாள். அதற்காகவே நான் ஆப்ரேஷன் பண்ணிக் கொண்டு வாயைத் திறந்து அவளிடம் பேசப் போகிறேன்” என்று கூறினார். நானும் மனம் மகிழ்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தேன்.
குன்னூர் மக்களுக்கு நான் நான் ஒரு முக அறுவை மருத்துவன் என்று கூடத் தெரியாத காலக்கட்டம் அது.நோயாளிக்கு அறுவை மருத்துவத்திற்கு முன் சோதனைகள் முடிந்து, அறுவை மருத்துவத்திற்கு முன் சோதனைகள் முடிந்து, அறுவை மருத்துவத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. மிகவும் கடினமான அறுவை மருத்துவம் அது. இரண்டு புறமும் காதின் முன்புறம் செய்ய வேண்டும். முகத்தில் பலவகை நரம்புகளும், நிறைய இரத்தக் குழாய்களும் இருக்கும். அவற்றிக்குப் பாதிப்பு ஏற்படாமல் அந்த மருத்துவம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மயக்க மருந்து கொடுப்பதிலிருந்தே சிக்கல்தான். வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோதான் மயக்க மருந்து குழாயை மூச்சுக் குழாயில் செருகித்தான் மயக்க மருந்தை மயக்குநர் (Anaesthetist) செலுத்துவார்.
வாயைத் திறக்க முடியாத நோயாளிக்கு மயக்க மருந்து குழாயைச் செருகுவது மிகக் கடினம். அதை இதுபோன்ற சிக்கலான நோயாளிக்குச் செலுத்த நவீன கருவிகள் இல்லாத ஒரு சிறிய மருத்வமனை அது. இருக்கின்ற கருவிகளை வைத்து செய்ய வேண்டும் என்ற திட்டமிடலும், துணிவும், மனித நேயமும் (அனைத்தும் தந்தை பெரியார் கற்றுக் கொடுத்த பாடம்!) அந்த அறுவை மருத்துவத்தைச் செய்ய என்னைத் தூண்டியது. ஒரு வழியாக மயக்க மருந்துக் குழாய் நோயாளிக்குச் செலுத்தப்பட்டது.
அறுவை மருத்துவத்தைத் துவக்கினேன். ஏறத்தாழ ஆறு மணி நேரம் அந்த அறுவை மருத்துவம் நடந்தது. மூன்று பாட்டில் இரத்தம் கொடுக்கப்பட்டது. கடைசியில் அந்த பெண்ணுக்கு காதின் இரண்டு புறமும் அறுவை மருத்துவம் செய்யப்பட்டு வாய் திறக்க வைக்கப்பட்டது வெற்றிகரமாக. “ஆத்தா”வால் மூடப்பட்ட வாய்(!). மருத்துவ அறிவியலால் வெற்றிகரமாக திறக்கப்பட்டது. அடுத்த நாள் நோயாளி இயல்பு நிலையை அடைந்தார். மருத்துவமனை ஊழியரிடம் ரூ.50 கொடுத்து ஒரு பிரியாணி வாங்கி வரச் சொல்லி தனலட்சுமியிடம் கொடுக்கச் சொன்னேன். நான் உள் நோயாளிகள் பகுதிச்சுச் “சுற்று”க்கு (ward rounds) சென்றேன். 7 ஆண்டுகள் சாப்பிட முடியாத தனலட்சுமி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் அம்மா கண்ணீரோடு அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும், சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அவசரமாக கையைக் கழுவிக் கொண்டு, கதறலோடு தனலட்சுமியும் அவர் அம்மாவும் என் காலில் விழு வந்தனர். நான் அதைத் தடுத்தேன். அப்பொழுது தனலட்சுமியின் தாயார் கண்ணீரோடு, “சார், நான் கல் உடைக்கும் தொழிலாளியின் மனைவி. இப்பொழுது என் கணவர் இல்லை. செத்துவிட்டார். நாங்கள் கம்மிச்சோலை (குன்னூர் அருகில் உள்ள ஒரு சிறிய குடியிருப்பு)யில் ஒரு குடிசையில் வசித்து வந்தோம். மகளை பல மருத்துவமனைகளில் அழைத்துச் சென்று காட்டினேன். அந்த செலவிற்கு என் குடிசையையும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்று விட்டேன். அப்படி செலவழித்தும் என் மகள் வாய் திறக்கவில்லை. கெட்டியான உணவை சாப்பிடவில்லை. இயல்பாக மற்றவர்கள் போல் பேச முடியவில்லை.
ஏழு ஆண்டுகள் உணவை சாப்பிடாதவள் இன்று சாப்பிடுகிறாள். உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், என்னிடம் ஒன்றுமே இல்லை” என்று அழுதவாறே சொன்னார்.
நான், “அம்மா, கவலைப்படாதீர்கள். நான் அரசால் ஊதியம் பெறும் ஓர் அதிகாரி. உங்களிடம் பணம் இருந்து, நீங்கள் கொடுத்தாலும் வாங்க மாட்டேன். உங்கள் பெண் இனி ஒவ்வொரு நேரமும் சாப்பிடும்போது என்னை நினைக்குமே – அது நீங்கள் எனக்குக் கோடி ரூபாய் கொடுத்ததற்குச் சமம்” என்று கூறிவிட்டு உள் நோயாளிகள் பகுதியிலிருந்து வெளியேறினேன். தாயும், மகளும் கண்ணீரோடு, வணங்கியவாறே வழியனுப்பினர்.
1985ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி, சரியாக நாற்பது ஆண்டுக்கு முன்பு, நான் குன்னூர் மருத்துவமனைக்கு மாற்றலாகி பணியில் சேர்ந்தேன். அதே ஆண்டு அக்டோபர் மாதம் தனலட்சுமிக்கு அறுவை மருத்துவம் செய்தேன். இதே ஊரில் அன்று துவக்கிய என் அறுவை மருத்துவ பயணம் இன்று வரைத் தொடர்கிறது. இதுவரை ஏறத்தாழ 9,000 பேருக்கு முக அறுவை மருத்துவம் செய்துள்ளேன். அதில் 6,000 பேருக்கு கட்டணமின்றி அரசு லாலி மருத்துவமனையில் மருத்துவம் செய்துள்ளேன். நான் பணி ஓய்வு 2008இல் பெற்றேன். அதன் காரணமாகவே மீதி நோயாளிகளுக்கு (3,000 பேருக்கு) கட்டணமில்லாமல் மருத்துவம் செய்ய முடியாத கையறு நிலையில் நான் இருக்கிறேன் என்பதே ஒரு வருந்தத்தக்க நிலை. இன்று தனலட்சுமிக்கு பேரக் குழந்தைகள் எல்லாம் இருக்கின்றன. ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை அவருக்குக் கொடுத்த மருத்துவ அறிவியலுக்கு நன்றி!
“கடவுளை மற, மனிதனை நினை!”
“ஆத்தா மூடிய வாயை திறந்து வைத்த அறிவியல்”-1

Leave a Comment