உண்மை மீது பெரியாருக்கு இருந்த நேர்மையான பற்று!

2 Min Read

1973ஆம் ஆண்டு ஜூன் திங்கள்: தந்தை பெரியார் திருச்சியில் தங்கியிருந்த நாள். வந்த பல பார்வையாளர்களில் டாக்டர் சற்குருதாஸ் ஒருவர். அவர். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வராக இருந்தவர்.

டாக்டர் தாசை. தமக்கே உரிய தனிப் பாசத்தோடு. தந்தை பெரியார் வரவேற்றார். சில மணித் துளிகள் இருவர் நலம்பற்றி பேச்சு. பிறகு, டாக்டர் தாஸ். பெரியாரிடம் ஒரு சீட்டைக் கொடுத்தார்.பெரியார் அதை நொடியில் படித்து முடித்தார்.

படித்து முடித்ததும், தாஸ் பெரியாரைப் பார்த்து. அய்யா. இந்தப் பெண் என் மகள். மருத்துவக் கல்லூரிக்கு மனுப் போட்டிருக்கிறாள். அய்யா பார்த்து, சொல்ல வேண்டியவர்களிடம் ஒரு சொல் சொன்னால், அவளுக்கு இடம் கிடைத்துவிடும். அவள் எதிர்காலம் ஒளிமயமாகிவிடும். எங்களைப் போன்றவர்களுக்கு அய்யாவே அடைக்கலம் என்று வேண்டிக் கொண்டார்.

இதற்கு ‘இந்த அம்மாள் வாங்கியிருக்கிற மதிப்பெண்ணுக்கு தானாகவே இடம் கிடைக்க வேண்டும்.முந்தி வந்திருந்தால், எவ்விதத் தயக்கமும் இல்லாமல், சொல்லியிருக்கலாம். என் யோக்கியதைக்கு நான் சொல்கிற பரிந்துரைக்காக. ஆண்டுக்கு இரண்டொரு இடம் கொடுப்பார்கள். ஏற்கெனவே, அதற்கு மேல் சொல்லிவிட்டேன். இதையும் நான் சொல்லி. இவ்வளவு மதிப்பெண் பெற்றவருக்கு இடம் தவறிவிடக் கூடாதே என்பதே என் கவலை. நிறைய மதிப்பெண் இருப்பதால், வேறு எவர் வழியாகவாகிலும் ஒரு பரிந்துரையைப் பெறுங்கள்; இடம் உறுதியாகக் கிடைக்கும் என்று பெரியார் பதில் அளித்தார்.

நம்பிக்கையுடைய கிறித்துவராகிய டாக்டர் சற்குருதாஸ். ‘அய்யா தங்கள் வாழ்த்து பலிப்பது உறுதி, எதற்கும் இச்சீட்டு தங்களிடமே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு, விடை பெற்றுக் கொண்டார்.

சில வாரங்களுக்குப் பிறகு. எங்கெங்கோ பயணம் செய்துவிட்டு, தொண்டு செய்து பழுத்த பழமாகிய பெரியார். திருச்சிக்குத் திரும்பினார். சிறிது நேரத்தில் டாக்டர் சற்குருதாஸ், திருமதி சற்குருதாஸ், செல்வி சற்குருதாஸ் ஆகிய மூவரும் பெரியார் மாளிகைக்குச் சென்றார்கள்; வெறுங்கையோடா? இல்லை.

பெரிய மாலையும் தட்டு நிறையப் பழங்களும் கொண்டு போனார்கள். பெரியாருக்குக் காணிக்கையாக்கினார்கள்.

பெரியார்,’இந்த அம்மாளுக்கு நான் பரிந்துரைக்கவில்லை. அவர்கள் வாங்கிய மதிப்பெண்ணே இடம் தேடித் தந்திருக்கும். இல்லையென்றால் வேறு எவரோ உதவியிருக்கலாம். என்னாலே இடம் கிடைக்கவில்லை’ என்று, குழந்தைகளுக்கே இயல்பான தன்மையில் உண்மையை வெளியிட்டார்.

“இருந்தால் என்ன அய்யா அப்போதே சொன்னேனே அய்யா தங்கள் வாழ்த்தே பலிக்குமென்று. தாங்கள்தானே எங்களைப் போன்றவர்களுக்கு ஆதரவு. பாதுகாவல் நம்பிக்கை, வாழ்வு” என்று நெஞ்சுருகக் கூறினார். டாக்டர் சற்குருதாஸ்.

இந்நிகழ்ச்சியை 06.01.1974 அன்று திருச்சியில் நடந்த பெரியார் இரங்கல் பொதுக் கூட்டத்தில் குறிப்பிட்டார், டாக்டர் தாஸ். “மற்றவர்களைப் போல, கமுக்கமாக இருந்திருக்கவில்லை. பெரியார்.எப்படியோ கிடைத்த வெற்றிக்கு தான் பொறுப்பில்லை என்று நன்றி சொல்லும் எங்களிடமே சொல்லத் தேவையில்லை. உண்மை; முழு உண்மையில் பெரியாருக்கு இருந்த பற்றல்லவா அவரை அப்படிச் சொல்லச் செய்தது? பெரியாரின் வாய்மையை, நிகழ்ச்சியை நினைக்குந்தோறும் உள்ளம் உருகுகிறது ” என்று உருக்கத்தோடு உரையாற்றினார். நேரில் கேட்ட என் போன்ற பல்லாயிரவர் கண்கள் குளமாயின.

– கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் புரட்சியாளர் பெரியார்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *