‘சமூக மாற்றத்தைக் கொண்டுவந்த பூலே!’ திரைப்படம் – ஒரு பார்வை

Viduthalai
5 Min Read

சங்கிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஜோதிராவ் பூலே திரைப்படம் தடைகளை தகர்த்து இந்திய துணைக் கண்டம் முழுதும் திரைக்கு வந்தது… தமிழ் நாட்டிலும் சென்னையிலும் திரைக்கு வந்தது.

கல்வி உரிமைக்கு ஜாதி கொடுமைக்கு – பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை பூலே,  காசிம் சேக் மற்றும் அவரது மனைவி  பாத்திமா எனும் இசுலாமிய நண்பரோடு சேர்ந்தே இந்த மாற்றத்தை கொண்டு வந்தார் என அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது பூலே திரைப்படம்.

சூத்திரர்கள் என்று ஸநாதனவாதிகளால் சொல்லப்பட்ட, சொல்லப்படும் பிற்படுத்தப்பட்டவர்களின் நிழல் கூட தங்கள் மீது பட்டுவிடக்கூடாது என வாழ்ந்த சித்பவன் பார்ப்பனர்களின் முகத்திரையை கிழித்துள்ளது பூலே திரைக்காவியம்.

கல்லடியும், சொல்லடியும் மனதை கணக்கச் செய்யும் வாழ்வு பூலே – சாவித்ரி பாய் பூலே ஆகியோரின் வாழ்வும் போராட்டமும்- இந்த சமூகத்தில் சாஸ்திரம் – சம்பிரதாயம் என்ற பெயரில் மறுக்கப்பட்ட உரிமைகளுக்கு எதிராக – பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மற்றும் பெண்கள் கல்வி பெறவே கூடாது என்ற காலத்தில் – சொல்லடியையும் ,கல்லடியையும், சாணியால் அடித்ததையும் தாங்கி சோர்வடையாது தொடர்ந்து போராடி  இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக உருவானார் என்பதையும் – இருவரும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ள கல்வியே சிறந்த ஆயுதம் என கல்விக்கூடங்கள் திறப்பதற்கு பட்ட போராட்டங்கள் சொல்லி மாளாது.

அவசியம் பார்க்க
வேண்டிய திரைப்படம்

தமிழ் நாட்டு மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் – ஹிந்தியில் மட்டுமே வெளிவந்துள்ளது – நமக்கு ஏதோ கொஞ்சம் கொஞ்சம் ஹிந்தி தெரியும் என்பதால் அசலான கதையை புரிந்துகொள்ள முடிந்தது.

சமூக நீதி தளத்தில் தாக்கத்தை உருவாக்கும் பூலே திரைப்படத்தை தமிழில் மொழியாக்கம் செய்ய திரைத்துறையினர் முன்வர வேண்டும்- தமிழ்நாடு அரசு உரிய வகையில் ஆவன செய்ய வேண்டும்.

ஒரு மிகவும் பின் தங்கிய பூ வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு எவ்வளவு சமூக கொடுமைகள் இழைத்தது இந்த ஸநாதன தர்மம் என்பதை தோலுரித்துள்ளார்கள் பூலே திரைப்படத்தின் மூலம்.

உன் தர்மத்தைத் தகர்த்தெறிவோம்!

பெண் கல்வியை மறுக்கும் ஜாதி, சம்பிரதாயம் தான் உன் தர்மம் , சாஸ்திரம் மதம் என்றால் அந்த தர்மத்தை தகர்த்து எறிவோம் என சாவித்திரி பாய் பேசுவது ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஜோதிபா பூலேவின் ஒப்பற்ற சமூக மாற்றத்திற்கான உழைப்பை  அங்கீகரிக்கும் விதமாக மன்னர் சிவாஜி ராவ் கெய்க்வாட் அதிகாரப்பூர்வமாக வழங்கிய பட்டம் தான் மகாத்மா ஜோதிராவ் பூலே என்பதை இந்த திரைப்படம் ஆழமாக பதிவு செய்கிறது.

அவ்வாறே, ஜோதிபா பூலே  இறந்த பிறகு அவரது இறுதி நிகழ்வை அன்னை சாவித்திரிபா தான் பல எதிர்ப்புகளைக் கடந்து செய்தார் என்பதும்- வட இந்தியாவில் அவ்வாறு அப்போது செய்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதையும் கதையின் ஊடே அறிந்துகொள்ள முடிகிறது.

ஜாதியம் மிகவும் கெட்டிப்பட்டுக் கிடந்த பூனா பகுதியில், பூ விவசாயம் செய்து அதையே வியாபாரம் செய்யும் ஒரு பிற்படுத்தப்பட்ட  குடும்பத்தில் பிறந்து கடும் முயற்சியால் கல்வி கற்று தேர்கிறார் ஜோதிராவ் பூலே .

அவருக்கு கிடைத்த ஆங்கிலக் கல்வியை தமது மனைவிக்கு கற்பிக்க வேண்டுமென முடிவெடுத்து, நமது மனைவியை தம்மை விட வலிமையான சமூக போராளியாக உருவாக்க அந்த மனிதனுக்கு எப்படி தோன்றியது என்று எண்ணிப் பார்த்தால் , பெரும்  வியப்புத்தான் ஏற்படுகிறது. ஒரு குழந்தை திருமணத்தால் உண்டான  பந்தத்தை, அன்புகொண்ட ஆசிரியர் மாணவர் உறவாக, சமூக மாற்றத்திற்காக அவமானங்களை வன்முறை தாக்குதல்களை ஒன்றாக எதிர்கொள்ளும் தோழமையாக அந்த பந்தத்தை அவர்கள் தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டே சென்றதை பூலே திரைக்காவியம் பதிவு செய்துள்ள விதம் மகிழ்ச்சியளிக்கிறது.

ஜாதிய கட்டமைப்பினால் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு கல்வியே அவர்களின் விடுதலைக்கான திறவுகோல் என்பதை, மதத்தின், சாஸ்திர,  சம்பிரதாயத்தின் பெயரால் பார்ப்பனியம் இந்த மண்ணின் பூர்வகுடி மக்களை ஏய்த்து வருவதையும் மிகச் சரியாக கண்டெடுத்த முன்னோடி புலே. தேசியத்தின் பெயரால் கொடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான போராட்டத்தை மடைமாற்றும் சித்பவன் பார்ப்பனர்களின் தந்திரம் எத்தகைய கொடூரமானது- சம நீதிக்கு எதிரானது என்பதை இந்த திரைக்காவியம் பதிவு செய்கிறது.

சித்பவன் பார்ப்பனர்கள்

சமுதாய மாற்றத்திற்காக போராடு பவர்களின் வெள்ளைக்காரர்களின் கைக்கூலிகள் என்று சித்பவன் பார்ப்பனர்கள் திசை திருப்புவதை  விடுதலை உணர்வு அரும்பு விட்ட 1857 காலகட்டங்களிலேயே புலே- சாவித்திரிபாய்  மிகச் சரியாக புரிந்து கொண்டனர். இந்தத் திரைப்படத்தில், தங்களது நிழல் பட்டால் கூட தீட்டு எனும் கருதும் சித்பவன் பார்ப்பனர்கள் தேசப் போராட்டத்திற்காக ஆட்களைத் திரட்ட வேண்டும் என்று இவர்களை நிர்பந்திக்கும் காட்சியில் சாவித்திரிபா புலே “எங்கள் நிழலைக்கூட பாவம் எனக் கூறும் நீங்கள் தேச விடுதலை என்று பேசுவதெல்லாம், அதிகாரத்தின் மீதான உங்களது ஆசைகளை அன்றி, பொது நலன் என ஒன்றுமில்லை”  என்று பேசும் வசனங்கள் மிகக் கூர்மையானவை. அந்தக் கருத்தின் உண்மை தன்மையை, தேசியம் தேசபக்தியின் பெயரால் இன்றும் சங்கபரிவாரங்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் கண்முன் வந்து செல்கின்றன.

அன்று கண்ட கனவு

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக பட்டம் பெற்ற பின் சாவித்திரி பாய் பூலே பேசும் வசனம் இது…

“இந்த நாட்டில் இன்று நான் ஒருத்தி தான் பெண் ஆசிரியர். வரும் காலத்தில் இந்தியாவில்  பள்ளிகளை நடத்துவதே பெண்களாகத்தான் இருப்பார்கள்” என பேசுகிறார்.

இன்று அவர் அன்று கண்ட கனவு நடைமுறையில் உள்ளது என்பதையும் இன்று அடைந்துள்ள மாற்றத்திற்கு ஜோதிராவ் பூலே, சாவித்திரி- பாத்திமா போன்றோர் அதைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் தந்தை பெரியார் வரை எவ்வளவு பாடாற்றியுள்ளனர்- ஆற்றொனா துயரங்களை, துன்பங்களை சுமந்துள்ளனர், எவ்வளவு தியாகங்களை செய்துள்ளனர் என்பதையும் தெரிந்துகொள்ள இந்தப் படம் ஒரு விழிப்புணர்வு படமாக- வரலாற்று ஆவணமாக உள்ளது என்பதே நிதர்சனம்.

எங்கள் இருக்கைக்கு பின் வரிசையிலும் முன் வரிசையிலும் வட இந்திய பாரம்பரிய உடைகள் தலையை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த பலர் “பெண்கள் கல்வி கற்பது இந்து மத சாஸ்திர, சம்பிரதாயத்தை மீறும் செயல் என்றால் அதை தீயிட்டு பொசுக்குவோம் – தகர்த்து எறிவோம்” என அன்னை சாவித்திரி பாய் பூலே பேசிய போது வட இந்திய பெண்கள் தன்னெழுச்சியாக கைதட்டியது இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை” – எனும் வள்ளுவரின் குறள் போல கல்வி தான் இந்த சமூகத்தை மாற்றும் என மாற்றிக்காட்டிய புரட்சியாளர்கள் ஜோதிராவ் பூலே- சாவித்திரி பாய் ஆகியோரின் வாழ்வை அசலாக படம்பிடித்துக் காட்டியுள்ளார் இயக்குநர் மகிழ்ச்சி.

பூலே திரைப்படதை தமிழில் மொழி மாற்றம் செய்து தமிழ்நாடு முழுதும் பள்ளி கல்லூரி மாணவர்கள் திரையில் காண தமிழ்நாடு அரசு உதவிட வேண்டும் என அன்போடு வேண்டுகிறோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *