சதுர்வேதி ஒழிந்து, சமத்துவம் மலர்ந்தது!

2 Min Read

ர.பிரகாசு

பகுத்தறிவுக் கொள்கைகளை முழு மையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர்.

‘முதலில் ஒழிக்கப்பட வேண்டியது, ‘வர்க்க வேறுபாடா’, ‘ஜாதி வேறுபாடா’ என்பதில் தந்தை பெரியாருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையில் கருத்து மாறுபாடு இருந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே ஜாதியப் பிரச்சினையுடன் வர்க்க அடிமைத்தனத்தையும் ஒழிக்க, பண்ணை ஆதிக்கத்துக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடியது பெரியாரால் தொடங்கப்பட்ட ‘திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’. அப்படி ஒரு போராட்டத்தால் பலன் அடைந்த கிராமம்தான் இடையாற்று சதுர்வேதிமங்கலம்.

1950-கள் வரை லால்குடி சுற்றுவட்டாரம் முழுவதும் கூகூர் பரமசிவம்பிள்ளை, தாத்தாச்சாரியார், மணக்கால் பாப்பாத்தி அம்மாள், கொண்டையம்பட்டி செட்டியார் என விரல் விட்டு எண்ணக்கூடிய சில பண்ணையார்களிடம்தான் இருந்தன. அதில் கொள்ளிடக்கரையில் உள்ள ஒரு சிறிய கிராமம் இடையாற்று சதுர்வேதிமங்கலம். மொத்த ஊரும் நடேச அய்யர் வசம். அதனால்தான் அப்பகுதியில் முதன்முதலில் மின்சார வசதி பெற்ற கிராமமும் கூட.

அங்குள்ள பெரியவர் சீலி பகுதியைச் சேர்ந்த, இன்ஸ்பெக்டர் என மக்களால் அழைக்கப்பட்ட ஒருவர் மூலமாக, 1940-களில் திராவிடர் கழகம் அங்கு அரும்புவிட்டது. ரகசியமாக வீடு வீடாகச் சென்ற ‘விடுதலை’ பத்திரிகை அவர்களின் சுயமரியாதைச் சிந்தனையைத் தட்டியெழுப்பியது. அதன் விளைவாய், ஊரே கருப்புச் சட்டைக்கு மாறியது. திருவிழாக்கள் நின்றன. சதுர்வேதி அழிந்து  இடை யாற்றுமங்கலமானது. பின்னர். 1952-இல் தேவசகாயம், ராயப்பன், சந்தானம், சாமிக்கண்ணு போன்றோர் அப்பகுதியில், ‘திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினர்.

‘நிலம் என் உரிமை’ என்ற முழக்கம் ஓங்கி ஒலித்தது. வயலில் இறங்க மறுத்தனர் ஊர்மக்கள். பொறுமை தாங்காத நடேச அய்யர், அடியாட்களுடன் சென்று, தேவசகாயத்தின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார். ஆனால், பண்ணையின் அடாவடிக்கு மக்கள் அஞ்சவில்லை. காவல்துறை துணையோடு பண்ணை ஆட்களே வயலில் இறங்கி வேலை பார்த்தனர். காவல்துறையும் ஒரு கட்டத்தில் கை விரித்துவிட, பண்ணை ஆட்கள் சரணடைந்தனர். ஊரை விட்டு வெளியேறினர். 2,000 ஏக்கருக்கு அதிகமான நிலம் ஜாதிப் பாகுபாடு இல்லாமல் அனைத்துக் கூலிகளுக்கும், குத்தகைதாரர்களுக்கும் பங்கிடப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவராக சுழற்சி முறையில் எல்லா சமூகங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தன.

ஆறேழு முறை இடையாற்றுமங் கலத்திற்குச் சென்ற பெரியாரின் நினைவாக, லால்குடியில் திருமண மண்டபம், புரட்சிக்கவிஞர் திருமண மாளிகை ஆகியவை உள்ளன. இன்றும் திராவிடர் கழகம் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் ஆணிவேராக இருந்த முத்துச்செழியன், கடந்த ஆண்டு டிசம்பரில் மறைந்தார். இடையாற்றுமங்கலத்தில் இருந்து மட்டும், சட்ட எரிப்புப் போராட்டத்தில் 27 பேர் பங்கேற்று சிறைக்குச் சென்றனர். அவர்களில் உயிரோடு இருப்போருக்கு, தேவசகாயத்தின் மகன் வால்டேர் இன்றும் உதவித்தொகை வழங்கிக் கொண்டிருக்கிறார். இன்றும் இடையாற்றுமங்கல மக்களின் உள்ளத்துடன் பெரியார் ஒன்றியிருக் கிறார்.

ஆனால், இடையாற்றுமங்கலத்து டன் முடிந்துவிடக்கூடியது அல்ல இந்த வரலாறு. அன்றைக்கு லால்குடி முழுவதும் திராவிடர் கழகம், திராவிட விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தை இயக்கிக்கொண்டிருந்த குடந்தை ஜோசப்பை நோக்கியும் நீள்கிறது, இந்த வரலாறு.

நன்றி: முரசொலி பாசறை, 9.5.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *