‘தி வயர்’ இணைய தளத்துக்குத் தடை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Viduthalai
1 Min Read

சென்னை, மே 10- ‘தி வயர்’ இணைய தளத்துக்கு ஒன்றிய அரசு தடைவிதித்தற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி இணைய தள செய்தி நிறுவனமான ’தி வயர்’ நேற்று (9.5.2025) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவுகளின் படி தங்கள் வலைதளம் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இந்த நடவடிக்கையை தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. உங்கள் ஆதரவுடன் கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

இந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக நிற்போம் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் அனைத்து வாசகர்களுக்கும் உண்மையுள்ள செய்திகளை வழங்குவதில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

மிகவும் பிரபல இணையதள செய்தி நிறுவனமான தி வயர் இணைய தளம் முடக்கப்பட்டதற்கு பல்வேறு ஊடகவியலாளர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நெருக்கடியான நேரங்களில் ஊடகங்களை அமைதியாக்குவது ஜனநாயகத்தின் உணர்வை குறைத்து மதிப்பிடுவதைப் போன்றதாகும். ஒன்றிய அரசு ‘தி வயர்’ இணைய தளத்தின் மீதான தடையை மறுபரிசீலனை செய்து நீக்கும் என்று நம்புகிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரத்தை நெரிக்க வேண்டாம்” எனப் பதிவிட்டுள்ளார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *