கோலார், ஜூன் 29 கருநாடக மாநிலம் கோலார் பகுதி போடகுர்கி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி ( 20). கீர்த்தி அதே கிராமத்தைச் சேர்ந்த கங்காதர்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார். கங் காதர் தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். அவர் தப்பாட்ட கலைஞர் எனவும் தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
கீர்த்தி – கங்காதர் காதல் விவகாரம் கீர்த்தியின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. வேறு சமூகத்தை சேர்ந்த கங்காதரை காதலிக்க வேண்டாம் என கீர்த்தி வீட்டில் சொல்லியுள்ளனர். இது தொடர்பாக கீர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. கங்காதரை திருமணம் செய்து கொள்வதில் கீர்த்தி உறுதியாக இருந்துள்ளார்.
இதையடுத்து கீர்த்தியை அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் 27.6.2023 அன்று காலை 6 மணி அளவில் நடந்ததாகவும் தெரிவித்துள் ளனர். கீர்த்தி கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த கங்காதர், கீர்த்தியின் உடலுக்கு இரங்கலும் நினைவேந்தலும் செலுத்தி உள்ளார். மிகுந்த வருத்தத்தில் இருந்த அவருக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக அவரது சகோதரர் அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள் ளார். அப்போது வண்டியை நிறுத்த சொன்ன கங்காதர், அந்தப் பகுதியில் வேகமாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து கம்மசமுத்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.