எட்டு ஆண்டுகள் மிகச் சிறப்பாக வீறுநடை போட்டு வந்த ‘குடிஅரசு’ மக்களின் குருட்டுத்தனம் தொடர்ந்து கோலோச்சி விடாது, விரட்டுவதற்கு தந்தை பெரியாருக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய போர் கருவியாக விளங்கியது. அது செய்த அறிவு புரட்சியால் அகிலமே அறைந்தது, புதுமையாளர்கள் பூரித்தனர். கடல் கடந்து அதன் கருத்துகள் பரவின. 1931க்குப் பின் சமதர்மம் சார்ந்த ஏராளமான கட்டுரைகள், ரஷ்யா பற்றிய கட்டுரைகள் ‘குடிஅரசி’ல் வெளியாயின. தொடர்ந்து ஒன்பதாம் ஆண்டில் ‘குடிஅரசு’ அடி வைத்த போது அது குறித்து அதன் பல்வேறு பணிகளை விளக்கி ‘ஒன்பதாவதாண்டு’ என்று தலைப்பிட்டு ஒரு தலையங்கத்தை எழுதினார் தந்தை பெரியார்.
ஒன்பதாவதாண்டு
நமது குடிஅரசு க்கு எட்டாண்டு நிறைந்து ஒன்பதாமாண்டு துவக்கமாகின்றது என்னும் விஷயத்தை அறியும் வாசகர்கள் மகிழ்ச்சி அடையாமல் இருக்க மாட்டார்கள்.
குடி அரசு தோன்றும் போது இன்னாட்டில் எல்லாத் துறையிலும் செல்வாக்குப் பெற்று, சகல விதத்திலும் ஆதிக்கம் அடைந்து, மக்களை வஞ்சித்து அழுத்தி வைத்திருந்த பார்ப்பனர்களுக்கு விரோதமாகவே காணப்பட்டது. அதன் பயனாய் குடிஅரசு எங்கு பார்த்தாலும் பார்ப்பனத் துவேஷமயமாகவே விளங்கி வகுப்புத்துவேஷியாயிற்று. இதன் பயனாய் சர்வ வல்லமையுடைய பார்ப்பன முகத்தினுடையவும், பார்ப்பன பத்திரிகைகளி னுடையவும், பார்ப்பன அதிகாரிகளினுடையவும் சிவ சக்தி கொண்ட எதிர்ப்புகளை சமாளித்து முதல் ஆண்டைக் கழித்து இரண்டாம் ஆண்டில் பிரவேசித்தது.
இரண்டாமாண்டில், அப்பார்ப்பனர்களின் வஜ்ஜிராயுதமாயிருந்த காங்கிரசிற்கு விரோதமாய்த் தோன்றி அதனோடு வாதாட வேண்டியதாகி குடிஅரசு தேசத்துரோகியாக விளங்கி தேசியவாதிகளின் எதிர்ப்புக்கும், எல்லைக்கும் ஈடுகொடுத்து வந்து. இந்த சமயத்தில் குடி அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய வேலை மாத்திரம் அல்லாமல் பார்ப்பனர்களாலும், அவர்களது ஆயுதங்களான காங்கிரசினாலும் முறியடிக்கப்பட்டு மூலையில் உட்கார வைக்கப்பட்டிருந்த ஜஸ்டிஸ் கட்சிக்கும் உழைக்க வேண்டியதாகி அதன் பயனாய் குடிஅரசு சர்க்கார் தாசனாக விளங்கிற்று. எப்படியோ ஒரு விதத்தில் காங்கிரசினுடையவும் தேசபக்தர்களுடையவும் எதிர்ப்பு களையும் தொல்லைகளையும் சமாளித்து இரண்டாம் வருஷத்தைக் கடந்து மூன்றாம் வருஷத்தில் பிரவேசித்து விட்டது.
மூன்றாம் வருஷமும் ‘குடிஅரசு’ மேற்கண்ட மகத்தான எதிர்ப்புகளில் சிக்கி சண்டமாருதத்தில் சிக்கிய குப்பை கூளம் போல் பறக்கடிக்கப்பட வேண்டி இருந்தாலும்.
அவ்வெதிர்ப்புகளைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் அதிலிருந்து மற்றும் ஓர் அடி முன்னேறிற்று என்று சொல்லும்படியாக பார்ப்பன அஸ்திவாரங்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம் என்று சொல்லும்படியான மகத்தான செல்வாக்கும், மதிப்பும், மரியாதையும் பெற்றிருந்த ஆதாரங்களுக்கும் விரோதமாய் தோன்றி குடி அரசு எங்கு பார்த்தாலும் இந்து மதத்துவேஷியாய் விளங்கி, பார்ப்பனர்கள், காங்கிரசுக்காரர்கள் ஆகியவர்களுடைய எதிர்ப்புக்கு மாத்திரமல்லாமல் இந்து சமுக பண்டிதர்கள் பாமர மக்கள் என்பவர்கள் எல்லோருடைய எதிர்ப்புக்கும், தொல்லைகளுக்கும்ஆளாகி அதிலிருந்தும் மீண்டு மூன்றாம் ஆண்டைக் கடந்து நான்காம் ஆண்டில் பிரவேசித்து விட்டது.
நான்காம் ஆண்டில், குடிஅரசு இந்து மதம் என்னும் பழம்பெரும் பூதத்தோடு வெளிப்படையாய் போர் புரிய ஏற்பட்டது மாத்திரமல்லாமல் பார்ப்பனியத்துக்கும் காங்கிரசுக்கும், இந்து மதத்துக்கும் அபயஸ்தம் கொடுத்து உலகம் போற்றும் மகாத்மா என்று விளங்கிவந்த தோழர் காந்தியாருடன் போராடவும் அவரது சக்ராயுதம் ஆகிய கதருடன் போராடவுமான ஒரு கஷ்டத்தில் சிக்கி இந்தியா முழுவதுமுள்ள இந்திய மக்கள் எல்லோருடையவும் எதிர்ப்புக்கும் ஆளாகி ஆலையில் சிக்கிய கரும்பு போல் நசுக்குற்று சத்துவேறு சக்கை வேறாகப் போய்விட வேண்டிய நிலைமையை சமாளித்து நான்காம் ஆண்டைக் கடந்து அய்ந்தாம் ஆண்டில் பிரவேசித்துவிட்டது.
அய்ந்தாம் ஆண்டில், குடிஅரசு பார்ப்பனர், காங்கிரஸ், மத ஆதாரங்கள், தோழர் மகாத்மா காந்தி கதர் என்பவர்களின் யோக்கியதைகளை வெளியாக்கி அவதிப்பட்டு அது சம்பந்தமான எதிர்ப்புகளை சமாளிக்கின்ற கஷ்டத்தோடு இல்லாமல் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் கொண்டது என்று சொல்லப்படும் கடவுள் உடனேயும் போராடவேண்டிய அளவுக்கு பச்சை நாஸ்திகமாகி உலகிலுள்ள எல்லாமக்களுடைய வெறுப்பும், அதிருப்தியும், எதிர்ப்பும் சமாளிக்க வேண்டியதாகி ஓரளவு அதிலிருந்தும் சமாளித்து அய்ந்தாம் ஆண்டைக் கடந்து ஆறாவது ஆண்டிற்குள் பிரவேசித்துவிட்டது.
(தொடரும்)