புரட்சிக் கவிஞரின் பொன்னான அறிவுரை – அறவுரை – இளைஞர்களுக்கு! (2)

Viduthalai
2 Min Read

புரட்சிக் கவிஞர் புத்துலகச் சிற்பியான தந்தைபெரியாரின் இலக்கியப் பட்டறை! அய்யாவின் அறிவுப் புரட்சியை அப்படியே உள்வாங்கி சுயமரியாதை உலைக் களத்தில் பகுத்தறிவு, சுயமரியாதைப் போராயுதங்களை – அறிவாயுதங்களை புவனத்திற்கு அளித்த கொள்கைப் பேரொளியாவார்.

இதற்குமுன் வந்த எந்தக் கவிஞரும் – இத்தகைய கொள்கைத் தெளிவுடன் ‘புரட்சிக் கவிஞர்’ என்ற நம் கவிஞரைத் தவிர, நம் பார்வைக்குத் தப்பிவிட்ட எவரும் சமூகத்தில் இல்லவே இல்லை!

இது மிகைப்படுத்தப்பட்ட பாராட்டா…? இல்லை, இல்லவே இல்லை –  நம் சமூகத்தின் உழைத்துப் பிழைக்கும் வர்க்கத்தின் வார்ப்புகள் பற்றி அவரது உள்ளமும், எழுத்தும் பாயாத இடமும், நபர்களும் தேடினாலும் எளிதில் இருக்க முடியாது.

ஆம், ‘இளைஞர் இலக்கியம்’. அவரது அந்த எளிய இலக்கியத்தில்,  சமூகத்தில் தெருவோரத்திலோ அல்லது தனி இடமில்லாது, கடைகூட இல்லாது, சாலை ஓரத்தில் நடைபாதையை தனது கடைக் கூடமாக ஆக்கிக் கொண்டோ உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்த் தோழர்களான

(1) குடுகுடுப்பைக்காரன்

(2) குரங்காட்டி

(3) பாம்பாட்டி

(4) தட்டார்

(5) வண்டிக்காரர்

(6) ஆலைத் தொழிலாளி

(7) பூக்காரி

(8) கோடாலிக்காரர்

(9) குயவர்

(10) குடை ரிப்பேர் சரி செய்பவர்

(11) பூட்டு சாவி செய்து தரும் தொழிலாளி

(12) கொத்தனார்

(13) கொல்லர்

இப்படி ஏராளமானோரைக் குறித்து எழுதியுள் ளார்கள்.

– இப்படியான தொழிலாளர்கள் தான் அவரது கவிதை உலகின் கதா நாயகர்கள்!

எடுத்துக்காட்டாக ‘குயவர்’ என்ற மண்பாண்டக் கைவினைஞரின் ஆற்றல் – இதோ புரட்சிக் கவிஞரின் எழுத்தாற்றல் மூலம்.

தரையோடு தரையாய்ச்

சுழலும் உருளை!

அதிலே குயவர்

செய்வார் பொருளை!

கரகர வென்று

சுழலும் அதன்மேல்

களிமண் வைத்துப்

பிடிப்பார் விரலால்!

விரைவில் சட்டிப்

பானைகள் முடியும்

விளக்கும் உழக்கும்

தொட்டியும் முடியும்

சுருக்காய்ச் செய்த

பானை சட்டி

சூளை போட்டுச்

செய்வார் கெட்டி!

உரித்த மாம்பழத்

தோலைப் போலே

உருக்கள் மண்ணாற்

செய்யும் வேலை

இருக்கும் வேலை

எதிலும் பெரிதே!

இப்படிச் செய்தல்

எவர்க்கும் அரிதே!

சிரிப்ப துண்டு

மண் பாண்டத்தைச்

சிறுமை என்று

நினைப்ப துண்டு.

பெருத்த நன்மை

மண்பாண்டத்தால்

சமையல் செய்து

சாப்பிடு வதனால்!

இதைக் குலத் தொழிலாக்கி அதை அவர்கள் மட்டுமே கற்க வேண்டும் என ‘குலக் கல்வி’க்கு இணைத்துள்ளனரே குட்டை உள்ளம் கொண்ட மனிதர்கள்! அம் மனிதர்களுக்குக் ‘குட்டை’த் தந்து அந்த மண் தொழிலாளியின் சிறப்பினைத் தந்துள்ளார் நம் கவிஞர்!

அவர்தாம் புரட்சிக் கவிஞர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *