டில்லியில் 1008 சமஸ்கிருத உரையாடல் அமர்வுகளின் (சமஸ்கிருத சம்பாஷண் ஷிவிர்) நிறைவு விழா 4.5.2025 அன்று நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சா் அமித்ஷா தலைமை விருந்தினராக பங்கேற்றுப் பேசியதாவது:
‘‘காலனித்துவ ஆட்சிக்கு முன்பே சமஸ் கிருதத்தின் வீழ்ச்சி தொடங்கியது. அதன் மறு மலர்ச்சிக்குக் காலமும் தொடர் முயற்சியும் தேவைப்படுகின்றன. பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில், சமஸ்கிருதத்தின் மறுமலர்ச்சிக்கு நாடு முழுவதும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. உலகின் புகழ்பெற்ற மொழி அறிஞர்கள் பலரும் சமஸ்கிருதத்தை மிக அறிவியல் பூர்வ மொழியாக அங்கீகரித்துள்ளனர்.
சமஸ்கிருதம் உலகின் மிக அறிவியல் பூர்வமான மொழி மட்டுமல்லாமல், இணையற்ற இலக்கண கட்டமைப்பையும் கொண்டுள்ளது. இந்தியாவில் சமஸ்கிருதத்திலேயே முற்றிலும் தகவல்தொடர்புகளை மேற்கொள்ளும் 4,000 கிராமங்கள் உள்ளன. சமஸ்கிருதத்தை ஊக்கு விக்க ‘அஷ்டாதசி’ திட்டத்தின் கீழ் சுமார் 18 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அரிய சமஸ்கிருத நூல்கள் வெளியீடு, இந்நூல்களின் மொத்த கொள்முதல் மற்றும் மறுபதிப்புக்கு அரசு நிதியுதவி வழங்குகிறது. புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞர்களுக்கான கவுரவ ஊதியம் அதிகரிக்கப் பட்டுள்ளது.
மோடி அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. ‘ஸஹஸ்ர சூடாமணி’ திட்டத்தின் கீழ், புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞர்களை கல்வியாளர்களாக நியமிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளில் சிதறிக் கிடக்கும் கையெழுத்துப் பிரதிகளை சேகரிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரச்சாரம், அரசின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும்.’’
என்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் விருப்பத்திற்கு ஏற்பப் பிளந்து கட்டிப் பேசியுள்ளார்.
4000 கிராமங்களில் சமஸ்கிருதம் முற்றிலும் தொடர்பு மொழியாக உள்ளதாம். அரசின் புள்ளி விவரப்படி இந்தியாவில் சமஸ்கிருதம் பேசும் மக்களின் எண்ணிக்கை 24,821 மட்டுமே! உண்மை இவ்வாறு இருக்க, உள்துறை அமைச்சராக இருக்கக் கூடியவர் 4000 கிராமங்களில் சமஸ்கிருதம் புழக்கத்தில் உள்ளதாகக் கூறுவது – பதவிக்கேற்ற பேச்சல்ல!
இந்தியாவில் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு சமஸ்கிருதமே என்று ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர் தமது ‘ஞான கங்கை’ (Bunch of Thoughts) என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.எைஸத் தாய் நிறுவனமாகக் கொண்ட பிஜேபியைச் சேர்ந்தவராக இருப்பதால் உள்துறை அமைச்சர் இப்படிப் பேச வேண்டியது கட்டாயமாகி விட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, உண்மை அதுவல்ல.
இவர் புகழ்ந்து தள்ளுவது போல சமஸ்கிருதம் உண்மையில் ஒரு மொழியேயல்ல.
சமஸ்த்தம் + கிருதம் = சமஸ்கிருதமாகும். ‘சமஸ்த்தம்’ என்றால் ‘யாவும்’ என்று பொருளாகும். ‘கிருதம்’ என்றால் ‘சேர்த்துச் செய்தது’ என்று பொருள்.
அதாவது பலவற்றைச் சேர்த்துப் பிசைந்த கலப்பட மொழியே சமஸ்கிருதமாகும்.
ஓர் உண்மையைத் தன்னை அறியாமலேயே உள்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார். இப்படிச் செத்துச் சுண்ணாம்பாகிப் போன சமஸ் கிருதத்துக்கு ஒன்றிய அரசு எப்படி எப்படி எல்லாம் மக்கள் வரிப் பணத்தைக் கொட்டிப் பாழாக்குகிறது என்ற உண்மை அவருடைய வாயாலேயே வெளிவந்து விட்டது.
உண்மையைச் சொல்லப் போனால் சமஸ்கிருதம் செத்து ஒழிந்ததற்கே காரணம் ஆரியப் பார்ப்பனர்கள் தான்.
‘சூத்திரன்’ படிக்கக் கூடாது, படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்; காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்பது சமஸ்கிருத சாத்திரங்கள்தானே!
இந்நாட்டில் பெரும்பாலான மக்கள் யார்? அவர்கள் கூறும் ‘சூத்திரர்களான’ பார்ப்பனரல்லாத மக்கள் தானே!
பெரும்பாலான மக்கள் படிக்கக் கூடாது என்றால் அந்த மொழி அழிந்து புதைக் குழிக்குப் போவது இயல்பானதே!
தேசிய கல்வி என்ற பெயரால் மொழித் திட்டத்தில் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சிக்கிறார்கள். என்ன செய்தாலும் விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர சமஸ்கிருதம் என்ற பிள்ளை பிழைக்காது – இது கல்லின்மேல் எழுத்தாகும்!