திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்

Viduthalai
13 Min Read

சென்னை, மே 10 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு‘ இதழ் நூற்றாண்டு விழாக்களை நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடத்துவது என்றும், நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்றும், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்பது என்றும், நான்காண்டு தி.மு.க. ஆட்சிக்குப் பாராட்டு, பெரியார் உலகை நிர்மானிக்கும் பணிக்குத் தேவையான நிதியை ஆண்டு முழுவதும் திரட்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் இன்று (10.5.2025) நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன!

Contents
இரங்கல் தீர்மானம் (4 ஆம் பக்கம் காண்க)பெரியாரை உலகமயமாக்குவோம்; உலகை பெரியார் மயமாக்குவோம்சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாக்கள்!‘‘திராவிட மாடல்’’ அரசின் நான்காண்டு சாதனைகளுக்குப் பாராட்டுகள் – வாழ்த்துகள்!‘‘கல்வி நிலையங்களில் மூட நம்பிக்கை கூடாது!’’ முதலமைச்சரின் எச்சரிக்கை பாராட்டுக்குரியது!ஜாதிவாரி கணக்கெடுப்பு, கால நிர்ணயம் செய்து, நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும்!ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைப் பறிக்கும் ஒன்றிய அரசின பாதகச் செயல்கள்!தீர்மானம் 8:திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் மேலும் தேவை!ஆபரேஷன் சிந்தூர் – தவிர்க்க முடியாதது – வரவேற்கத்தக்கது!நீதித்துறையில் பார்ப்பனர் ஆதிக்கம் – சமூகநீதி தேவை!‘பெரியார் உலகம்’ – நமது இலக்கு நிர்ணயம்!

சென்னை, பெரியார் திடலில் உள்ள அன்னை மணி யம்மையார் நினைவரங்கில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

முன்மொழிந்தவர்: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி                           கழகத் துணைப் பொதுச்செயலாளர்

தீர்மானம் 1:

இரங்கல் தீர்மானம்
(4 ஆம் பக்கம் காண்க)

முன்மொழிந்தவர்: முனைவர் துரை.சந்திரசேகரன்                             கழகப் பொதுச் செயலாளர்

தீர்மானம் 2:

பெரியாரை உலகமயமாக்குவோம்;
உலகை பெரியார் மயமாக்குவோம்

‘‘பெரியாரை உலகமயமாக்குவோம்; உலகை பெரியார் மயமாக்குவோம்’’ என்னும் உலகளாவிய பார்வையோடு தந்தை பெரியாரின் சிந்தனைகளை மேற்குலகம் எங்கும் கொண்டு செல்லும் வகையில் அமெரிக்கா, அய்ரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களின் பல்வேறு நாடுகளிலும், ஆசியாவில் தமிழர்கள் வாழும் பகுதிகள் எங்கும் (மத்திய கிழக்கு நாடுகள், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, வட கிழக்கு ஆசியா) தோழர்களை ஒன்றிணைத்து, சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் சாதனையைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றி இருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாகவும் அடுத்ததொரு பெரும் பாய்ச்சலாலவும் அமைந்திருப்பது, உலகில் மக்கள் வாழும் மற்றொரு பெரும் கண்டமான ஆஸ்தி ரேலியாவில் பெரியார் சிந்தனைகளைப் பரப்பும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்ற நிகழ்வுகளாகும்.

பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் ஏற்பாட்டில் 2025 மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் இரண்டு வாரங்கள் பங்கேற்று, அங்குள்ள தமிழர்களை ஒன்றாக்கி, தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகுதொழும் நிலையை அடையச் செய்துள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக் கூட்டம் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்நிகழ்வுகளில் உடன் பங்கேற்றும், ஒருங்கிணைப்பிலும் செயலாற்றிய கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களுக்கும், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம்- ஆஸ்திரேலியாவின் தலைவர் அண்ணா மகிழ்நன் உள்ளிட்ட அதன் பொறுப்பாளர்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாண்டிலேயே நவம்பர் முதல் வாரத்தில், ஆஸ்திரேலியாவில் அடுத்ததொரு பெரும் நிகழ்வாக, சுயமரியாதை-சமத்துவம்-பகுத்தறிவு மாநாட்டுக்குத் திட்டமிடும் ஆஸ்திரேலியத் தோழர்களின் முயற்சியில் இணைந்து, மாநாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்தவுள்ள பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும் திராவிடர் கழகம் தனது பாராட்டுதலைத் தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டிலிருந்து தோழர்கள் பலரும் கலந்துகொண்டு மாநாடு சிறக்க ஒத்துழைப்பையும் வழங்குவதெனத்
தீர்மானிக்கிறது.

முன்மொழிந்தவர்: வழக்குரைஞர் அ.அருள்மொழி                            கழகப் பிரச்சாரச் செயலாளர்

தீர்மானம் 3:

சுயமரியாதை இயக்க
நூற்றாண்டு விழாக்கள்!

தமிழ்நாட்டின் வரலாற்றில் தனித்தன்மையான காலகட்டமாகவும்,  சகாப்தமாகவும், திருப்புமுனை யாகவும் தோன்றிய ஒப்பற்ற சுய சிந்தனையாளரான பகுத்தறிவுப் பகலவன் பேராசான் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையும், அம்மாபெரும் புரட்சியாளரின் பிரச்சாரப் போர் வாளாகத் திகழ்ந்த ‘பச்சை அட்டை’ ‘குடிஅரசு’ இதழின் நூற்றாண்டு விழாவையும் கீழ்க்கண்டவாறு எழுச்சியுடன் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

31.5.2025 வேலூர்

7.6.2025 கும்பகோணம்

8.6.2025 புதுச்சேரி

14.6.2025 கோவை

11.7.2025 நாகர்கோவில்

14.7.2025 மதுரை ஆகிய இடங்களில் சிறப்புடன் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

1.6.2025 சென்னை பெரியார் திடலில் ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவையும், ‘விடுதலை’ 91 ஆம் ஆண்டு விழாவையும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

வரும் ஆகஸ்டு முழுவதிலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவையும், ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவையும் 100 இடங்களில் சிறப்புடன் நாடெங்கும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

இவ்விழாக்களில் கீழ்க்கண்ட தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

  1. சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்
  2. சுயமரியாதை இயக்கத்தின் ஆக்கமும் – தாக்கமும்!
  3. சுயமரியாதை இயக்கத்தின் களங்கள்
  4. சுயமரியாதை இயக்கப் போர் ஆயுதங்கள்
  5. பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்
  6. சுயமரியாதை இயக்கத்தின் இன்றைய தேவை!

சொற்பொழிவாளர்கள் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படுவர்.

முன்மொழிந்தவர்: வீ.குமரேசன்                                                     கழகப் பொருளாளர்

தீர்மானம் 4:

‘‘திராவிட மாடல்’’ அரசின் நான்காண்டு சாதனைகளுக்குப் பாராட்டுகள் – வாழ்த்துகள்!

‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகராம்’’ மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கடந்த நான்காண்டு ஆட்சியில் சாதனைகளாக நிரப்பி, அய்ந்தாம் ஆண்டில் வெற்றி கரமாக அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும், அதன் ஒப்பற்ற முதலமைச்சருக்கும் இச்செயற்குழு பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

முன்மொழிந்தவர்: இரா.ஜெயக்குமார்                                                  மாநில ஒருங்கிணைப்பாளர்

தீர்மானம் 5:

‘‘கல்வி நிலையங்களில் மூட நம்பிக்கை கூடாது!’’
முதலமைச்சரின் எச்சரிக்கை பாராட்டுக்குரியது!

கல்வி நிலையங்களில் அறிவியல் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். பகுத்தறிவுக்கு எதிரான மூடத்தனமான கட்டுக்கதைகளை, மூட நம்பிக்கைகளைப் பரப்புகிற இடமாக கல்விக் கூடங்கள் இருக்கவே கூடாது. அங்கு இரண்டே நிகழ்ச்சி நிரல்தான் இருக்கவேண்டும். ஒன்று Scientific Approach, மற்றொன்று Social Justice. அதாவது அறிவியல் சார்ந்த கல்வியுடன் சமூக நீதி வரலாற்றை மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும். இதற்கு எதிராக ஏதாவது நடந்தால் அரசின் செயல்பாடுகள் கடுமையாக இருக்கும் என்ற முதலமைச்சரின் எச்சரிக்கை மிக மிக அவசியமான, அவசரமான மிகச் சிறந்த அறிவிப்பாகும். இந்திய அரசமைப்புச் சட்டம் அடிப்படைக் கடமைகளில் 51-ஏ(எச்) பிரிவு, ‘‘நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் (குடிமகளும் அடக்கமே) அறிவியல் மனப்பாங்கு, ஏன், எதற்கென்று ஆராய்ந்து கேள்வி கேட்கும் உணர்வு, சீர்திருத்தம், மனிதாபிமானம் ஆகியவற்றை பரப்புதல் அடிப்படையான கடமை யாகும்’’ என்று தெளிவாகத் திட்டவட்டமாகக் கூறு கிறது. ஆனால், அண்மைக் காலங்களில் கல்வி நிலையங்களில் மூட நம்பிக்கையைப் பரப்பும் நிகழ்ச்சிகளும், பாடத் திட்டங்களும், சமூக நீதி குறித்த புரிதல்களும் இல்லாத நிலை அனைவருக்கும் கவலை அளிப்பதாக இருந்து வந்தது. தற்போது முதலமைச்சரின் அறிவிப்பு, நன்னம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. முதலமைச்சரின் எச்சரிக்கையை உணர்ந்து கல்வித்துறை உரிய நடவடிக்க எடுக்க வேண்டும். சமூக நீதி, அறிவியல் மனப்பான்மை குறித்து துணைப்பாடங்களை மேனிலைப் பள்ளி, கல்லூரிகளில் உருவாக்கி விட்டால், நிரந்தரமான தீர்வாக அமையும் என திராவிடர் கழக தலைமை செயற்குழு தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

முன்மொழிந்தவர்: ஊமை.ஜெயராமன்                                                 மாநில ஒருங்கிணைப்பாளர்

தீர்மானம் 6:

ஜாதிவாரி கணக்கெடுப்பு, கால நிர்ணயம் செய்து, நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும்!

ஒன்றிய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என திராவிடர் கழகம் தொடர்ந்து பல மாநாடு களிலும் தீர்மானம் நிறைவேற்றி வந்தது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை வழி யாகவும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். பாஜக தவிர்த்து, அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் பேசி வந்தார். தமிழ்நாடு அரசு சார்பில், முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார்; ஆனால், மோடி அரசும் அவரது அமைச்சர்களும், பாஜகவினரும் கடந்த பதினோறு ஆண்டுகளாக ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராகவே பேசி வந்தனர். ஏன் பிரதமர் மோடி அவர்களே, ஒரு தொலைக்காட்சிக்கு ஏப்ரல் 28, 2024 அன்று தந்த பேட்டியில், ஜாதிவாரி கணக்கெடுப்பு கேட்பவர்கள் அனைவரும் ‘அர்பன் நக்சல்கள்’ என அவதூறு பேசினார்; ஹிந்து மக்களை பிளவுபடுத்தும் என தேர்தல் பரப்புரையில் கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் 21.09.2021 அன்று அளிக்கப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், எஸ்.சி., எஸ்.டி. தவிர்த்து பிற ஜாதியினர் குறித்து கணக்கெடுப்பு நடத்த முடியாது என்பது கொள்கை முடிவு என தெரிவித்தது. நாடாளுமன்றத்திலும் இதே பல்லவியை உள்துறை இணை அமைச்சர் தொடர்ந்து பல்வேறு தருணங்களில் கூறி வந்தார். இந்த நிலையில் ஒன்றிய பி.ஜே.பி.  அரசு திடீரென, வரும் மக்கள்தொகை கணக்கெடுப்போடு, ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்திட அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தது. ஏற்கெனவே, ஒன்றிய பி.ஜே.பி. அரசு, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றினாலும்,  எப்போது அது நடைமுறைக்கு வரும் என்று யாருக்கும் தெரி யாத நிலை உள்ளது. அதே போல், இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பும் ஆகிவிடக் கூடாது; கால நிர்ணயம் செய்து அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், நிதி ஒதுக்கீடும் செய்யப்படவேண்டும் என எதிர்க்கட்சி கள் கேட்பதில் முழு நியாயம் உள்ளது.  காங்கிரஸ் கூறியபடி, ‘‘காலக்கெடு இல்லாமல் தலைப்புச் செய்தியைக் கொடுப்பதில் வல்லவர் மோடி’’ என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது தொடங்கும், படிவத்தில் என்னென்ன கேட்கப்படும் என்பதை ஒன்றிய அரசு வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

முன்மொழி     ந்தவர்: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி                            கழக செயலவைத் தலைவர்

தீர்மானம் 7:

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைப் பறிக்கும் ஒன்றிய அரசின பாதகச் செயல்கள்!

நமது கழகம் தொடர்ந்து சொல்லி வரும் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை என்பது நவீன குலக் கல்வித் திட்டமே என்பதை ஒன்றிய அரசு மீண்டும் நிரூபித்துள்ளது. தேசியக் கல்விக்கொள்கை 2020 இன்படி பொதுத்தேர்வில் 30 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண் எடுத்தால் 5, 8 ஆம் வகுப்பில் தோல்வி (பெயில்) என்ற நடைமுறை சிபிஎஸ்இ பள்ளிகளில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இருந்து வந்த 8 ஆம் வகுப்பு வரை கட்டாயம் பாஸ் என்ற முறை மாற்றப்பட்டு, தற்போது இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது தங்களின் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிப்பதாகப் பெற்றோர்களிடமே சிபி.எஸ்.இ. பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருவது கொடுமையிலும் கொடுமை!  இந்த நடை முறை மாணவ, மாணவிகளின் இடைநிற்றலுக்கு வழிவகுப்பதோடு குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கச்செய்யும் என்பதுதான் உண்மை. இதுதான் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையின் லட்சணம். எல்லோரும் படிக்கக்கூடாது என்பது ஆரிய கல்விக் கொள்கை; அனைவரும் படிக்க வேண்டும் என்பது திராவிட மாடல் கொள்கை. ஒன்றிய அரசின் இந்தத் திட்டத்தை சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மட்டுமன்றி அனைவரும் எதிர்த்துப் போராட முன்வரவேண்டும். ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா என்பதும் அசல் குலத் தொழில் பாதுகாப்பே என்பதால், அதனை எந்த வகையிலும் ஏற்க இயலாது. தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் இத்தகைய கல்வித் திட்டங்களை நிராகரித்திருப்பது ‘திராவிட மாடல் அரசு‘ இது என்பதற்கான மிகச் சிறந்த அடையாளமேயாகும்.

தமிழ்நாடு அரசின் இத்தகைய உறுதிக்கு – அரசிய லுக்கு அப்பாற்பட்ட நிலையில், அனைவரும் உறுதியாக நின்று ஆதரவு நல்கவேண்டும் என்றும், தேவைப்படும்பொழுது போராட்டக் களங்களிலும் அனைத்துக் கட்சியினரும், பெற்றோரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

முன்மொழிந்தவர்: உரத்தநாடு குணசேகரன்                                          மாநில ஒருங்கிணைப்பாளர்

தீர்மானம் 8:

திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள்
மேலும் தேவை!

மதவாதமும், ஜாதீயவாதமும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் துணையோடு தலைதூக்கி நிற்பதால், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நடைபெறும் இக்காலகட்டத்தில், திராவிடர் கழகத்தின் எல்லா வகை யிலுமான பிரச்சாரம் மேலும் சுழன்றடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

(அ) கிளைக் கழகம் இல்லாத பகுதிகளில், புதிய கிளைக் கழகங்களை கூடுதலாக உருவாக்குவது.

(ஆ) மாணவர்கள், இளைஞர்களை இயக்கத்திற்கு ஈர்க்கும் வகையில், காலத்திற்கேற்ப யுக்திகளுடன் அணுகுமுறைகளை – சமூகவலைத் தளம் மற்றும் இணைய வழிமூலம் பிரச்சாரம் செய்வது.

(இ) இதுவரை பிரச்சாரம் நடைபெறாத இடங்களைக் கணக்கில் கொண்டு, அவ்விடங்களில் இயக்கப் பணிகளையும், பிரச்சாரத்தையும் மேற்கொள்வது.

(ஈ) பொது இடங்களில் கழகக் கொடிகளை ஏற்ற முடியாத நிலையில், இயக்கத் தோழர்கள் தத்தம் வீடு களில் கழகக் கொடிகளை ஏற்றுவது.

(உ) சுவர் எழுத்தும், துண்டு வெளியீடுகளும் நமது கழகப் பிரச்சாரத்தில் மிகவும் முக்கியமானவை என்பதால், அவற்றை முழு வீச்சில் மேற்கொள்வது – வீட்டு வெளிப்புறச் சுவர்களில் பகுத்தறிவுக் கருத்து களைப் பரப்பும் வகையில் கட்டமைப்பது, படிப்பகங்கள் உயிரோட்டமாகச் செயல்படும் வகையில் நிர்வகிப்பது – பராமரிப்பது, பொதுக் கூட்டங்களைக் குறைந்த செலவில், எளிமையாக ஆடம்பரமற்ற நிலையில், அதேநேரத்தில் பொதுமக்களை ஈர்க்கும் வகையிலும் அதிக எண்ணிக்கையில் நடத்துவது.

(ஊ) மாவட்டக் கழகக் கலந்துரையாடல்களை கட்டாயம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தி, இயக்க அமைப்பைப் பலப்படுத்தி, பதிவேடுகளைப் பராமரிப்பது.

(எ) இயக்க ஏடுகளுக்கு, இதழ்களுக்குச் சந்தா சேர்ப்பு என்பதைக் குறிப்பிட்ட காலத்தில் என்று இல்லாமல், அதனைத் தொடர்ச்சியாக செய்து கொண்டே இருப்பது.

(ஏ) பயிற்சிப் பட்டறைகளைத் தொய்வில்லாமல் விடுமுறை நாள்களில் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்துவது. சமூக வலைதளங்களில் இயக்கக் கருத்து களைப் பரப்பிட பயிற்சி அளிப்பது.

(அய்) ஆண்டுக்கு ஒருமுறையாவது கழகக் குடும்பங்கள் சங்கமிப்பு – விருந்து ஏற்பாடு செய்தல்.

(ஒ) கழகக் குடும்பங்களில் கழகக் கொள்கைகள்பற்றி நமது பிள்ளைகளுடன், பெரியார் பிஞ்சுகளுடன் கலந்து உறவாடுவது, அன்றாட செய்திகளைப்பற்றி பரிமாறிக் கொள்வது, வாசிப்புப் பழக்கத்தை இளம்வயதிலேயே ஊட்டுவது, நல்லொழுக்கத்துடன் அவர்களை வளர்த்தெடுப்பது, இன்னோரன்ன முறையில் முதலில் நம் குடும்பங்களை செம்மைப்படுத்துவது என்ற வகையில், கழகத்தின் செயல்படவேண்டும் என்று இச்செயற்குழு வழிகாட்டுகிறது – வலியுறுத்துகிறது!

திராவிடர் கழகம், துணை அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

முன்மொழிந்தவர்: பொன்னேரி வி.பன்னீர்செல்வம்                             மாநில ஒருங்கிணைப்பாளர்

தீர்மானம் 9:

ஆபரேஷன் சிந்தூர் – தவிர்க்க முடியாதது – வரவேற்கத்தக்கது!

காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சைரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள்மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி லஷ்கர்–இ–தொய்பா ஆதரவு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தீவிர தாக்குதல் கண்டனத்திற்குரியது. சுற்றுலா சென்ற 26 அப்பாவி மக்கள் இந்தத் தாக்குதலால் உயிரிழிந்தது பெரும் வேதனைக்குரியது.

பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது தவிர்க்கப்பட முடியாத நடவடிக்கையே!  அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் அத்தனையும் ஓரணியில் திரண்டு, தீவிரவாதத்தினை வேரறுக்க உறுதி பூண வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

முன்மொழிந்தவர்: வழக்குரைஞர் த.வீரசேகரன்                                 கழக வழக்குரைஞரணித் தலைவர்

தீர்மானம் 10:

நீதித்துறையில் பார்ப்பனர் ஆதிக்கம் –
சமூகநீதி தேவை!

நீதித்துறை நியமனத்திலும், சமூகநீதி தேவை என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தும், உயர்நீதிமன்றங்களில் பார்ப்பனர்களே பெரும்பாலும் நீதிபதிகளாக உள்ளனர்.

குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது உள்ள 60 நீதிபதிகளில், பார்ப்பனர்கள் மட்டும் 10–க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அடுத்து நியமிக்கப்படும் நீதிபதிகளிலும் பார்ப்பனர்களே பெரும்பாலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். (கொலிஜியத்தில் உள்ள மூன்று நீதிபதிகளில் இருவர் பார்ப்பனர்கள்) இது சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானதாகும்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சமூகநீதியின் அடிப்படையில் பார்ப்பனர் அல்லாதா ருக்கு உரிய இடங்கள் அளிக்கப்படும் வகையில் நியமனங்கள் அமையவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

முன்மொழிந்தவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி         

தீர்மானம் 11:

‘பெரியார் உலகம்’ –
நமது இலக்கு நிர்ணயம்!

கவனச் சிதறலே கூடாது!

நமது முக்கியமான திட்டமான திருச்சி சிறுகனூரில் உருவாகும் பெரியார் உலகத் திட்டப் பணிகள் மிக வேகமாகவும், அதேநேரத்தில், சட்டப்படி பல நிபந்த னைகளை நிறைவு செய்தும் நடைபெற்று வருகின்றன.

இதற்கு முழுப் பொறுப்பேற்றுள்ள பணிக் குழுவின் தோழர் வீ.அன்புராஜ் அவர்களுக்கும், பொறியாளர்களுக்கும், கட்டட நிர்ணயிப்புப் பணித் தோழர்களுக்கும் நமது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பணிகள் விரைந்து முடிக்கப்பட, ரத்த ஓட்டம் போன்ற நிதித் தேவைகளை நிறைவேற்றிட – முன்பு இயக்கப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களால் அறிவிக்கப்பட்டு, மும்முரப் பணிகளுடன் கழகத்தவர்கள், பகுத்தறிவாளர்கள், பெரியாரிஸ்டுகள், பொது அன்பர்கள், பற்றாளர்களது உதவியோடு நடந்த எடைக்கு எடை தங்கம் தரும் விழா – நமது இயக்க வரலாற்றில் எப்படி ஒரு ‘‘பொன்னேடு’’ ஆகியதோ, அதேபோல, நாம் வரும் நாள்களில் தீவிர நன்கொடை வசூல் திட்டத்தை நமது உயிர்க்கடமையாக்கிக் கொண்டு, உழைத்து தந்தை பெரியார் 150 ஆவது ஆண்டு பிறந்த நாளில், ‘பெரியார் உலகம்’ திறப்பு விழாவை இலக்காக்கிக் கொண்டு, கடுமையான உழைப்பினைத் தந்து, பொதுமக்களின், அனைத்துத் தரப்பினரின் சீரிய ஒத்துழைப்போடு இடையறாமல் ஆண்டு முழுமையும் பணிகளை மேற்கொள்ள இச்செயற்குழு முழு மனதோடு தீர்மானிக்கிறது.

இதில் ஒவ்வொரு குடும்பத்தின், தோழர்களின் முழுப் பங்களிப்பு முற்றிலும் வேண்டப்படுகிறது.

‘‘நம்மால் முடியாதது யாராலும் முடியாது;

யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்’’

என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்றும் இச்செயற்குழு வேண்டிக் கொள்கிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *