காவல்துறையில் தனி நுண்ணறிவுப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி எந்த வகையிலும் ஜாதி மோதல் இல்லா நிலையை உருவாக்கவேண்டும்!

Viduthalai
4 Min Read

* தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் ஜாதிய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும்
* எதிர்க்கட்சிகள் ஊதிப் பெரிதுபடுத்தி அரசியல் இலாபம் ஈட்ட முனைப்போடு செயல்படுகிறார்கள்

தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் ஜாதி மோதல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். காவல்துறையில் தனி நுண்ணறிவுப் பிரிவை ஏற்படுத்தி, ஜாதிப் பிரச்சினையை முளையிலேயே ஒழிக்க ஆவன செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு பெரியார் மண் ஆதலால், இந்தியாவின் மற்ற பகுதிகளில் வெடிக்கும் மதக் கலவரங்கள், ஜாதி – தீண்டாமைக் கொடுமைகளால் ஏற்படும் கலவரங்கள் தமிழ்நாட்டில் வெகுவெகு குறைவு.

‘திராவிட மாடல்’ ஆட்சியின்மீது
 அவதூறுச் சேற்றை வாரி இறைப்பது
அன்றாட வழமையாகி வருகிறது!

மதக் கலவரத்தையும், ஜாதிக் கலவரத்தையும் தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேடிட ஒரு மதவெறிக் கூட்டம் – தி.மு.க.வின் பெருமைமிகு ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கும் சில மோதல்களைப் பெரும் ஜாதிக் கலவரம் போல் சித்திரிப்பது, அதை ஆளுநராக உள்ள ஆர்.எஸ்.எஸ்.காரர் பூதக் கண்ணாடியால் பெருக்கி, தங்கள் வயப்பட்ட ஊடக வெளிச்சத்தில் நின்று குற்றச்சாற்றுப் பட்டியலைத் தயார்படுத்தி தி.மு.க.மீதும், நல்லாட்சி நாயகரான நமது முதலமைச்சர், அவரது ஆட்சியின்மீதும் அவதூறுச் சேற்றையும் வாரி இறைப்பது அன்றாட வழமையாகி வருகிறது!

சில பார்ப்பன நாளேடுகள், வார ஏடுகள் ஒருபுறம் அவதூறு, ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவதும், ‘‘கருவாடு விற்ற காசு நாறாது; நாய் விற்ற காசு குரைக்காது’’ என்ற பழமொழிகளை நினைவூட்டும் வண்ணம் விளம்பரங்களை அமைச்சர்கள், ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து வாங்கி, தங்களது கஜனாக்களை நிரப்பிக் கொள்ளும் வெட்கக்கேடு எல்லாம் சகஜமாக நடைபெறும் அவலம்!

எங்காவது துரும்பு கிடைத்தால் அதைப் பெரிதுபடுத்தி (magnify), ஊதி உப்பச் செய்து, ஊர்வலம் விட வாய்ப்புக் கிடைக்காதா என்று பேசுவது; பொறுப்பற்றுப் புளுகும் நெறிெகட்டவர்களுக்கு பெரும் அரசியல் விற்பன்னர்கள்கூட விளம்பர வெளிச்சம் தருவது!

இத்தியாதி! இத்தியாதி!!

வெறும் வாயை மெல்பவர்களுக்கு
‘அவல்’ கிடைத்ததைப்போல…

தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டையிலிருந்துப் புறப்படும் செய்திகள், அங்கே ஜாதிவெறி கோர நர்த்தனம் ஆடுவதுபோல சித்தரிக்கப்படும் செய்தி ஊடக வெடிப்புகள் நாளும் புதுப்புதுச் செய்திகளாகி, வெறும் வாயை மெல்பவர்களுக்கு ‘அவல்’ கிடைத்ததைப்போல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது விந்தையாகவும், விஷமத்தனமான ஒன்றாகவும் உள்ளது!

புதுக்கோட்டை மாவட்டம் புதுசேட்டை மாவட்டம்போல சித்தரிக்கப்படுகின்றன, ஊடகச் செய்திகள், சமூக வலைத்தளங்களால்!

முன்பு தண்ணீர் தொட்டியில் அசுத்தப்படுத்தியது கொடுமை!

அடுத்து இப்போது வடகாடு என்ற ஊரில், கோவில் திருவிழாவிலும் இடப்பிரச்சினை காரணமாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் இருகூறாகிய எஸ்.சி., மற்றும் எம்.பி.சி., மக்களிடையே கலவரம். எஸ்.சி., மக்கள் மற்ற பிற்படுத்தப்பட்டவர்களால் தாக்கப்பட்டு, பலர் காயமுற்றனர் என்று வரும் செய்திகள்!

வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி
வைக்கவேண்டும்!

நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த மாவட்டத்தில் கூடுதலாக காவல்துறை அதிகாரிகள், நுண்ணறிவுப் பிரிவு உள்பட தனியே அமைத்து, எந்த ஜாதியினராயினும் தவறு, கலவரம் செய்யக் காரணமானவர்கள்மீது முளையிலேயே கடும் நடவடிக்கை எடுத்து, சமூகநீதிக்குப் புறம்பாக இரண்டு கைகளும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

இவ்வாட்சி எச்சார்பும் இல்லாத நியாயத்தின் பக்கம் நிற்கும் அரசு என்ற பேருண்மையை நிலைநாட்ட உரிய செயல்திட்டமும், மீண்டும் வன்முறை ஏற்படாத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு விரைந்த கடும் நடவடிக்கைகளும் தேவை!

குறிப்பிட்ட மாவட்டம், அங்கேயே குறிப்பிட்ட இதுபோன்ற ஜாதி – தீண்டாமை மோதல்கள்; இவற்றிற்கு யார் மூலகாரண கர்த்தாக்கள் என்பதைக் கண்டறிந்து, இதை வரும் தேர்தல் பிரச்சாரச் சரக்காக சில எதிர்க்கட்சியினர் பயன்படுத்தாத வகையில், காலதாமதமற்ற கடும் நடவடிக்கை அவசரத் தேவையாகும்!

திருப்பரங்குன்றத்தில் முயன்று தோற்ற பா.ஜ.க., ஹிந்து முன்னணியினர்; மதுரை ஆதீனகர்த்தர் போன்ற அரைவேக்காடுகள் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கின்றனர். தன்னை ஏதோ கொலை செய்ய முயற்சி (விபத்து) என்று ‘புரூடா’ விட்டு ஹீரோவாக முயன்று தோற்றுள்ளார். அவரது ஓட்டுநர்மீது வழக்கு!  ஆனால், மதுரை ஆதீனகர்த்தர்மீது  பொய்ப் புரட்டு, புரளிக்குரிய குற்றவாளி என்று நியாயமாக நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தயங்குகிறது என்று நமக்குப் புரிய வில்லை.

நிஜத்தைவிட்டு, நிழலையா தண்டிக்க முடியும்?

மனிதநேயத்திற்கும், மாண்புக்கும் உரிய
‘திராவிட மாடல்’ ஆட்சி தனது செயல்மூலம் காட்ட முன்வரவேண்டும்

இப்படி, எங்கும் கலவரத்தைத் தூண்ட சிலர் முயற்சிக்கும் சூழலில், புதுக்கோட்டை மாவட்டத்தின் இந்த விசித்திர நிகழ்வுகளுக்கு – தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சி ஒரு புதிய அணுகுமுறையைத் தொடங்கி காலதாமதமோ, தயக்கமோ இன்றிக் கையாண்டு, தமிழ்நாடு என்றுமே அமைதிப்பூங்கா, ஜாதி, மதக் கலவரங்களுக்குத் துளியும் இடந்தராத ‘திராவிட – பெரியார் மண்’ என்பதை மனிதநேயத்திற்கும், மாண்புக்கும் உரிய இவ்வாட்சி தனது செயல்மூலம் காட்ட முன்வரவேண்டும்.

தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி என்பதை இம்மாதிரி சில்லறை விஷமங்களைக் கொண்டு ‘உடைக்கும் உத்தியோ’ என்ற அய்யமும் ஏற்படவே செய்கிறது!

அவசர நடவடிக்கைத் தேவை!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.5.2025

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *