மனிதனே சிந்தித்துப் பார்!

viduthalai
2 Min Read

கடவுள் இருக்கிறதோ, இல்லையோ என்பது ஒரு புறமிருந் தாலும், கடவுளை உருவாக்கிக் கொண்ட மக்களும், தோத்திரம் செய்யும் மக்களும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்களா, இல்லையா என்பதை அறிவுள்ள மக்கள் சிந்திக்க வேண்டு மென்றே விரும்புகின்றேன்.

இதில் வெறும் கோபத்தைக் காட்டுவதில் பயனில்லை; மனிதன் காட்டுமிராண்டி பருவத்திலிருந்து மாற்றமடைந்து அவனுக்குள்ள அறிவுத் திறனுக்கேற்ற மனிதத் தன்மை யுடைய வனாக ஆகவேண்டும்.

உலகமோ, அதிலுள்ள தாவரங்களோ, ஜீவஜந்துக்களோ, மனிதனோ தோன்றிய காலம் நமக்குத் தெரியாது. உத்தேசத்தால் ஏதோ சொல்லுகிறோம். அது எப்படியிருந்தாலும் நமக்குக் கவலையில்லை. ஆனால், மனிதன் தன் அறிவுத் திறனுக்கு ஏற்றபடி வாழ்வில் வளர்ச்சிப் பெற்றிருக்கிறானா என்பதுதான் மனிதன் சிந்திக்கத்தக்கதாகும்.

கல்லாயுத காலத்திலிருந்து இரும்பாயுத காலத்திற்கு வந்ததும்,

சிக்கிமுக்கிக் கல் நெருப்புக் காலத்திலிருந்து மின்சார நெருப்புக் காலத்திற்கு வந்திருப்பதும்,

கட்டை வண்டிப் பிரயாண காலத்திலிருந்து ஆகாய விமான பிரயாண காலத்திற்கு வந்திருப்பது முதலான எத்தனையோ விஷயங்களில் மாறுதலும், தெளிவும் அடைந்திருப்பதை எந்த மனிதனும் மறுக்க முடியாது.

பிறக்கும் மக்களில் 100-க்கு 75 பேர், 90 பேர் செத்துக் கொண்டிருந்த மக்கள் இன்று பிறந்த மக்களில் 100-க்கு 75 பேர்கள் சாகாமல் இந்த 500 வருஷத்தில் ஒன்றுக்கு இரண்டாக உலகில் மக்கள் எண்ணிக்கை பெருகும்படி சாவு அளவையே மட்டுப்படுத்தியிருப்பதும் அறிவினாலென்றே அறிகிறோம்.

கடவுள் நம்பிக்கைக்காரர்கள், இவற்றிற்கெல்லாம் என்ன சமாதானம் சொல்ல முடியும்.

இந்த மாறுதல்கள் கடவுளினாலா? மனிதனுடைய அறிவாற் றலினாலா என்பதைக் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் சிந்திக்க வேண்டும்.

  1. முதலாவதாக கடவுள் எப்படி வந்தது?
  2. கடவுளுக்கு உருவம் எப்படி வந்தது?
  3. அதுவும் மனித உருவமாக இருக்க அவசியம் என்ன?
  4. பல கடவுள்கள் எப்படி ஏற்பட்டன?
  5. அந்தப் பல கடவுள்களுக்கும் பெண்டு பிள்ளைகள், காதலிகள் எப்படி ஏற்பட்டன?
  6. பிறகு பெண்டு, பிள்ளை, காதலிகளும் எப்படி கடவுள்கள் ஆனார்கள்?
  7. இவைகளுக்கெல்லாம் வீடு, நகை, துணிமணி, சாப்பாடு முதலியவை எப்படி ஏற்பட்டன?
  8. இவைகள் மனிதர்களுடன் மற்ற ஜீவன்களுடன் யுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் அவர்களைக் கொலை செய்ய வேண்டிய அவசியமும் எப்படி வந்தது?
  9. இக்கடவுள்களில் ஒன்றுக்கொன்று அதிக முக்கியத்துவம் உடையவைகளாக எப்படி ஆயிற்று?
  10. இவை ஒருபுறமிருக்க கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவைகளுக்குக் கடவுள் சக்தி எப்படி வந்தது?
  11. இக்கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவைகளிலும் கடவுள் சக்தியும் அவற்றுள் உயர்வு – தாழ்வு எப்படி ஏற்பட்டன?
  12. இவைகளுக்காக மனிதன் செலவு செய்யும் நேரம், பணம், முயற்சி ஆகியவை எவ்வளவு?
  13. உலகில் துணி இல்லாமல், காய்கறி, ஜந்துக்கள் ஆகியவற்றைப் பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு, சேர்க்கையில் தாய், மகள், அக்காள், தங்கச்சி என்ற பேதம் பாராமல் வாழ்ந்து வந்த ஆரியர்களையும், உன்னையும் பார்! இன்று அவர்கள் அறிவில் அடைந்திருக்கும் முன்னேற் றம் எவ்வளவு? உன் நிலைமை எப்படி இருக்கிறது?

மனிதனே சிந்தித்துப்பார்!

(பெரியார் எழுதிய தலையங்கம், ‘விடுதலை’ 10.10.1967).

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *