திருச்சியில் ரூ.57 கோடியில் அரசு மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டடம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

viduthalai
4 Min Read

திருச்சி, மே 9– திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி யில் ரூ.57.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (8.5.2025) பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 19.65 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டடத்தை யும், தரை மற்றும் நான்கு தளங்களுடன் தலா 18.91 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான தனித்தனி விடுதிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

அரசுப் பள்ளிகளின்
தரத்தை உயர்த்த நடவடிக்கை!

அரசுப் பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு பல முன் மாதிரித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டின்அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாமல் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் போக்கவும், அரசுப் பள்ளி மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதை ஊக்கப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் 2021-2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு, அம்மாவட்டத்தின் அரசுப் பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த மாதிரிப் பள்ளிகளில் உண்டு உறைவிட வசதி யுடன்படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் விளைவாக முதலாம் ஆண்டிலேயே 75 மாணவர்களுக்கு நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில இடம் கிடைத்தது.

2022–2023ஆம் ஆண்டில் மேலும் 15 மாவட்டங்க ளில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, அந்த ஆண்டு 274 மாணவர்களுக்கு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தது. அத்துடன் இரண்டு மாணவிகள் தைவான் நாட்டின் முழு கல்வி உதவித் தொகைப் பெற்று அங்குள்ள பல்கலைக் கழகங்களில் படிக்கச் சென்றனர்.

அனைத்து மாவட்டங்களிலும்
மாதிரிப் பள்ளிகள் துவக்கம்!

தொடர்ந்து, 2023–2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. மாதிரிப் பள்ளி மாண வர்களுடன் அரசுப் பள்ளி மாணவர்களும், JEE, NEET மட்டுமல்லாது NIFT, CUET, CLAT என 20 வகையான நுழைவுத் தேர்வுகளுக்கும் தயார் படுத்தப்பட்டனர். இந்தச் செயல்பாடுகளின் விளைவாக இந்த ஆண்டு 628 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு,
உயர் கல்வியில் கிடைத்த இடங்கள்!

இந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 977 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்துள்ளது. இதில் 14 மாணவர்களுக்கு அய்.அய்.டி-.யிலும் 157 மாணவர்களுக்கு நாடெங்கிலும் உள்ள என்.அய்.டி.-களிலும் இடம் கிடைத்துள்ளது குறிப்பி
டத்தக்கது.

தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒன்று என 38 மாதிரிப் பள்ளிகள் உண்டு உறைவிடப் பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன. தனியார் மற்றும் அரசுக் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள இம்மாதிரிப் பள்ளிகளுக்கு நிரந்தர இடம் அமைக்கும் பொருட்டு, கடந்த 2023-2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முதல் கட்டமாக திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 56.47 கோடி ரூபாய் செலவில் புதியக் கட்டடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மாணவ – மாணவியர்களுக்கு
தனித்தனி விடுதிக் கட்டடங்கள்!

அதன் அடிப்படையில், திருச்சிராப் பள்ளி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக்கான இடம் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஒதுக்கப்பட்டு, தரை மற்றும்இரண்டு தளங்களுடன் 54,676 சதுர அடி கட்டட பரப்பளவில் 19.65 கோடி ரூபாய் செலவில் வகுப்பறைகள், பணியாளர் அறை, நூலகம், பல்நோக்கு அறை, கழிவறைகள், விளையாட்டுத் திடல், கலையரங்கம், ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், தரை மற்றும் நான்கு தளங்களுடன் தலா 73,172 சதுர அடி பரப்பளவில் தலா 18.91 கோடி ரூபாய் செலவில், சுமார் 440 மாணவர்கள் மற்றும் 440மாணவியர்கள் தங்குவதற்குரிய தனித்தனி விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

திருவள்ளுவர் சிலையை
முதலமைச்சர் திறந்து வைத்தார்!

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் அப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் சிலையை திறந்து வைத்தார். பின்னர், அப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறைகள், கலையரங்கம், கணினி ஆய்வகம் போன்றவற்றை பார்வையிட்டதோடு, மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடினார்.

இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, போக்குவரத்து மற்றும் மின்சா ரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா, துரைவைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார்,  தியாகராஜன்,  பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், அப்துல் சமது, பள்ளிக்கல்வித் துறைமுதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார், பள்ளிக் கல்வி இயக்குநர்முனைவர் எஸ்.கண்ணப்பன், தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *