பிற இதழிலிருந்து…

viduthalai
3 Min Read

நூற்றாண்டுக்கு வரலாற்றின் காணிக்கை!

தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த நூற்றாண்டுக்கு வரலாற்றின் காணிக்கை என்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படவேண்டும். அதன்படி 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அப்போது கரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததாலும், அதன்பின் நாடாளுமன்றத் தேர்தல் வந்ததாலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தமுடியாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும், அதோடு ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்தது.

பிற இதழிலிருந்து...

நம் நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு 1931ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்தது. இந்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள மொத்த ஜாதிகளின் எண்ணிக்கை 4,137. இதன் அடிப்படை யில்தான் மண்டல் கமிஷன் தனது அறிக்கையை 1980ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. 1989இல் பிரதமராக இருந்த வி.பி.சிங் இந்த மண்டல் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் ஒன்றிய அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு, கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து பிறப்பித்த உத்தரவுதான் இன்றளவும் அமலில் இருக்கிறது. இதுபோல மத்திய அரசாங்கத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு 15 சதவீதமும், மலைவாழ் மக்களுக்கு 7.5 சதவீதமும் வழங்கப்பட்டது. பா.ஜனதா ஆட்சியில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கும் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 26.5 சதவீதம், பிற்படுத்தப்பட்ட மக்களில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம், அதில் சீர்மரபினருக்கு 7 சதவீதம் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு 15 சதவீதம், அருந்ததியருக்கு 3 சதவீதம், மலைவாழ் மக்களுக்கு 1 சதவீதம் என்று மொத்தம் 69 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் அனைத்து ஜாதியினரும் எங்கள் ஜாதியில் இவ்வளவு மக்கள் இருக்கிறார்கள். எனவே எங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வேண்டும் என்று ஆளுக்கு ஒரு கணக்கை சொல்கிறார்கள். கடைசியாக தயாரிக்கப்பட்ட ஒன்றிய அரசாங்க தரவுப்படி நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 2,650 ஜாதிகளும், ஆதிதிராவிடர் பிரிவில் 1,170 ஜாதிகளும், மலைவாழ் மக்கள் பிரிவில் 890 ஜாதிகளும் இருக்கின்றன. மாநிலங்கள் சார்பில் தனி பட்டியல் இருக்கிறது.

இப்போது ஒன்றிய அரசாங்கம், மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான ஒன்றிய மந்திரிசபை கூட்டம் முடிவெடுத்து இருப்பது மிகவும் வரவேற்புக்கு உரியதாகும். மேலும் இந்த கணக்கெடுப்பு முதல் முறையாக டிஜிட்டல் முறையில் நடக்க இருப்பதால் எந்த தவறுக்கு இடம் இல்லாமல் மிகவும் துல்லியமாக இருக்கும். இந்த கணக்கெடுப்பு நடந்தப்பிறகு ஒன்றிய-மாநில அரசுகள் இடஒதுக்கீடில் புதிய முடிவுகளை ஆணித் தரமான தரவுகளின் அடிப்படையில் எடுக்கமுடியும். உண்மையான சமூகநீதி அப்போது காப்பாற்றப்படும். அதோடு அரசின் திட்டங்களை உரிய முறையில் திட்டமிடமுடியும். இந்த ஜாதிவாரி கணக் கெடுப்போடு இணைந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கப்படும்? எத்தனை மாதங்கள் நீடிக்கும்? முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்ற மத்திய அரசாங்கத்தின் அறிவிப்பை நாடு எதிர்பார்க்கிறது. 1931இல் எடுக்கப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு சுயமரியாதை நூற்றாண்டுக்கு வரலாற்றின் காணிக்கை என்று தந்தை பெரியார் தனது குடி அரசு இதழில் அப்போது எழுதினார். இதுபோல தற்போதைய கணக்கெடுப்பு இந்த நூற்றாண்டுக்கு வரலாற்றின் காணிக்கை என்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.

நன்றி: ‘தினத்தந்தி’
தலையங்கம், 9.5.2025

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *