பாடம் 2 : தோழமை மறவா தொண்டுள்ளம்
ஆசிரியர் அவர்கள் சிட்னியில் தங்கியிருந்த இடம் MERITONN SUITES ,180B,George Street,,PARAMATTA,SYDNEY,NEW SOUTH WALES2150 என்ற முகவரியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் 39 ஆவது மாடியில் இருந்தது. அந்தக் கட்டடத்தின்அருகில் பாரமட்டா என்ற புகழ்பெற்ற ஆறு ஓடுகிறது.அதனை ஒட்டி ஒரு அழகிய பூங்காவும் உள்ளது. இரவு நேரத்தில் மின்விளக்குகளின் ஒளியில் சிட்னி நகரம் ஒளிரும் அழகை அறையின் சாளரத்தில் இருந்தே பார்க்கமுடியும். அந்த இடத்தில் ஆசிரியர் தனியே அமர்ந்துஅறிக்கை எழுதிக் கொண்டிருப்பார். அல்லது படித்துக்கொண்டிருப்பார்.
அந்த அறையில் அனைத்து வசதிகளும் இருந்தன. உணவு மட்டும் வெளியில் சென்று உண்ண வேண்டும். அதனால் ஒரு தோழர் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மார்ச் 12 ஆம் தேதி காலை விமான நிலையத்தில் இருந்து அறைக்குச் சென்று தோழர்களுடன் உரையாடிய பிறகு ஆசிரியருக்கு உணவு பரிமாறப்பட்டது. வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு. காரமோ எண்ணெயோ அதிகமின்றி பக்குவமாக சமைக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் அவர்கள் தனக்கேற்றார் போல் உணவினை சமைத்ததிற்காக மிகவும் பாராட்டினார்கள்.தோழர் பொன்ராஜ் ஆசிரியருடன் இருந்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். அவர் திருநெல்வேலி மாவட்டம் ஆறுமுகநேரி என்ற ஊரைச் சேர்ந்தவர். அவருடன் சிலமணி நேரம் உரையாடிய ஆசிரியர் ஆறுமுகநேரிக்கும் திராவிடர் கழகத்திற்கும் உள்ள நெடுநாள் தொடர்பையும் அந்த ஊரைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரும் மூத்த காங்கிரசு தலைவருமான மறைந்த திரு.கே.டி.கோசல்ராம் அவர்களைப் பற்றிய பல அரிய செய்திகளையும் அவருக்கு எடுத்துக் கூறினார். அந்த செய்திகளை ஆசிரியர் நினைவுக் குறிப்புகளில் இருந்து எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் எடுத்துக்கூறியது பற்றி தோழர் பொன்ராஜ் அவர்கள் எங்களுக்கு விவரித்தார். ஆசிரியர் கூறிய செய்திகளைக் கொண்டு ஒரு பொதுக்கூட்டமே பேசிவிட முடியும் என்றும் வியப்பு மேலிடக் கூறினார்.
அதேபோல நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியைச் சேர்ந்த பொறியாளர் தேவிபாலா அவரது இணையர் கவுதம், சேலம் மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்தவர்,அவர்களது தோழர் தினேஷ் சேலம் மாவட்டம் அரியானூரைச் சேர்ந்தவர் . அவர்கள் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்ட போது “ பேளுக்குறிச்சியில் G P. S என்பவரைப் பற்றித் தெரியுமா என்று ஆசிரியர் கேட்டார். “ அய்யா அவர் எனக்கு உறவினர்: தாத்தா என்று கேள்விப் பட்டிருக்கிறேன்—அவர் திமுகவில்இருந்தார் என்று மட்டும் தெரியும்” என்றவுடன் தேவிபாலாவிற்கு மட்டுமன்றி எங்கள் அனைவருக்கும் சேர்த்து ஆசிரியர் “ G P சோமசுந்தரம் என்பது அவர் பெயர். GPS என்றுதான் அழைப்பார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். தந்தை பெரியாரிடம் ஆழ்ந்த பற்று கொண்டவர். அறிஞர் அண்ணா அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர் . நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக அண்ணா அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர், என்று அவரைப் பற்றிய செய்திகளை தன் நினைவுக் களஞ்சியத்தில் இருந்து அள்ளி வழங்கினார்.
வேதாரண்யம் அருகிலுள்ள புஷ்பவனம் என்ற ஊரைச் சேர்ந்த திரு. கோவிந்தராஜ் நாராயணசாமி அவரது இணையர் மன்மதவல்லி விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் . இருவரும் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் அதிகாரிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். சிட்னியில் பணியாற்றும் தங்கள் மகள் மருமகன் குடும்பத்தினருடன் தங்கி இருப்பவர்கள். பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் நிகழ்வைப் பற்றி அறிந்து ஆசிரியரை சந்திக்க வந்திருந்தனர். “அய்யா எங்கள் ஒரு மகள் டென்மார்க்கில் பணியாற்றுகிறார்,இன்னொரு மகள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார், நாங்கள் இரண்டு நாடுகளுக்கும் மாறி மாறி சென்று வருகிறோம், அய்யாவின் உழைப்பு, திராவிடம் கொடுத்த கல்வி, பெண்கள் முன்னேற்றம் இதற்கெல்லாம் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் “ என்று கூறினார்கள். அவர்களிடமும் ஆசிரியர் பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். இப்படியாக ஆசிரியருடன் ஒவ்வொரு தோழரின் உரையாடலும் ஒரு அரசியல் வகுப்பாகவே அமைந்தது.
மதியம் சற்று நேர ஓய்வுக்குப்பின் இரவு உணவிற்கு சிட்னியில் உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். அங்கு நிர்வாகப் பொறுப்பில் இருந்த திரு. ரஜித் ஆசிரியரையும் உடன்வந்த தோழர்கள் அனைவரையும் சால்வை அணிவித்து வரவேற்றார். அனைவருக்கும் வேண்டிய உணவு வகைகளை அளிக்கச் செய்து மிகுந்த அன்புடன் உபசரித்தார். அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் உரிமையாளரான திரு. சிறீனிவாசராஜா அலைபேசி மூலம் ஆசிரியருடன் பேசி அவரது வருகை குறித்து மகிழ்ச்சியைத். தெரிவித்தார். உணவுக்குப்பின் ஆசிரியர் அவர்கள் உணவகத்தின் சமையலறைக்குச் சென்று. அங்கு பணியாற்றியவர்களிடம் நல்ல உணவு அளித்ததற்காக பாராட்டும் நன்றியும் கூறினார்.அவர்களும் ஆசிரியரின் பாராட்டிற்கு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். இரவு உணவிற்கு பதினைந்து தோழர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களை முடித்து இரவு அறைக்குத் திரும்பி ஆசிரியர் ஓய்வெடுக்கச் சென்றபோது 11 மணியாகி விட்டது. நாங்கள் தங்கி இருந்த இடம் அங்கிருந்து ஒருமணி நேரப்பயணத் தொலைவில் இருந்தது. விடைபெறுமுன் ஆசிரியர் அவர்கள் கேட்ட கேள்வி என்னவெனில், நாளை காலை எத்தனை மணிக்கு நான் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் . ‘அய்யா நீங்கள் பொறுமையாக தூங்கி எழுந்தால் போதும். நீங்கள் எழுந்தபிறகு நாங்கள் வந்து அழைத்துச் செல்கிறோம்.’ என்று கூறி. விடைபெற்றோம்.
மறுநாள் அதாவது 13 ஆம் தேதி காலையில் வழக்கமான நேரத்தில் ஆசிரியர் எழுந்து விட்டார். பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் துணைத் தலைவரான மருத்துவர் ஆருண் காலையில் ஆசிரியரை நடைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். அருகில் உள்ள பாரமட்டா ஆற்றங்கரையினை ஒட்டிய பூங்காவில் ஆசிரியர் ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி செய்தார். தூய்மையான காற்றும் அமைதியான சூழலும் அளித்த புத்துணர்ச்சி ஆசிரியரின் நடைப் பயிற்சிக்கு தெம்பும் மகிழ்ச்சியும் அளித்தது.மேலும் மருத்துவர் ஆருண் அவர்களுடன் ஆஸ்திரேலிய அரசியல் பற்றியும்,இந்தியாவுடனான அரசியல் உறவு பற்றியும், தமிழர்களின் வேலை வாய்ப்பு, வாழ்க்கைச் சூழல் குறித்தும், ஆஸ்திரேலியா அரசுடன் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் மேற்கொள்ளும் பேச்சு வார்த்தைகளைப் பற்றியும் ஆழ்ந்த கருத்துரையாடலும் அந்த நடைப்பயிற்சி நேரத்தில் இடம்பெற்றது.
அறைக்கு வந்த உடன் குளித்து விட்டுத் தயாரான ஆசிரியருக்கு தோழர் பொன்ராஜ் சிற்றுண்டி பரிமாறினார். இட்லியும் சாம்பாரும் சுவையாக இருப்பதாகக் கூறிய ஆசிரியர் அவர்கள், ‘ என் பழைய தோழர் ஒருவரது மகள் சிட்னியில் ஓட்டல் நடத்தி வந்ததாகக் கூறினார்கள்.அவர்கள் குடும்பம் சிங்கப்பூரில் இருந்தது. அந்தப் பெண் இங்கே எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை . அது பற்றி விசாரிக்க முடியுமா?” என்று கேட்டார். இதைக்கேட்ட தோழர் பொன்ராஜ் கண்கள் விரிய “அய்யா, உங்களுக்கு அவர்களை நினைவிருக்கிறதா? என்னால் நம்பவே முடியவில்லை; நீங்கள் கூறிய அந்தப் பெண்தான் உங்களுக்கு உணவு சமைத்து அனுப்புகிறார். அவர் பெயர் வீரசெல்வி . உங்களுக்கு அவரை நினைவிருக்குமா என்று அவருக்கு சந்தேகம் இருந்தது. உங்களை சந்திப்பதற்காக மதிய உணவை அவரே எடுத்துக் கொண்டு வருகிறார்.” என்று கூறினார்.
அவர் கூறியதைக் கேட்ட ஆசிரியர் அவர்கள் அப்படியா, அந்தப் பெண்ணா எனக்கு உணவு கொடுக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் கேட்டார். அந்தப் பெண்ணின் வருகைக்காக காத்திருந்தார்.
அன்று மதிய உணவை எடுத்துக்கொண்டு குறித்த நேரத்திற்கு முன்பே வீரசெல்வி தன் இணையர் பக்தவச் சலம் அவர்களுடன் வந்து சேர்ந்தார். ஆசிரியரைக் கண்டவுடன் கண்ணீர் பொங்க “ அய்யா என்னை நினைவிருக்கிறதா ? என்று கேள்வியை முடிக்குமுன் “ என்னம்மா என் தோழர் மன்னார்குடி நாதன் மகள் நீ. உன் தந்தை சிங்கப்பூரில் இருந்தபோதே உன்னைத் தெரியுமே! பல ஆண்டுகளுக்கு முன் உன்னைப் பார்த்தது. சிட்னியில் இருக்கிறாய் என்பது மட்டும்தான் தெரியும். சிங்கப்பூரில் இருந்து கிளம்பும்போதே உன்னைப் பற்றிக் கூறி விசாரிக்க வேண்டும் என்று கவிதாவிடம் (ஆசிரியரின் இளையமகள்) சொல்லி விட்டு தான் வந்தேன்” என்று கூறிய ஆசிரியர் சில நிமிடங்களுக்குப்பின், “காணாமல் போன மகளைக் கண்டுபிடித்து விட்டேன்-இந்தப் பயணம் அதற்கு உதவியிருக்கிறது” என்று கூறியபோது ஆசிரியரின் விழிகளும் கசிந்தன.
தோழர் வீரசெல்வி ஆசிரியருக்கு தன் தந்தையை நினைவூட்டுவதற்காக சில நிழற்படங்களை எடுத்து வந்திருந்தார். ஒன்று அவரது பெற்றோரின் படம். மற்றொன்று வீரசெல்வியின் அண்ணன் இந்திரஜித் திருமணத்தின்போது ஆசிரியர் மேடையில் அமர்ந்திருக்கும் படம். மறைந்த சிங்கப்பூர் நாதன் அவர்களது படத்தை மன நெகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர், சிங்கப்பூர் நாதன் அவர்கள், மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்றும், தந்தை பெரியாரின் கொள்கையில் உறுதியாக நின்றவர் என்றும் ,நாதன் அவர்களது திருமண வரவேற்பு நிகழ்வில் தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் கலந்து கொண்டு வாழ்த்தியதையும், தந்தை பெரியார் நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் பங்கேற்க சிங்கப்பூரில் இருந்து அவர் வந்திருந்தார் என்பதையும், அவரது மகன் இந்திரஜித்தின் திருமண நிகழ்வில் தன்னுடன் அமர்ந்திருந்த மூத்த வழக்குரைஞர் மறைந்த வெங்கட்ராமன் மற்றும் மறைந்த மருத்துவர். ராமகிருஷ்ணன் ஆகியோரைப் பற்றிய செய்திகளையும் உற்சாகத்துடன் விளக்கினார். வீரசெல்வி தான் கடைசியாக ஆசிரியரை 2006 ஆம் ஆண்டு சென்னையில் பெரியார் திடலில் சந்தித்ததையும் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியர் அவர்கள் மாறாத அன்புடன் தன்னிடம் பரிவு காட்டியதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
ஆசிரியரின் உரையாடல்கள் ‘‘தோழமை மறவா தொண்டுள்ளமே தலைமைத்துவத்தின் சிறப்பு” என்ற பாடத்தை உணர்த்தியது.
அன்றைய மதிய உணவு கொள்கைப் பாச உணர்வினால் நிறைந்தது.
சிறிது நேரம் ஓய்வுக்கு என்று ஒதுக்கினோம். ஆனால் அதற்குள் SBS. வானொலி பேட்டிக்குப் புறப்படவேண்டிய நேரம் வந்துவிட்டது.
தொடரும்…