வானிலை ஆய்வு இயக்குநரின் அறிவார்ந்த அறிவிப்பு

viduthalai
2 Min Read

கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் என்பது அறிவியல் அடிப்படையில் உறுதிப்படுத்தப் படாத ஒரு கருத்து  என்று சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் அமுதா,  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது “கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் என்பது அறிவியல் பூர்வமானது அல்ல; ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு காலகட்டமாகும். இதற்கும் வானிலை அறிக்கைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை,

சித்திரை மாதம் 15 நாள்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப் படுகிறது,பொதுவாக சித்திரை மாதம் வெப்பமான மாதம் என்பதால் இப்படி பஞ்சாங்கத்தில் கூறி யுள்ளனர்.

ஆனால் இதில் குறிப்பிட்டுள்ளது போன்று கடுமையான கோடை என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பொருந்தாத ஒன்று ஆகும் கோடையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழைப் பொழிவு ஏற்பட்டு இதமான சூழல் நிலவுகிறது ஆகவே கத்திரி வெயில், அக்னி நட்சத்திரம்  அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படாதவை ஆகும். வானிலை ஆய்வு மய்யம் மூலமாக நாங்கள் வானிலை முன்னறிவிப்புகளை அறிவியல் அடிப்படையில், வளிமண்டல நிலைகள், காற்றழுத்த மாற்றங்கள், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்றவற்றை ஆய்வு செய்து வழங்குகிறோம்.

கத்தரி வெயில் என்ற கருத்து இந்த அறிவியல் முறைகளுடன் தொடர்புடையது அல்ல, மாறாக ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவானது,” என்று அமுதா விளக்கியுள்ளார்.

மேலும், அவர் தமிழ்நாட்டில் நிலவும் தற்போதைய வானிலை நிலவரம் குறித்துப் பேசுகையில், “தமிழ்நாட்டில் மே மாதத்தில் வெப்பநிலை உயர்வது இயல்பு. இது வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பச்சலனம் மற்றும் பருவநிலை மாற்றங்களால் நிகழ்கிறது. சென்னை வானிலை ஆய்வு மய்யம் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதற்காகத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மக்கள் வெப்பத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க, போதுமான தண்ணீர் குடிப்பது, நிழலில் இருப்பது மற்றும் வெயிலின் உச்சியில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று அறிவுறுத்தினார்.

இந்தத் தகவல், கத்தரி வெயில் என்ற கருத்து அறிவியல் அடிப்படையில் உறுதியற்றது என்பதை வலியுறுத்துவதோடு, மக்கள் வானிலை முன்னறிவிப்புகளை அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளவும், அதற்கேற்ப செயல்படவும் அமுதா வலியுறுத்தியுள்ளார். மக்களுக்குத் தேவையான காலநிலை மாற்றங்களுக்கு வானிலை முன்னறிவிப்புகளைப் பின்பற்றுங்கள் என்றும் கூறியுள்ளார்.

தப்பித் தவறி அரசுத் துறை அதிகாரிகளில் அறிவியலின் அடிப்படையில் உண்மைகளை வெளியிடுபவர்களும் இருக்கிறார்கள் என்ற அளவில் மனதிற்கு இது இதமாக இருக்கிறது.

அஸ்ட்ரானமி என்பது வேறு அஸ்ட்ராலஜி என்பது வேறு – முன்னது அறிவியல் அடிப்படையானது. பின்னது ஜோதிடம் ஆகும் – இது அறிவியலுக்கு விரோதமானது.

எடுத்துக்காட்டாக ஜோதிடத்தில் நவக்கிரகம் என்பதில் சூரியனை வைத்துள்ளனர். உண்மையில் சூரியன் நட்சத்திரமே தவிர கோள் அல்ல; நவக்கிரகத்தில் ராகு, கேது என்ற கோள்கள் (கிரகங்கள்) உள்ளன; இவை ஜோதிடத்தில் இடம் பெறுகின்றன. உண்மையில் ராகு, கேது என்பவை இல்லாதவை – இது ஒரு சோதிடப் பொய் மூட்டை.

இவற்றைப்பற்றி இன்றளவும் ஆன்மிக இதழ் என்ற பெயரிலும், ஜோதிட இதழ் என்ற பெயரிலும் சிறப்பு இதழ்களை வெளியிடுவது மக்களின் முட்டாள்தனத்தை வளர்ப்பது மட்டுமல்ல; அந்த முட்டாள்தனத்தைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து கல்லா கட்டுவதும் வெட்கக் கேடு! வானிலை இயக்குநர் அமுதா போன்றவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *