சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட பார்ப்பன நீதிபதிகள் உள்ள நிலையில் காலியாக உள்ள இடங்களுக்கும் பார்ப்பன நீதிபதிகளை நியமிக்கப் பரிந்துரையா?
சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 10 பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், மேலும் பார்ப்பன நீதிபதிகளை நியமனம் செய்யத் தந்திரமான முறையில் ஏற்பாடுகள் நடந்துவருவதைக் கண்டித்தும், சட்டப்படியாக நமக்கு உள்ள சமூகநீதியின்படி, சமூகநீதியைக் காப்பாற்ற முன்வாரீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை தலைமை நீதிபதி உள்பட 75 பதவிகள் ஆகும்!
தற்போது, ஏறத்தாழ 60 இடங்கள்தான் நிரப்பப் பட்டுள்ளன; ‘பைசலாக’வேண்டிய வழக்குகளோ ஏராளம் உள்ளன என்று நீதித்துறை புள்ளி விவரங்களே கூறும் நிலையில், அவற்றை நிரப்பிட வேண்டும் என்பது அவசர அவசியமானதொன்றாகும்.
அண்மையில், நீதிமன்றம் விடுமுறை முடிந்து திறப்பதற்குமுன் சென்ற மாதம், கொலிஜியத்தில் இடம்பெற்ற மூத்த நீதிபதி ஒருவர் (பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டோர்) உள்பட 5 நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். கொலிஜியத்தின் அந்த இடத்தில், தற்போது பார்ப்பனரல்லாதாரான மற்றொரு சீனியர் நீதிபதி இடம்பெற்றுள்ளார்.
மேலும் வெளிமாநிலங்களிலிருந்து 2 நீதிபதிகளை மாற்றல் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில்
பார்ப்பன நீதிபதிகளின் போக்கு!
பார்ப்பன நீதிபதிகளின் போக்கு!
புதிய நியமனங்களில் கொலிஜியத்திற்கான தற்போதுள்ள தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் ஆகிய மூவர் குழு பரிந்துரைப்படி, மாவட்ட நீதிபதிகளிலிருந்தும் (From the Bench) மற்றும் வழக்குரைஞர்களிலிருந்தும் (From the Bar) பரிந்துரைத்து, உச்சநீதிமன்ற ‘கொலிஜியத்திற்கு’ அனுப்பப்படும் பட்டியலில்,
ஏற்கெனவே பார்ப்பன ‘உயர்ஜாதி’ நீதிபதிகளில், ஆர்.எஸ்.எஸ். பற்றாளர்களாக, பழைய ‘ஷாகா’ உறுப்பி னர்களாக (கார்டு ேஹால்டர்களாக) உள்ள சிலரும் இடம்பிடித்து, தாங்கள் வழங்கும் தீர்ப்புகளில் அதனை மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ எழுதுவது மட்டுமல்லாமல், அவதூறுப் பேச்சுக்காக குற்றம் சுமத்தப்பட்டு, ஓரிரு நாள் சிறையில் இருந்த பார்ப்பனப் பெண்மணி ஒருவரின் வழக்கில், நீதிபதியின் மனைவி பரிந்துரையினையொட்டி – பல ‘அனுதாப அஸ்திரங்களை’ ஏவி, பிணை (ஜாமீன்) பெற்று வெளியே வந்து, ஜாதி – அரசியல் பேசும் பெரு உரிமையும் பெறும் அவலம் ஏற்கெனவே நடந்தது!
மற்றொரு பார்ப்பன நீதிபதி அம்மையார், கேரளாவில் ‘பிராமண’ சங்க மாநாட்டில் வெளிப்படையாகக் கலந்துகொண்டார். தனது தீர்ப்பை – தலைமை நீதிபதி (முன்பு ஓய்வு பெற்றவர்), அனுமதிகூட பெறாமலேயே தானே திருத்துகிற தனி உரிமையைப் பெற்றார். இதை ஒரு பிற்படுத்தப்பட்டவரோ, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியோ செய்திருந்தால், உயர்ஜாதி வர்க்க வழக்குரைஞர்கள்மூலம் வானத்திற்கும், பூமிக்கும் குதித்திருப்பார்கள்.
சென்னை உயர்நீதிமன்றமும் – மனுதர்மமும்!
மனுதர்ம ராஜ்ஜியம்தானே இன்றைய சென்னை உயர்நீதிமன்றப் போக்கு?
ஜனநாயகப் படியும், சமூகநீதிப்படியும் நீதிபதிகள் நியமனங்களில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மைனாரிட்டி சமூகங்களுக்கு உரிய போதிய பிரதிநிதித்துவம் (Adequate Representation) தரவேண்டும் என்பது அண்மைக்காலத்தில் உச்சநீதிமன்ற ‘கொலிஜியத்தின்‘ கொள்கையாகவே பிரகடனப்படுத்தப்பட்டது; இத்த கைய வெளிப்படைத்தன்மையுடன் அதைக் குறிப்பிடும் உச்சநீதிமன்றத்தின் மாற்றம் வரவேற்கத்தக்க சமூகநீதி பாதுகாப்பாகும்!
இதனை ‘சமூகநீதி மண்ணான’ தமிழ்நாடு உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள் குழுவினர் ‘அரசமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்ற கொலிஜியமும், கொள்கை முடிவாக ஏற்றுக் கொண்டுள்ளதை நிறை வேற்றிட’ வேண்டுகோள் வைத்தும்கூட, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் ‘கேளாக் காதுடன்’ நடந்துகொண்டார்.
உயர்நீதிமன்றத்தில்
மேலும் பார்ப்பன நீதிபதிகளைத்
திணிக்க தந்திர முறைகள்!
அண்மைக்காலமாக ஒரு ‘தந்திர முறை’ கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரிகிறது.
மொத்தமாக சுமார் 10 நீதிபதிகளுக்குமேல் 100–க்கு 3 பேரான பார்ப்பன உயர்ஜாதித் தலைமை நீதிபதி முதல் இரு பாலர்களிலும் ஏற்கெனவே உள்ள நிலையில், ஒரே முறையில் அதிகம் பார்ப்பன நீதிபதிகளைப் பரிந்துரைப்பதைத் தவிர்த்து, முதலில் 5 நீதிபதிகள் இடங்களுக்கான பரிந்துரையை அனுப்பி, அதில் 2 நீதிபதிகளுக்குக் குறைவில்லாத பார்ப்பனர்கள் என்றொரு எண்ணிக்கையை அமைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் (தவணைகளில்) பரிந்துரை அனுப்பப்படுவதாக உயர்நீதிமன்ற வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன!
முன்பு, மும்பை உயர்நீதிமன்றத்திலிருந்து ஒரு பார்ப்பன நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனப் பரிந்துரைப் பட்டியலில் ஆறு பேரை யும் பார்ப்பனர்களாகவே பரிந்துரை செய்து, முதல மைச்சருக்கு அப்பட்டியலை (அப்போது அவரிடம் இசைவு பெறும் வழமை இருந்தது) அனுப்பியபோது, ‘தமிழ்நாட்டின் மண்ணின் மனப்பாங்குக்கு இது எதிரானது; இதை ஏற்க முடியாது’ என்று நமது இயக்கப் போராட்டத்தின் எதிரொலியாக (அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.) ‘Soil Psychology’ என்ற ஒரு சொற்றொடரைப் பயன்படுத்தி, ஒப்புதலை மறுத்ததன்மூலம், சமூகநீதிக்காக திராவிடர் கழகத்தின் அறப்போராட்டம் வெற்றி பெற்ற பழைய வரலாறு நினைவுபடுத்தப்படல் வேண்டும்!
சட்டப்படியாக உள்ள
சமூகநீதியைக் காக்க முன்வாரீர்!
உச்சநீதிமன்ற ‘‘கொலிஜியமே’’ கொள்கை அளவில் ஏற்காத நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்கள் ஒடுக்கப்பட்ட, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வழக்குரைஞர்கள், மாவட்ட நீதிபதிகள்மூலம் பதவியிடங்கள் நியமனம் முறை யாக நடத்தப்படவேண்டும் என்பதை எல்லா வழக்குரை ஞர்கள் சங்கங்களும் வலியுறுத்தவேண்டும்.-
இட ஒதுக்கீடு ‘சலுகை’ அல்ல, சமூகநீதி – உரிமை!
சட்டப்படி ‘தகுதி திறமை‘ ஒரு ஜாதியினரின் ஏகபோக உடைமை அல்ல!
எல்லா வழக்குரைஞர்கள் அமைப்பும் இதனை ஒருமனதான தீர்மானமாக்கி, உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதிகளுக்கும், மூத்தவர்களுக்கும் அனுப்பி, சட்டப்படி உள்ள சமூகநீதியை – நியம னங்களை வென்றிட வாருங்கள்.
பசியேப்பக்காரர்களை பந்தியில் பின்னிறுத்தி, புளியேப்பக்காரர்களுக்கு முழு விருந்தளிப்பதை அனுமதிக்கக் கூடாது!
இதைவிட சமூக அநீதி வேறு உண்டா?
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.5.2025