தந்தை பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா என்று கேள்வி கேட்டவர்களில் இரு வகை உண்டு. “இருக்க வேண்டும், இந்த இயக்க மல்லால் இனநலப் பாதுகாப்புக்குக் கேடயம் எது?” என்று கவலையோடு நினைத்தவர்கள் ஒரு வகை.
ஒழிந்து தொலைய வேண்டும்; ராமசாமி நாயக்கரோடு பார்ப்பன எதிர்ப்பு என்ற எரிமலை புஷ்வாணம் ஆக வேண்டும் என்று ‘இலட்சார்ச்சனை’ செய்தவர்கள் உண்டு.
ஆனால் என்ன நடந்தது – நடக்கிறது?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களுக்கு பழனியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி, பேரணி நடத்தி பாடை கட்டித் தூக்கிச் செல்லும் அளவுக்கு திராவிடர் கழகம் தீவிரப் புயலாய் சுழன்றடித்தது.
‘எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்று பார்ப்பனர்கள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு திராவிடர் கழகத்தின் பிரச்சாரமும் செயல்பாடும், களங்களும் களை கட்டின.
மாணவர் கழகம், இளைஞரணி, மகளிர் அணி, மகளிர்ப் பாசறை, தொழிலாளர் அணி என்று வீர நடைபோட்டு வருகிறது.
குடந்தையில் நடத்தப்பட்ட திராவிட மாணவர் கழக பவள விழாவில் அணி வகுத்த மாணவப் பட்டாளமும், இளைஞர் அணி சேனையும் எல்லாத் தரப்பினரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தன.
அரியலூர் ஒரு காலத்தில் கடலாக இருந்ததாக புவியியல் வரலாறு கூறுகிறது. கடந்த 2022 ஜூலை 30இல் அதே அரியலூரில் நடைபெற்ற இளைஞரணி மாநாடும் பேரணியும் மீண்டும் அரியலூரை கருங்கடலாய் உருமாற்றியது. செஞ்சியில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாடு (19.6.2022) தாம்பரத்தில் நடைபெற்ற கழகத் தொழிலாளரணி மாநாடு (20.5.2023) திராவிடர் கழகத்தின் எழுச்சியைப் பறைசாற்றின.
சங்பரிவார்களின் ஆட்டபாட்டமும், ஒன்றிய பா.ஜ.க. பாசிச அரசின் அராஜகமும், மதவாத நச்சுப் பாம்பாய் படம் எடுத்து ஆடும் கோரமும், இளைஞர்கள் இயக்கத்தை நோக்கி ஈர்க்கப்படும் ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டன.
ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத் திற்குப் பின் (13.5.2023) கழகத்தின் அனைத்து அணிகளும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கின்றன.
வாரா வாரம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளில் இருபால் இளை ஞர்களும், மாணவர்களும் ஆர்வமோடு பங்கெடுத்து வருகின்றனர்.
அடுத்து ஜூன் 28 முதல் ஜூலை முதல் தேதி வரை குற்றாலத்தில் பயிற்சிப் பட்டறை 44 ஆம் ஆண்டாக நடைபெற உள்ளது.
90 வயதிலும் தலைவர் வீரமணி அவர்கள் 30 நாள் 40 நாள் என்று தொடர்ப் பிரச்சாரம் செய்கிறார். பிரச்சாரம் – போராட்டம் என்ற இவ்விரண்டும் தானே கழகத்தின் அணுகுமுறைகள்!
இன்றைக்கு இந்திய அரசியல், சமுதாயக் களம் தந்தை பெரியார் பிறந்த திராவிடப் பூமியாகிய தமிழ் மண்ணைத் தான் எதிர்பார்க்கிறது.
பாசிச பா.ஜ.க. சித்தாந்தத்தை சம்ஹாரம் செய்ய உரிய தத்துவம் தந்தை பெரியாரியல் தானே!
என்னென்னமோ செய்து பார்த்தும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்களின் பருப்பு இந்த மண்ணில் வேகாது என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டு விட்டதே!
மறைந்த சமூக நீதிக் காவலர் நமது மதிப்புக்கும், அன்புக்கும் உரிய வி.பி. சிங் அவர்கள் சொன்னாரே!
“சமூக நீதிக்கு ஆதரவான அனைவரும் ஒன்றை உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் அனைத்து சமூகநீதி ஆதரவாளர்களும் ஒன்று சேர்ந்து, ஹிந்து மதவெறி சக்திகளின் சவாலை சந்திக்க வேண்டும். மதவெறி சக்திகளின் முக்கிய கேந்திரமாக விளங்கும் உத்தரப்பிரதேசத்தில் அவர்களின் முதுகெலும்பை நாம் முறித்ததாக வேண்டும். மரியாதைக்குரிய சந்திரஜித் அவர்கள் நான் முன்னின்று நடத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் இது தனி மனிதனால் செய்யக் கூடிய காரியமல்ல. நண்பர் வீரமணி அவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, அழைத்துச் செல்லும் “கொறடா” ஆவார். அந்தத் தகுதி அவருக்குத்தான் உண்டு. எனவே இனியும் காலம் தாழ்த்தாது நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
நான் திரு. வீரமணி அவர்களையும், அவரது இயக்கத்தவர் களையும் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன். அவர்கள் சுயநலமற்ற தொண்டினைத் தரக் கூடியவர்கள்” என்று முழங்கினாரே! எப்பொழுது அந்த முழக்கம்? இன்றைக்கு 28 ஆண்டுகளுக்கு முன்பு! (டில்லி பெரியார் விழா – 19.9.1995).
பாசிசத்தைவீழ்த்தும் பெரியார் கொள்கை என்னும் வெடி மருந்து பாட்னாவில் வெடிக்க ஆரம்பித்துள்ளது.
‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஆட்சியில் அமர்வதற்கு முன்னரே பட்டாங்கமாய்ப் பிரகடனப்படுத்தி விட்டாரே!
அன்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி எங்களை வழி நடத்துவது பெரியார் திடல் என்று பீரங்கி முழக்கம்’ செய்தாரே!
ஏன்; முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களே “தாய் வீட்டைப் பார்த்து கற்றுக் கொண்டேன்” என்று சொன்னதற்குப் பிறகு (திருச்சி – 29.9.2007). வேறு என்ன வேண்டும்?
90இல் 80 காணும் வரலாற்று வைர ஒளி வீசும் இந்நாளில் (27.6.1943) நமது தலைவர் ஆசிரியர் தொண்டர்க்குரிய அய்ந்து இலக்கணத்தை நெஞ்சில் ஏற்றி, பெரியார் பணி செய்து கிடப்பதே நம் வாழ்வு என்று உறுதி கொள்வோம்!
1) இன்பமும், துன்பமும் ஒன்றாகக் கருதுபவர்கள்.
2) ‘வாழ்க’, ‘ஒழிக’ என்ற இரண்டையும் ஒன்றாக ஏற்றுக் கொள்பவர்கள்.
3) சடங்கு சம்பிரதாயங்களுக்கு ஆளாகாதவர்கள்
4) எந்த நிலையிலும் உறுதி குலையாதவர்கள்
5) பற்றற்ற உள்ளம் படைத்தவர்கள்.
கழகத்தின் எல்லா அணிகளுக்கும் இவ்வைந்தும் தான் அணி கலன்கள்!
1991இல் அமெரிக்காவின் மில் வாக்கி நகர் செயின்ட் மேரிஸ் மருத்துவமனையில் டாக்டர் பட்லி ஜான்சன் நமது தலைவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்தார்.
இது போல அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மேலும் 10 ஆண்டுகள்தான் ஆயுள் என்று மருத்துவர்கள் சொல்வதுண்டு. அதற்கு மேல் மூன்று மடங்கு உழைப்புத் தேனியாக தமிழ்நாட்டை வலம் வரும் வியப்புக் குறியாகப் பார்க்கப்படுகிறார். மும்மடங்கு மட்டும் அல்ல, மேலும் பல மடங்கு வாழ்ந்து காட்டுவார். கழகத்தையும் நாட்டையும் வழி நடத்துவார் என்பதில் அய்யமில்லை.
அவருடைய ஒவ்வொரு நொடியும் ‘பெரியார் உலகத்தை’ நோக்கியே இருக்கிறது. தோள் கொடுப்போம் – வெற்றி பெறுவோம்.
வாழ்க பெரியார்!
வாழ்க ஆசிரியர்!!
நாடு வாழ – அவர் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்!