சென்னை, மே 8- நடப்பாண்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடியில் வங்கிக்கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை
சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்கள் – ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (6.5.2025) நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாடு, அனைத்து துறைகளிலும் சிறந்த இடத்தை, முதல் இடத்தை நோக்கி எப்படி சென்றுகொண்டு இருக்கிறதோ, அதேபோல விளையாட்டுத்துறையிலும் இந்தியாவிலேயே முதலிடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
விளையாட்டு வீரர்கள் விளையாடு வதற்காக ஒரு நாட்டுக்கு செல்கிறார்கள் என்றால், அவர்களுடைய பயண செலவு, தங்குகின்ற செலவு, விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான செலவு முழுவதையும் நம்முடைய அரசே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக ஏற்றுக்கொண் டது. இதுவரை கிட்டத்தட்ட 680 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.17 கோடி தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக ‘ஸ்பான்சர்’ வழங்கப்பட்டு உள்ளது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு…
அதேபோல், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீடு முறையை செயல் படுத்துங்கள் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இதற்கான அரசாணை 2019ஆம் ஆண்டு போடப்பட்டது என்றாலும், அவர்கள் வெறும் 3 பேருக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு கொடுத்திருந்தார்கள்.
ஆனால், நாம் 104 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை கொடுத்திருக்கிறோம். கடந்த ஆட்சியில் 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுஆட்சியில் ரூ.348 கோடி செலவில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளார்கள். இந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ரூ.545 கோடி செலவில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது. இது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம்.
மேலும், சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் மூலமாகவும் பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத் திற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 14 ஆயிரத்து 744 கோடி ரூபாய் மதிப்பில் 1,253 பணிகள் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகள் எந்த கட்சி சார்பும் இல்லாமல் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பிரிவை கடந்த ஆண்டு தொடங்கினோம். இந்த திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினோம்.
வங்கிக்கடன்
இதனால், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் போட்டி தேர்வு பிரிவு தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 47 மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். இந்த ஆண்டு 50 மாணவர்கள் வெற்றி பெற்றார்கள். தி.மு.க. அரசு அமைந்த முதல் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக்கடன் இணைப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். மகளிர் சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் என எல்லோருக்கும் எல்லாம் என்ற அனைவருக்குமான அரசாக, திராவிட மாடல் அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.