தாவரங்களில் உள்ள புரதம் மாமிசப் புரதத்தை விட தரம் குறைந்தது என்று நம்பப்பட்டது. ஆனால் சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இலினொய்ஸ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இரண்டு வித புரதங்களையும் நம் உடல் ஒன்று போலவே ஏற்கிறது என்று தெரியவந்துள்ளது.
சீன பாரம்பரிய மருத்துவத்தில் நீண்ட காலப் பயன்பாட்டில் இருப்பது ஹிமாலய காளான். இதிலுள்ள கார்டிசெபின் எனும் வேதிப் பொருளை புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதிவேகத்தில் இயங்கும் ட்ரோன்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினை தரையிறங்கும்போது ஏற்படும் தடுமாற்றம் தான். தென்கொரிய நாட்டைச் சேர்ந்த பொஹாங் பல்கலை. ஆய்வாளர்கள் பறக்கும் அணில்களைப் போல் இறக்கையுடன் கூடிய ட்ரோனை உருவாக்கி உள்ளனர். இவை தடுமாறாமல் தரையிறங்குகின்றன.
மனிதர்களால் அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்கள் பல உடைந்து குப்பைகளாக வானத்தில் சுற்றிக் கொண்டு உள்ளன. இவற்றின் மொத்த எடை 6,600 டன் என்று அய்ரோப்பிய விண்வெளி நிறுவனம் கணக்கிட்டுள்ளது. இந்தக் குப்பைகளை நீக்குவதற்குப் பல்வேறு நாடுகள் முயற்சிகள் எடுத்து வருகின்றன.