ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம்
சில பாடங்கள்
அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம்
உ |
லகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியைச் செய்து வரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களின் நீண்டநாள் திட்டங்களில் ஆஸ்திரேலியாவில் தந்தை பெரியாரின் தத்துவ முழக்கம் ஒலிக்க வேண்டும் என்பதும் ஒன்று. அதை நிறைவேற்றும் வாய்ப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் அமைந்தது. ஆஸ்திரேலியா பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம்( Periyar Ambedkar Thought Circle Australia) என்ற அமைப்பின் சார்பாக நியூ சவுத் வேல்ஸ்,குயின்ஸ்லேண்ட்,மற்றும் விக்டோரியா ஆகிய மூன்று மாநிலங்களில் நடத்தும் பொதுவெளி நிகழ்வுகளில் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
அந்தப் பயணத்தில் ஆசிரியருடன் நானும் பங்கேற் றது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கொள்கைப் பயிற்சி யாகும். ஆசிரியருடன் பயணம் செய்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வும் பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய கொள்கைப் பாடமாகவும் வெற்றியாளர்களாக விரும்பும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடமாகவும் அமைந்தது. அவற்றை நமது தோழர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பாடம் 1 : உறுதிப்பாடு – ஈடுபாடு
ஆசிரியரின் வயது தொன்னூற்றி இரண்டு. உடலுக்கு ஓய்வும் மனதிற்கு அமைதியும், உழைத்தது போதும் என்ற எண்ணமும் தான் இந்த வயதிற்கு இயல்பானது. வாழ்ந்ததே போதும் என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், ஆசிரியருக்கோ இன்னும் பல வேலைகள் பாதியில் இருக்கின்றன. புதிய திட்டங்கள் சிந்தனையில் இருக்கின்றன. ஒரு ஆண்டிற்குள் இது மூன்றாவது வெளிநாட்டுப் பயணம். 2024 ஆகஸ்டு மாதம் இலங்கைப் பயணம், செப்டம்பரில் ஜப்பான் பயணம். 2025 மார்ச் மாதம் ஆஸ்திரேலியா பயணம். அவரது உடல்நிலை ஒத்துழைக்குமா என்ற கேள்வி மற்றவர்களுக்குத்தான் தோன்றியது. ஆசிரியருக்கு அது பற்றிய கவலையே இல்லை. ‘பிரச்சாரம்தான் முக்கியம்’. எனினும் அவரது உடல்நலன் கருதி கபிலன் அன்புராஜ் உடன் வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆசிரியரின் முதல் நிகழ்ச்சி நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் தலை நகரான சிட்னியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சென்னைக்கும் சிட்னிக்கும் இடையிலான தூரம் 9125 கிலோ மீட்டர். ( 5670 மைல்). சென்னையில் இருந்து சிட்னிக்கு விமானம் மூலம் நேரடியாக இடைநில்லாப் பயணம் செய்தால் விமானம் பறக்கும் நேரம் 15 மணி 20 நிமிடங்கள். அவ்வளவு நேரம் தொடர்ச்சியாகப் பயணம் செய்யக் கூடாது என்பதால் மார்ச் 7 ஆம் ஆம் தேதி சென்னையிலிருந்து சிங்கப்பூர் சென்றார். இரண்டு நாட்கள் ஓய்விற்குப் பின் அங்கிருந்து 11 ஆம் தேதி இரவு புறப்பட்டு 12.03.2025 காலை சிட்னி விமான நிலையம் வந்து சேர்ந்தார். நான் மார்ச் 9 ஆம் தேதி புறப்பட்டு 10 ஆம் தேதி காலை சிட்னி சென்று விட்டேன். தோழர்களுடன் ஆசிரியரை வரவேற்க விமான நிலையம் சென்றிருந்தேன்.
சிங்கப்பூரில் இருந்து சிட்னிக்கு வர பதிமூன்று மணி நேரம் விமானப் பயணம். வயதில் இளையவர்கள் கூட சோர்ந்து விடுவது இயற்கை. ஆசிரியருக்கும் உடல் களைப்பு இருந்தாலும் விமான நிலையத்தில் அவரை வரவேற்கக் காத்திருந்த தோழர்களைக் கண்டவுடன் களைப்பெல்லாம் பறந்து, உடல் சோர்வும் அவருக்கு மறந்து போய்விட்டது. ஆசிரியரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தவர்கள், ஆஸ்திரேலியா பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவரான முனைவர் அண்ணாமலை மகிழ்நன் அவர்கள் திராவிடர் கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஆரூண் அவர்கள் பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர். ஆஸ்திரேலியாவில் Green’s New South Wales Party என்ற அரசியல் கட்சியில் பன்முக பண்பாட்டு குழுவின் ஒருக்கிணைப்பாளர் (Multy Cultural Committee). தோழர் இனியரசன் சென்னையில் பணியாற்றியவர் திராவிடர் கழக செயல்பாடுகளில் பங்கேற்றவர், அவர் தன் இணையரான ரேகா , மகள் நெறியா, மகன் தமிழ் ஈவெரா ஆகியோருடன் வந்திருந்தார். தோழர்.பொன்ராஜ், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர். நெல்லை மாவட்டம் ஆறுமுக நேரியைச் சேர்ந்தவர். சிட்னியில், சொந்தத் தொழில் நடத்தி வருகிறார். பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர். நாமக்கல் மாவட்டம் பேளுக் குறிச்சியைச் சேர்ந்தவர். பி.இ. பட்டதாரி. கட்டடப் பொறியாளர். தோழர் கோகுலன் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்பாட்டாளர், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கி, தற்போது சுற்றுலா ஒருங்கிணைப்பாளராகத் திறம்பட செயலாற்றி வருபவர். இவர்களுடன் இங்கிலாந்திலிருந்து தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆசிரியருடைய பிரச்சாரப் பயணங்கள் பற்றியும் அறிந்து கொள்வதற்காக புவனா என்ற மாணவரும் வந்திருந்தார். அனைவரும் ஆசிரியரை விமான நிலையத்தில் பெருமகிழ்வோடு வரவேற்றனர்.
தோழர்களின் அன்பான வரவேற்பை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் உரையாடியபடி ஆசிரியர் தங்க வேண்டிய (Meriton Suits), என்ற கட்டடத்தின் 39 ஆவது மாடியில் இருந்த அறைக்கு வந்து சேர்ந்தார். நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளின் விவரங்களைக் கேட்டு ஒரு மாணவர் போல அவற்றை மனதில் பதிய வைத்துக் கொண்டார். அந்த நிமிடம் முதல் மீண்டும் சிங்கப்பூர் விமானம் ஏறும்வரை ஆசிரியருக்கு ஓய்வு இல்லை.
மார்ச் மாதம் 12 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை ஆசிரியர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் பல அதிசயங்களை நிகழ்த்தின என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறி வாழ்ந்து வரும் ஏராளமான இயக்கக்குடும்பத்தினரை இப்பயணம் ஒருங்கிணைத்தது. “திராவிடத்தால் உயர்ந்தோம்” என்ற பெருமையுடன் கூறும் புதிய இளைஞர்களை சந்திக்கும் வாய்ப்பினை உருவாக்கியது. அவை அனைத்தையும் விட அதிசயம் என அனைவரும் கண்டது ஆசிரியரின் மனவலிமையைத்தான்.
இன்றிருக்கும் இளைஞர்கள் பலர் அவரது மிடுக்கான தோற்றம் வேகமான நடை, சுற்றிச் சுழலும் பிரச்சாரப் பயணங்கள், பலமுனைச் செயல்பாடுகள், விடுதலை ஆசிரியர் பணி, அறிக்கைகள், போராட்டங்கள், மாநாடுகள் பொதுக் கூட்டங்கள் என திராவிடர் கழகத்தின் முழு வடிவமாக அவரைக் கண்டவர்கள். “பெரியார் உலகமயம்: உலகம் பெரியார்மயம்” என்ற கனவை நிறைவேற்றும் பொறுப்போடு, ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு “மனித இயந்திரம்” என்றுதான் ஆசிரியரை சொல்லமுடியும். மனித உடலுக்கு ஏற்படும் சிக்கல்களை மருத்துவ அறிவியல் சரி செய்து விடும். பழுதுபட்ட உள் உறுப்புகளுக்கு செயற்கை மாற்று உறுப்பைப் பொருத்திக் கொண்டு மனிதர்கள் நீண்டகாலம் வாழும் வாய்ப்பை அறிவியல் உருவாக்கும் என்று ஆசிரியர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார். ஆனால் அந்த வாய்ப்பு இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. எனவே பழுது பார்க்கப்பட்ட இதயத்துடனும், பல அறுவை சிகிச்சைகளைத் தாங்கிய உடலுடனும், பை நிறைய மருந்து மாத்திரைகளுடனும் தான் தனது 92ஆம் வயதில் ஆசிரியர் பயணம் செய்து வருகிறார்.
அதிலும் தொடர்ந்து பதினைந்து நாட்கள் பயணம். மூன்று மாநிலங்களில் நிகழ்ச்சிகள். (நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் தலை நகரான சிட்னி, குயின்ஸ்லேண்ட் மாநிலத்தின் தலைநகரான பிரிஸ்பேன் மற்றும் கோல் கோஸ்ட், விக்டோரியா மாநிலத்தின் தலைநகரான மெல்போர்ன்) இடையில் ஆஸ்திரேலியாவின் தலை நகரான ‘கேன்பரா’ சென்று அங்கு அமைந்துள்ள ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதையும் தவிர்க்கவில்லை . அங்கும் குடும்பச் சந்திப்புகள் நடந்தன. ஆனால் இத்தனையும் தாங்கும் வலிமை இன்று அந்த உடலுக்கு இல்லை. சிட்னியில் வெயில், பிரிஸ்பேனில் மழைக்கு பின்வரும் சிலுசிலுப்பு, மெல்போர்னில் 12 டிகிரி குளிர், மீண்டும் சிட்னியில் வெயில், என மாறி மாறி வரும் தட்பவெப்ப நிலைகளில், அடிக்கடி விமானப்பயணத்தினால் காதுக்குள் ஏற்படும் அழுத்தம், வலி, உணவு மாற்றங்களால் உண்டாகும் வயிற்றுப் பிரச்சனைகள் என ஒய்வுக்கு ஏங்கும் உடலுடன் தான் ஆசிரியர் பயணம் செய்தார். நிகழ்ச்சிகளில் எழுச்சி உரை ஆற்றினார், தோழர்களுடன் உரையாடினார். எப்படி இது சாத்தியமாகிறது?! என்ற கேள்வி ஆசிரியரை சந்தித்த ஒவ்வொருவர் மனதிலும் எழுந்தது.
ஆசிரியர் சிட்னியில் தங்கி இருந்த நாட்களில் அவரை பல தோழர்கள் சந்தித்தனர் தோழர் தேவிபாலா, தோழர் தினகரன் செல்லையா, ‘சனாதன லீக்ஸ்’, ‘அறியப்படாத இந்து மதம்’ ஆகிய நூல்களில் ஆசிரியர். தனது கடும் உழைப்பினால் ‘இந்து மதம்’ எனும் பார்ப்பன ஆதிக்க நிறுவனத்தின் மூலநூல்களைத் தேடி, ஆய்ந்து கிடைத்தற்கரிய ஆவணங்களை, நமக்கு அறிவாயுதமாக அளித்தவர். அஞ்சப்பர் உணவகத்தின் உரிமையாளர் தோழர் தாமோதரன், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த முனைவர் கருணாநிதி ஆனைமுத்து, தன் இணையருடன் வந்து ஆசிரியரைச் சந்தித்த தோழர் கோவிந்தராஜ் நாராயணசாமி, திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் முத்துலட்சுமி – இரத்தினசாமி அவர்களின் குடும்பத்தினர், ஆனந்த் அனிதா, உமா மூவரும் சிட்னியில் பணியாற்றுபவர்கள். இப்படி வரிசையாக தோழர்கள் வந்து ஆசிரியரைப் பார்த்து பாராட்டும், நன்றியும் தெரிவித்து உரையாடிய காட்சிகள் தன்னலமற்ற தொண்டின் பயன் இது தான் என்பதை உணர்த்துவதாக இருந்தது.
ஆசிரியரை சந்தித்த தோழர்கள் ஆசிரியருடன் உரையாடியபோது, அவர்களது சொந்த ஊர், வேலை, பெற்றோர் விவரம் ஆகியவற்றைக் கேட்டு அக்கறையோடு அவர்களுக்கு ஆலோச னைகளை வழங்கினார் ஆசிரியர். அறிமுகம் செய்துகொள்ளும்போது, பொதுவாக தங்கள் ஊர் இருக்கும் மாவட்டத்தின் பெயரைச் சொல்வதுதான் வழக்கம். அப்படி சொன்னவுடன். உங்கள் ஊரின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்பது ஆசிரியரின் வழக்கம். குறிப்பாக சிறு கிராமமாக இருந்தாலும். அந்த ஊரின் பெயரைச் சொன்ன உடன், அந்த ஊரில் வாழ்ந்த பெரியார் தொண்டர்களின் வரலாறு, அங்கு நடந்த கூட்டங்கள், அந்த ஊருக்குச் சென்று வந்த அனுபவம் என்று ஆசிரியர் கூறும் விவரங்கள் கேட்பவரை வியப்பின் எல்லைக்கே கொண்டு செல்லும். பல செய்திகள் ஆசிரியரின் இளம் வயதில் நடந்தவையாக இருக்கும். 70,75 ஆண்டுகளுக்கு முந்தைய செய்திகளை அவர் விவரிக்கும் போது, அக்காட்சி நம் கண்முன் நடப்பதைப் போல் இருக்கும். ஆங்கிலத்தில் இதனை Picturesque Description என்றும் அந்த நினைவாற்றலுக்கு Photographic Memory என்றும் பெயர்.
ஆஸ்திரேலியாவிற்கு வந்த மறுநாளே 13.03.2025 அன்று சிட்னியில் இயங்கும் SBS எனும் அரசு வானொலிக்காக திரு. ரேமண்ட செல்வராஜ் அவர்களும், திரு.குலசேகரம் சஞ்சயன் அவர்களும் ஆசிரியரை பேட்டிகண்டனர். சூடும் சுவையுமாக நடைபெற்ற சந்திப்பு. சமரசமில்லாத கேள்விகள்,சற்றும் தயங்காத பதில்கள். அதுவே ஆஸ்திரேலியாவில் ஆசிரியரின் முதல் நிகழ்ச்சியாக அமைந்தது. அந்த பேட்டியிலும் அதே கேள்வி கேட்கப்பட்டது. மீண்டும் சிட்னி விமான நிலையத்தில் வழி அனுப்பிவைக்கப்படும் வரை ஒவ்வொரு பொது, தனி சந்திப்பிலும் ஆசிரியர் அவர்களிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி அதுதான். “இந்த வயதில் எப்படி இவ்வளவு தீவிரமாகச் செயல்படுகிறீர்கள்”?!
92 வயதில் இத்தகைய சுற்றுப் பயணமும் தொடர் நிகழ்ச்சிகளும் உங்கள் உடல் நலனை பாதிக்க வில்லையா?” என்பதே.
ஒவ்வொருவரும் தங்கள் வியப்பை வினாவாக்கி ஆசிரியரிடம் விடையை எதிர்பார்த்து நின்றனர். இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் ஆசிரியரின் ஒரே விடை. தந்தை பெரியாரின் பணி முடிக்க என் வாழ்வை ஒப்படைத்துக் கொண்டேன். ஏற்றுக் கொண்ட அந்த பணியில் உறுதிப்பாடு – ஈடுபாடு இரண்டும் தான் எனது செயல்பாட்டிற்கு காரணம். ஆங்கிலத்தில் அதனை “Commitment and Involvement” என்று எடுத்துக் கூறியும் விளக்கினார்.
அந்தக் கேள்விக்குப் பின் இருக்கும் வியப்பு இயல்பானது. அதற்கு ஆசிரியர் கூறும் பதில் வெறும் விடையல்ல வாழ்க்கைப் பாடம்.
– தொடரும்