உண்மையும் – போலியும்!

viduthalai
2 Min Read

ஆண்டுக்கணக்கில் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே கீழ்மத்திய மராட்டியத்தின் (இன்றைய அகமதுநகர்) மலைத்தொடரில் மலையைக் குடைந்து புத்தரின் விகாரைகள் கட்டப்பட்டன. இவை இன்று அஜந்தா எல்லோரா குகை என்று அழைக்கப்படுகின்றன.

அதில் ஒரு குகையில் உட்பகுதியில் மண்டபத்திற்கு மத்தியில் உள்ள புத்தரின் முகத்தில் புத்தரின் பிறந்த நாளான புத்த பூர்ணிமா அன்று சூரிய ஒளி படுமாறு மிகவும் தொழில்நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள மலையின் இடைவெளியில் குறிப்பிட்ட கோணத்தில் விழும் சூரிய ஒளியை சரியாக புத்த பூர்ணிமா அன்று குகையின் நடுவில் உள்ள புத்தர் சிலையின் முகத்தில் விழும் தொழில் நுட்பம் இன்றும் உலகையே வியக்க வைக்கிறது. இந்த ஆண்டு மே 12 ஆம் தேதி நிகழப்போகும் இந்த அறிவியல் நிகழ்வைக்கான மேலை நாடுகளில் இருந்தும், கீழை நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் அஜந்தாவில் வந்து குவியத்துவங்கியுள்ளனர்.

இந்த சூரிய ஒளி அறிவியலை அப்படியே காப்பி அடித்து அயோத்தியாவில் கட்டப்பட்ட ராமன் சிலையின் மீதும் ராமநவமி அன்று சூரிய திலகம் போல் விழும்படி செய்யப்பட்டது, ஆனால் முதல் ஆண்டே சுதப்பியது; தொழில் நுட்பக் கோளாறைக் காரணம் காட்டி அடுத்த ஆண்டு திலகம் வடிவில் சூரிய ஒளி ராமன் சிலைமீது படுமாறு சரிசெய்யப்படும் என்றது கோவில் நிர்வாகம்.

இவை எல்லாம் அறிவியல் சார்ந்தவைகளே தவிர, கடவுள் சக்தியின் காரணமாக இந்த அற்புதம் நடந்தது என்று கூறுவது எல்லாம் வெறும் கதை அளப்பே!

கடவுளுக்குச் சொல்லப்படும் சர்வ சக்திகளை எடுத்துச் சொல்லி,  கடவுளின் இருப்பை நிலை நாட்ட முடியாத நிலையில், அறிவியலைப் பயன்படுத்தி, இத்தகைய நிகழ்வுகளை நடத்திக் காட்டி, ‘கடவுளின் சக்தியைப் பார்த்தீர்களா?’ என்று கதைப்பது எல்லாம் அசல் மோசடி வேலையே!

கவுதமப் புத்தர் அரசர் குலத்தில் பிறந்தவர்! தன் அறிவாற்றலால் அரிய கருத்துகளை மானுடத்திற்கு வழங்கிய பேரறிவாளர்.

அத்தகையவரை ஆரியம் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கற்பித்து, அவரின் போதனைகளை மண்ணுக்குள் புதைத்துவிட்டனர்.

புத்தர் விகாரில் சூரிய ஒளி விழும் அளவுக்கு அந்தக் காலத்தில் தொழில்நுட்பத்தோடு வடித்த ஏற்பாடு அசாதாரணமானது. அதனைப் பார்த்து காப்பியடிக்கும் வகையில், அயோத்தியில் ராமன் கோவிலில் ராம நவமியன்று ராமன் சிலைமீது சூரிய ஒளிபட ஏற்பாடு செய்துள்ளனர். அதையாவது ஒழுங்காகச் செய்ய முடியவில்லை, அந்தோ பரிதாபம்!

 – மயிலாடன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *