ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து தமிழ்நாடு உள்பட சமூகநீதிக்கு ஆதரவான மாநிலங்கள் குரல் கொடுத்த போதும், ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பிய போதும் கிண்டல் அடித்தும், என்ன ஜாதி என்று தெரியாதவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார் என்று ராகுலை அவமானப்படுத்திக்கொண்டும் இருந்த பாஜக பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை திடீரென்று ராகுலிடம் சரணடைந்துள்ளனர்.
இதோ அவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து கூறிய அறிக்கைகள், பேட்டிகள்,
****
“Ek hai, to safe hai.” – இதன் பொருள், “ஒன்றாக இருந்தால் தான் பாதுகாப்பாக இருப்போம்.” “ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற பேச்சின் மூலம் காங்கிரஸ் மக்களை பிரிக்க நினைக்கிறது.” – “காங்கிரஸ் ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மக்களை பிரிக்க முயல்கிறது.” “ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை கோருபவர்கள் நகர்புர நக்சலைட்டுகள் – நரேந்திர மோடி.”
****
“சிலர் பிரிவினைவாத கருத்துகளை (ஜாதிவாரி கணக்கெடுப்பு) பேசுகிறார்கள். நாம் அனைவரும் ஹிந்து; இதை உடைத்து ஹிந்து ஒற்றுமையை சிதைப்பதே அவர்களின் நோக்கம். இந்த அரசு அவர்களின் நோக்கத்திற்கு பலியாகாது.” ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
****
“ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி யார் பேசினாலும் ஓங்கி ஒரு உதை கொடுப்பேன்” என்று 15.03.2025 அன்று நாக்பூர் தனியார் கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.
****
“ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, நிர்மலா சீதாராமன் கேலிசெய்யும் சைகைகளை காட்டி சிரித்துக் கொண்டிருந்தார்.”Nirmala Sitharaman was laughing in Parliament when RaGa was talking on caste census’’
****
“மகாராட்டிரா தேர்தல் பரப்புரையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய போது, உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் ‘படேகே தோ கடேங்கே’ (ஜாதியாக பிரிந்தால் வெட்டுவார்கள்) என்றார்.”
****
“நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என்ற உயர்ந்த சிந்தனையுடன், நம் முன்னோர்கள் ஜாதி தொடர்பான பேச்சுக்களைத் தவிர்த்து, சுதந்திரத்திற்குப் பிறகு வளர்ச்சிப் பாதையில் கவனம் செலுத்தினர். மோடியும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறார். அதற்கு தடை போட, பிரிவினை பேச்சுக்களை (ஜாதிவாரி கணக்கெடுப்பு) சிலர் பேசுகின்றனர்,” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
****
“ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது முட்டாள்களின் சிந்தனை,” என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்தார்.
****
“இந்தியாவில் ஜாதி அமைப்பு தற்போது மங்கிய நிலையில் உள்ளது. மோடி தலைமையில், இந்தியா வளமான எதிர்காலத்தை நோக்கி வேகமாக முன்னேறுகிறது. அதை தடுத்து நிறுத்தி, மக்களை மீண்டும் பிரிக்கும் முயற்சியே இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு,” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஸு திரிவேதி கூறினார்.
****
ஜாதிவாரி கணக்கெடுப்பு முட்டாள்களின் பிரிவினைவாத மூளையில் உதித்த சாக்கடை – கங்கனா ரணாவத், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்.
****
“காங்கிரஸ் கட்சி ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோருவது ஆங்கிலேயர்களின் பிரிவினைவாத கொள்கையின் அடிச்சுவடு ஆகும். தேசத்தை துண்டு துண்டாக சிதைக்கும் செயலே ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் நடைபெறுகிறது. இதைத்தான் ராகுல் காந்தியும் விரும்புகிறார்,” என்று ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தெரிவித்தார்.
இவ்வாறு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்றதும் கனலில் வீழ்ந்த விட்டில் பூச்சியெனத் துடித்தனர்.
ஏதோ ஜாதி ஒழிப்பில் தீவிரவாதிகள் போல தங்களைக் காட்டிக் கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸின் அடிப்படைக் கொள்கையான வருணதர்மத்தை, ஜாதியைக் கட்டிக் காப்பதுதான் ஆர்.எஸ்.எஸின் குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர் எழுதிய ‘ஞானகங்கை’யில் (Bunch of Thoughts) விழுந்து விழுந்து எழுதியுள்ளார்.
இவர்களின் ஜெகத்குருவான காஞ்சி சங்கராச்சாரியார் தீண்டாமை ேமகரமானது என்றவர் தான்.
கேரளாவின் பாலக்காட்டில் முகாமிட்டிருந்த காஞ்சி சங்க ராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியை காந்தியார் சந்தித்தார். தீண்டாமை ஒழிப்புக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். ‘ஹரிஜன ஆலயப் பிரவேசத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்களென்றும், அவர்களுடைய மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாரும் என்று சங்கராச்சாரியார் சொன்னார்.
அத்தகைய மனிதகுல விரோதியை மகான் என்றும் லோகக் குரு என்றும் கூறும், மதிக்கும் கூட்டம் ஏதோ ஜாதி ஒழிப்பு வீராதி வீரர்கள் போல ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக குதியாட்டம் போட்டனர்.
அரசியலில் பின்னடைவு ஏற்படும் என்ற காரணத்தால் இப்பொழுது வழிக்கு வந்துள்ளனர் ‘பேச நா இரண்டுடையாய் போற்றி!’ என்று அண்ணா சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. என்றாலும், இந்த அளவில் வரவேற்கிறோம். நிதி ஒதுக்கீடு செய்து கால வரையறை செய்து, பிழைக்கு இடம் இல்லாமல் இதனைச் செய்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.