காந்தியம்
- அடுத்தாற்போல் திரு.காந்தியவர்கள் விஷயமும் வேறு பல வழிகளில் மகத்தான வெற்றி இருப்பதாக பேசிக் கொள்ளபட்டாலும் அரசியல் சமுதாய இயல் ஆகியவைகளை பற்றிய விஷயங்களில் அவரது அபிப்பிராயங்களில் மிகவும் தாராளமாய் கண்டிக்கப் படத்தக்கதாகி விட்டது. அவருடைய கதர் விஷயமும் சைவத்திற்கும், விபூதி ருத்திராட்சத்திற்கும் என்ன சம்பந்தமோ அதுபோல் காந்திக்கும் கதருக்கும் என்பதாக ஆகிவிட்டது. ஏதோ பார்ப்பனருக்கும் பார்ப்பனியத்திற்கும் அவர் உற்ற துணையாய் இருப்பதாலும் மற்றும் அதுபோலவே தேசியத்தின் பேராலேயே வாழ்ந்து தீரவேண்டிய ஒரு கூட்டத்திற்கும் அவருடைய பெயரை உச்சரிக்க வேண்டியது இன்றியமையாததாய் போய்விட்டதாலும் காந்தி, காந்தி என்கின்ற ஒரு சத்தம் கொஞ்சம் ஊசலாடுகின்றதே தவிர மற்றபடி அவரிடம் இந்நாட்டு மக்களுக்கும் சொந்த பக்தி எவ்வளவோ மாற்றியிருப்பது தானாகவே விளங்கும்.
பண்டைய ஒழுக்கங்கள், முறைகள், மூடப்பழக்க வழக்கங்கள்
- பழைய பழக்கம், வழக்கம் வாரிசு பாத்தியம், பெரியோர் வார்த்தைகள் என்கின்றவைகளின் மூலமாய் இருந்து வந்த மூடப்பழக்க வழக்கங்கள் எல்லாம் அநேகமாய் இப்பொழுது வர வரக் காரண காரியம் சொல்லி பகுத்தறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்திருக்கின்றதா என்று பார்க்கின்ற நிலைக்கு வந்து விட்டது.
செல்வ நிலைமை,
முதலாளி – தொழிலாளி முறை
முதலாளி – தொழிலாளி முறை
- கடைசியாக, பணக்காரர்களுடைய தொல்லை எதிர்பார்த்த அளவுக்கு ஒழியவில்லை. ஆனாலும் அவர்களுக்கும் இறங்குமுகம் ஏற்பட்டு சிறிது சிறிது பொது உணர்ச்சியில் அவர்களுக்கு மதிப்பு குறைந்துவிட்டதென்றே சொல்லுவோம். தொழிலாளி களின் மேல் முதலாளிகளுக்கு இருந்துவந்த ஆதிக்கமும் மறைந்து, தொழிலாளிக்கு வர வர தைரியமும் முதலாளிக்கு வரவர பயமும் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றது. ஆனாலும் வரப்போகும் வருஷத்தில் தெளிவாய் காணக்கூடிய அளவுக்கு இந்தத் துறை இன்னமும் எவ்வளவோ தூரம் முற்போக்கடையும் என்கின்ற தைரியம் இருக்கின்றது என்கின்ற நம்பிக்கைக்கு இடம் இருக்கின்றது.
ஆண், பெண் தன்மை
- ஆண், பெண் தன்மை, இந்த துறையானது குடி அரசு தோன்றுவதற்கு முன் மக்கள் வாயில் பேசுவதற்கும், மனதில் நினைப்பதற்கும் அஞ்சக் கூடிய விஷயங்கள் எல்லாம் குடி அரசு தோன்றிய பின் அடியோடு மாறி, ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்த விஷயத்திலும், எவ்வித வித்தியாசம் இல்லை என்கின்ற உணர்ச்சியையும் ஆண்களுக்கு கட்டுபட்டு அடங்கி பெண்கள் இருப்பது இவருடைய சுயமரியாதைக்கும் குறைவு என்றும் பெண்ணுக்கு ஆண் கட்டுப்பட்டு அடங்கி நடப்பது பெருமையும், நாகரிகமும், முறையும் என்கின்றதுமான உணர்ச்சியும் ஏற்பட்டு விட்டது.
ஆகவே, இந்த துறைகளில் குடிஅரசின் தொண்டு பயனளித்திருக்கின்றது என்று திருப்தியுடனேயே சொல்லுகின்றோம்.
ஆனால், சென்ற வருஷம் அதாவது குடிஅரசின் ஆறாவது வருஷ ஆரம்ப மலரின் தலையங்கத்தில் கண்டது போலவே 6வது வருஷம் முழுவதும் குடி அரசுக்கு முந்திய வருஷங்கள் போன்ற செல்வாக்கு பெருக்கம் இருந்தது என்று சொல்லுவதற்கு இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனாலும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளுக்கும் சென்ற அய்ந்து வருஷத்தைவிட ஆறாவது வருஷத்தில்தான் முக்கிய பதவியும் கவுரவமும் பொதுமக்கள் ஆமோதிக்கும் இனிமேல் அதை எதிர்ப்பதோ, குற்றம் சொல்லுவதோ முடியாத காரியம் என்று அதன் எதிரிகளாய் இருந்தவர்கள் எல்லாரும் எண்ணி, எப்படியாவது அதன் பெயரைச் சொல்லிக் கொள்ளக் கூடிய சவுகரியம் நமக்கும் வந்தால் தேவலாம் என்று கருதும்படியான ஒரு நிலைமை ஏற்பட்டது என்கின்ற விஷயத்தில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை. ஆனால், ஏழாவது ஆண்டின் எதிர்கால நிலையைப்பற்றி எழுதுவதில், அது ஆறாவது ஆண்டைப் போலவே இவ்வருஷ வேலைத் திட்டமும் சற்று கஷ்டமானதாயிருந்தாலும், பத்திரிகை முற்போக்கைப்பற்றி ஆறாவது வருஷம் போல் தடைபடாது என்பதுடன் அதிக முற்போக்கு அடையும் என்கின்ற தைரியமும். நம்பிக்கையும் நமக்கு உண்டு. ஏனெனில், இந்த ஒரு வருஷத்தில் நமது பிரச்சாரம் மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் ஒரு உணர்ச்சியும், அரசியல் கிளர்ச்சியும் சிலர் வைத்திருந்த நம்பிக்கை ஏமாற்றமடைந்து பலனும், இவ்வருஷம் நடக்கப்போகும் அரசியல் (காங்கிரஸ் – காந்தி) பிரச்சாரமும் மற்றும் இரண்டொரு விஷயங்களும் மக்களுக்கு அறிவை ஊட்டி உண்மையை விளக்கித் தெளிவைக் கொடுக்கும் என்கின்ற நம்பிக்கை நமக்குத் தளராமல் இருக்கின்றது.
‘குடிஅரசு’ – தலையங்கம் – 03.05.1931
இத்தகைய கோவில்கள் ஏன்?
தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த வரகூர் என்னும் கிராமத்தில் உள்ள வெங்டேசப் பெருமாள் கோவிலில் பார்ப்பனரல்லாதார் சென்று தரிசனம் பண்ணக்கூடாது என்பது பற்றி அவ்வூர் பார்ப்பனர்களுக்கும்,, பார்ப்பனரல்லாதார்களுக்கும் நீண்டகாலமாக வழக்கு நடைபெற்றது. கடைசியில் சென்னை ஹைகோர்ட்டில், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே முன்பும் ஜஸ்டிஸ் வாலர் முன்பும் விசாரணைக்கு வந்தபோது இருவரும் வேறு வேறு அபிப்பிராயம் கொண்டனர்.
‘ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே’ பார்ப்பன ரல்லாதாருக்கும் தரிசனம் பண்ண உரிமையுண்டு என்று அபிப்பிராயப்பட்டார்; ‘ ஜஸ்டிஸ் வாலர்’, பார்ப்பனரல்லாதாருக்குத் தரிசனம் பண்ணும் உரிமையில்லை என்று அபிப்பிராயப்பட்டார்; ஆகையால் கடைசியாக ஜஸ்டிஸ் வாலர் அவர்கள் அவ்வழக்கை இரண்டாம் முறையாக விசாரித்து, பார்ப்பனரல்லாதார்க்குத் தரிசன உரிமை இல்லை என்று தீர்ப்புக் கூறினார்.
இத்தீர்ப்பைப் பற்றி நமக்கு ஒரு கவலையு மில்லை. பார்ப்பனரல்லாதாருடைய தயவோ ஒத்தாசையோ இல்லாவிட்டால் எந்தக் கோயில் களும் நிலைத்திருக்க முடியாது. சோற்றை வடித்து பொங்கல் புளியோதரைகள் பண்ணி அவற்றைக் கல்லுப் பொம்மையின் முன்பு கொண்டு போய் காட்டியபின் பார்ப்பனர்கள் பங்கு போட்டு எடுத்துக் கொண்டு போகிற ஒரு காரியத்தைத் தவிர, மற்ற எல்லாக் காரியங்களையும் பார்ப்பனரல்லாதார்களே செய்து வருகின்றார்கள். இத்தகைய ஒரு கோயிலுக் குள், பார்ப்பனரல்லாதார் போகக் கூடாது என்று தடுத்துக் கோர்ட்டுக்குப் போகும்படி செய்த பார்ப்பனர்களின் சுய நலத்தையும் அகங்காரத்தையும் உணருகின்ற எந்தப் பார்ப்பனரல்லாதாரும், இனி இது போன்ற கோயில்கள் விஷயத்தில் எந்த வகையிலும் ஒத்துழைக்க முன்வர மாட்டார்களென்றே நம்புகின்றோம். ஆகையால் உண்மையில், பார்ப்பனர்களின் சுயநலத்தையும், அகங்காரத்தையும் ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது கோயில்களைப் பகிஷ்கரிக்க வேண்டிய வேலையேயாகும். தங் களுக்கு உரிமையில்லாத கோயில் சம்பந்த மான எந்த வேலைகளையும் செய்ய மறுத்து அவைகளைப் பார்ப்பனர்களே செய்து கொள்ளும்படி விட்டுவிட வேண்டும்.
இவ்வாறு கோயில்களைப் பகிஷ்கரிக்க ஆரம்பித்தால், கோயில்களே அனேகமாக ஒழிந்து போய்விடும். நமது மக்களுக்குக் கோயில்களின் மேல் உள்ள மயக்கம் ஒழிந்தால் முக்கால்வாசிமூட நம்பிக்கைகள் ஒழிந்து போகுமென்பதில் அய்ய மில்லை. ஆகையாhல் இனியேனும், கோயில் பிரவேசத்திற்காகப் பாடுபடுகின்றவர்கள். கோயில் களை ஒழிக்கப்பாடுபடுவார்களானால், அதனால் அதிக நலனும், பொருளாதாரச் சிக்கனமும் ஏற்படுமென்பதில் அய்யமில்லை.
– ‘குடிஅரசு’
துணைத்தலையங்கம், 10.4.1932
(தொடரும்)