கடந்த ஏப்ரல் 30, 2025 ஒரு முக்கியமான நாளாக வரலாற்றில் இடம் பெறும். காரணம் ஒன்றிய அரசின் பாரதீய ஜனதா கட்சி அமைச்சரவை மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை ஜாதிவாரியாக செய்வதற்கான கொள்கை முடிவை எடுத்து அறிவித்தது. ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தொடர்ந்து கோரி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்த வெற்றி என்று இதனைக் காணலாம். தமிழ்நாடு சட்டமன்றமும் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கோரி தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதனை நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
உள்ளபடி சொன்னால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையும் ஜாதிகளின் சமூக பொருளாதார நிலை கணக்கெடுப்பை செய்ய 2011ஆம் ஆண்டு முடிவு செய்து அதனை நிறைவேற்றியது. ஆனால் இது பத்தாண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்து நிகழாமல், Socio Economic and Caste Census 2011 என்ற பெயரில் தனியாக நடந்தது. பத்தாண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பிப்ரவரி 9 முதல் 28 வரை நடைபெற்றது. சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு 2011 என்பது 2011, 2012 சில மாநிலங்களில் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது. இதில் பெறப்பட்ட தகவல்களை தொகுப்பதற்குள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், தேர்தலுக்குப் பிறகு பதவியேற்கும் அரசு அதனை வெளியிடும் எனக் கூறப்பட்டது. ஆனால் 2014ஆம் ஆண்டு மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பதவியேற்ற பிறகு இந்த கணக்கெடுப்பில் பல பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி ஜாதிக் கணக்கெடுப்பு குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப் படவில்லை.
உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய அதிக நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள மாநிலங்களிலுள்ள பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகுதிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கோரியதால் 2011ஆம் ஆண்டில் பா.ஜ.க. கட்சியும் நாடாளுமன்றத்தில் இந்த கணக்கெடுப்பை ஆதரிக்கவே செய்தது. காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு கட்சிகளுக்குள்ளும் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தன என்று கூறலாம்.
ஆனால், ஒன்றியத்தில் 2014ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு பதவியேற்ற பிறகு அந்த கட்சி ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கோரிக்கையை கடுமையாக எதிர்த்து வந்தது. தேச நலனுக்கு எதிரான கோரிக்கை, அர்பன் நக்சல்களின் கோரிக்கை என்றெல்லாம் பிரதமரே கூறினார். இந்த நிலையில் திடீரென பா.ஜ.க. அரசு இந்த முடிவை எடுத்திருப்பது பீகார் மாநில தேர்தல்களை முன்னிட்டா, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட முற்போக்குக் கட்சிகளை தேர்தல் களங்களில் சமாளிக்கவா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. எப்படியிருந்தாலும் இது தவிர்க்க முடியாத ஒரு முடிவு என்று கூறலாம். காரணம் வரலாற்றின் திசைவழி அதுதான். அதனைப் புரிந்துகொள்ள இந்த ஆண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டின் முக்கியத்துவம்
காங்கிரஸ் கட்சியில் இயங்கி வந்த பெரியார் அதிலிருந்து விலகி தன் இயக்கத்தை தொடர்ந்தபோது உருவானதுதான் சுயமரியாதை இயக்கம். இது ஒரு அமைப்பாக சில பலர் கூடி அறிவிப்பினை செய்து, பதிவு செய்து உருவான கட்சி அல்ல என்பதால் இயக்கம் எப்போது துவங்கியது என்ற கேள்வி எழுவது இயல்பு. இந்த கேள்வியை எதிர்கொள்ளும் ஆய்வாளர் க.திருநாவுக்கரசு தனது சுயமரியாதை இயக்க வரலாறு என்ற நூலில் பெரியார் ‘குடிஅரசு’ இதழைத் துவக்கிய மே 2, 1925 என்ற தேதியையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்கமாகக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறார்.
இதற்கடுத்தபடி தொடக்கப் புள்ளி என கருதத்தக்க தினங்களாக பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறிய 22.11.1925 நாளும், சென்னை மாகாண பத்தாவது பார்ப்பனரல்லாதோர் மாநாட்டின் தீர்மானம் நிறைவேறிய 26.12.1926 நாளும் அவரால் குறிப்பிடப் படுகின்றன. ஆனால் பெரியாரின் எண்ணங்களை, கொள்கைகளை, சுயமரியாதை இயக்க செய்திகளை தாங்கி வெளிவந்த ‘குடிஅரசு’ ஏடு தொடங்கப்பட்ட நாளையே இயக்கத்தின் தொடக்க நாளாகக் கொள்வது பொருத்தம் என முடிவு செய்கிறார். இதில் அடங்கியுள்ள மற்றொரு முக்கிய பொருத்தம் ‘குடிஅரசு’ என்ற சொல் எனலாம். இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள பெரியார் ஏன் காங்கிரசிலிருந்து விலகினார் என்பதைக் காண வேண்டும்.
பெரியார் வகுப்புவாரி விகிதாசார பிரதிநிதித்துவம் என்ற கொள்கையை காங்கிரஸ் கட்சி ஏற்கவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவருகிறார். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி தயங்குகிறது. பலமுறை இந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் 1925ஆம் ஆண்டு இந்தத் தீர்மானம் விவா தத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராக ரிக்கப்பட்ட விதம் பெரியாருக்கு ஏற்புடையாதாக இருக்காததால் அவர் மாநாட்டிலிருந்து வெளியேறுகிறார். உடனடியாக காந்தியிடமிருந்து விலகாவிட்டாலும் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் தன்னுடைய பார்ப்பனரல்லோதார் நலன் குறித்த அக்கறைகள், பார்ப்பனீய ஆதிக்கம் குறித்த எச்சரிக்கை ஏற்கப்படாததால் காங்கிரசிலிருந்தும், காந்தியிடமிருந்தும் முற்றிலும் விலகுகிறார்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது மக்கள் தொகையில் பல்வேறு சமூகத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாசார முறைப்படி அவர்களுக்கு இடமளிக்கப் படவேண்டும் என்பதாகும். ஒரு வகையில் இட ஒதுக்கீடு என்றாலும், அதற்கும் மேலே அனைத்து சமூகப் பிரிவினர்களும் அனைத்துத் துறைகளிலும், அதிகாரமிக்க பதவிகளிலும் இடம்பெற வேண்டும் என்பதாகும். இந்திய சூழலில் இந்த சிந்தனை முக்கியத்துவம் பெறக்காரணம் பார்ப்பனீய சமூக அமைப்பான வர்ண தர்ம சிந்தனை. பல நூற்றாண்டுகளாக நிறுவப்பட்ட வர்ண தர்ம பழக்க வழக்கங்களால் பார்ப்பனர்களே பெருமளவு நவீன அரசியலில், பொதுமன்றத்தில் ஈடுபடத் தேவையான கல்வியைப் பெற முடிந்தது. இது சமூகத்தில் கடுமையான அசமத்துவத்தை உருவாக்குவதாக இருந்தது.
பெரியார் வைக்கத்தில் கோயிலைச் சுற்றியிருந்த பொதுத் தெருக்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அனுமதிக்கப் பட வேண்டும் என்ற போராட்டத்திலும், சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பன சிறுவர்களுக்கு தனியாக உணவளிக்கும் முறையை கண்டித்த இயக்கத்திலும் ஈடுபட்டிருந்தார். எந்த அளவு பார்ப்பனர்களின் சமூக ஆதிக்கம் சமூக விலக்கங்களை நிறுவனப்படுத்தியுள்ளது என்பதை முழுமையாக உணர்ந்தார். இந்த காரணத்தால் அரசியலில், அரசு பதவிகளில் வகுப்புவாரி பிரதிநித்துவம் உருவாக்கப்படாவிட்டால் புதிய மக்களாட்சி ‘குடிஅரசு’ உருவாவதில் பொருளில்லை என்பதை உணர்ந்திருந்தார்.
பெரியார் ஆட்சி அதிகாரத்தினை நோக்கி அரசியலில் ஈடுபடவில்லை. அவர் விரும்பியிருந்தால் இதே வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை வலியுறுத்திய நீதிக்கட்சியில் இணைந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்திருக்கலாம். அல்லது இந்த கோரிக்கையை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்திருக்கலாம். ஆனால் அவர் இந்த கோரிக்கையை எழுப்பியதே காங்கிரஸ் இந்திய சமூகத்தில் நடைபெற வேண்டியமாற்றத்தை உணரவேண்டும், அந்த மாற்றத்தை செயல்படுத்த முன்வரவேண்டும் என்பதற்காகத்தான். அந்த மாற்றம் எத்தகையது என்பதை புரிந்துகொள்வதில்தான் இந்தியாவின் எதிர்காலம் அடங்கியிருந்தது; இன்றும் அடங்கியுள்ளது.
வர்ண தர்மத்திலிருந்து ‘குடிஅரசை’ நோக்கி
உலகின் பல பகுதிகளிலும் மூவடுக்கு சமூகங்கள் இருந்தன. மதகுருமார்கள், பூசாரிகள்ஆகியவர்கள் ஒரு அடுக்கு. அரசர்கள், நிலபிரபுக்கள், போர்வீரர்கள் மற்றொரு அடுக்கு; விவசாயிகள். வர்த்தகர்கள், பணியாளர்கள் கீழடுக்கு. இந்த சமூகங்களிலும் ஏற்றத்தாழ்வு இருந்தது. பிரபுக்குலத்த வர்கள் வம்சாவழி உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள். பிறப்பின டிப்படையில் அவர்கள் தகுதி தீர்மானிக்கப்பட்டது.
இந்தியாவின் வர்ண அமைப்பு இதிலிருந்து சற்றே வேறுபட்டது. வர்ண தர்மத்தின் மூலப்பிரதியான மனு சுமிருதியை வாசித்தால் அதில் கூறப்படும் முக்கியமான கருத்து பிறப்பு என்பது தண்டனை என்பதுதான். அதாவது ஆன்மாக்கள் மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கின்றனவாம். மனிதர்களாகவும், பல்வேறு உயிரினங்களாகவும் பிறப்பெடுக்கின்றனவாம். அவை அந்தந்த வடிவில் செய்யும் நன்மை, தீமைகளுக்கு ஏற்ப அடுத்த பிறவி அமைகிறதாம். இதன்படி ஒரு ஆன்மா அதன் பிறப்பில் மிகுந்த நன்மைகளை செய்தால், அதாவது புண்ணியம் செய்தால், அது பிராமணனாகப் பிறக்குமாம். பாவம் செய்தால் சூத்திரனாகவோ, சண்டாளனாகவோ பிறக்குமாம். அதைவிட பாவம் செய்தால் பல்வேறு விலங்குகளாகப் பிறக்குமாம்
இந்த மறு ஜென்ம, பாவ புண்ணிய கற்பனையின்படி தீண்டாமை உள்ளிட்ட சமூக விலக்கங்களை நடைமுறைப்படுத்துவது பிறப்பிலேயே அளிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றத்தான். அவர்களை பிறருக்கு சமமாக நடத்துவது கடவுள் அளித்த தண்டனையை நிறைவேற்ற மறுப்பதற்குச் சமம். அதாவது கடவுள் கொடுத்த தண்டனை பிறப்பு. அதனை நிறைவேற்றும் ஜெயிலர்கள் பார்ப்பன பூசாரி வர்க்கத்தினர். நீதிபதி ஒருவருக்கு தனிமைச் சிறை கடுங்காவல் என்று சொன்னால் ஜெயலர்தானே அதனை நிறைவேற்ற வேண்டும்? அதுபோல தாழ்த்தப்பட்டவர்களை, பிற்படுத்தப்பட்டவர்களை சமூக விலக்கம் செய்வது, அவர்களை விதிக்கப்பட்ட தொழில்களை மட்டும் செய்யச் சொல்வது பார்ப்பனர்கள் கடமை. வைக்கம் போராட்டத்தின் போது காந்தி நம்பூதிரிகளிடம் நட த்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் இந்த கருத்தைத்தான் கூறுகிறார்கள். கடவுள் அவர்களை அந்த வீதிகளில் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றுதான் தண்டித்துள்ளார். நாங்கள் அதை நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இப்படி ஒரு கோட்பாட்டின் அடிப்படையில்தான் இந்திய படிநிலைச் சமூகம் உருவாக்கப்பட்டது. அதில் பல்வேறு நெகிழ்ச்சிகள் இருந்தன; எல்லா இடங்களிலும் இது முற்றிலும் பின்பற்றப்படவில்லை. ஜாதிகளின் நிலைகள் அவ்வப்போது மாறி வந்தன என்றெல்லாம் சொல்வார்கள். இதெல்லாம் இருக்கலாம். ஆனால் பார்ப்பனர்களை பூசாரி வர்க்கத்தினராக, அரசர்களின் சட்ட திட்டங்களை வகுப்பவர்களாக, நிலபுலங்களை கணக்கிட்டு நிர்வகிப்பவர்களாக இந்திய வரலாற்றில் தோன்றிய பல்வேறு பேரரசுகள் வைத்திருந்தன. ஆங்கிலேயேர்களின் ஆட்சிக்குள் இந்தியா செல்வதற்கு முன் இந்தியாவில் தோன்றிய இரு பெரும் பேரரசுகளான விஜயநகரப் பேரரசு, மராத்தியப் பேரரசு ஆகிய இரண்டிலுமே பார்ப்பனர்களின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. வர்ண தர்ம சமூக அமைப்பு கூர்மையாக நிலைநிறுத்தப் பட்டது.
மராத்திய பேஷ்வா ஆட்சியின் பார்ப்பனீய ஆதிக்கம்தான் அதன் நவீன பொதுமன்ற எதிர்ப்புப் போராளியாக மகாத்மா தோதிபா பூலே (18271890) அவர்களையும், அவர் துணைவியார் சாவித்ரிபாய் பூலே அவர்களையும் உருவாக்கியது. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பெண்களுக்கும் பிரிட்டிஷார் ஆதரவுடன் கல்வி அளித்தார்கள். அவர்கள் வாழ்வை விவரிக்கும் அற்புதமான திரைப்படம் ஒன்று சென்ற மாதம் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டால், அக்கால மராத்திய சமூக நிலையையும், சமகால இந்திய அரசியலுக்கு அதனுடன் உள்ள தொடர்பையும் அனைவரும் புரிந்துகொள்ள இயலும்.
மகாத்மா ஜோதிபா பூலேவும், பாபாசாகேப் அம்பேத்கரும் எந்த மராத்திய பார்ப்பனீய சக்திகளுக்கு எதிர்வினையாக உருவானார்களோ, அதே மராத்திய பார்ப்பனீய சக்திகளால் உருவாக்கப் பட்டவைதான் இந்துத்துவ கருத்தியலும், சங்க பரிவார அமைப்புகளும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய வரலாற்றின் உண்மையான முரண்பாடு என்பது பழைய வர்ண தர்ம சமூக அமைப்பிற்கும், புதிய ‘குடிஅரசி’ன் சமத்துவ நோக்கிற்குமான முரண்பாடுதான். இதைப் புரிந்துகொண்டால்தான் நம்மால் சுய மரியாதை இயக்கத்தின் முக்கியத்துவத்தை அறிய முடியும்.
‘குடிஅரசு’ முதல் இதழிலே பதிவாகியுள்ள ஞானியாரடிகள் பேச்சில் “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கமான “Liberty, Equality, Fraternity” என்பது உலகெங்கும் ‘குடிஅரசு’ உருவாக்கத்தின் முதன்மைத் தத்துவமாக எடுத்தாளப்பட்டு வருவதாகும். இந்திய ஜாதீய சமூகத்தில் ஜாதியிலிருந்து பெறும் சுதந்திரம் என்பதே சமத்துவம் என்பதற்கு வழிவகுக்கும். அதன் பிறகே சகோதரத்துவம் என்ற உணர்வில் தேசிய பொது சமூகம் உருவாக முடியும்.
இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது படிநிலை ஜாதீய சமூகத்தில் நேரடியாக ஜாதி நீக்கம் செய்ய முடியாது. ஏனெனில் படிநிலை அமைப்பு அதனை காத்து நிற்கும். அதனால் முதலில் படிநிலையின் தளங்களில் ஜாதியை சமன்செய்ய வேண்டும். அனைத்து ஜாதியினரும் அனைத்து படிநிலைகளிலும் இடம்பெற வேண்டும். அப்போதுதான் ஜாதிக்கும், படிநிலைக்கும் உள்ள தொடர்பு அழியும். அது அழிந்தபின் ஜாதி தானாகவே அழிந்து மறையும் வாய்ப்பு உண்டாகும்.
இவ்வாறு அனைத்து ஜாதியினரும் அனைத்து சமூக தளங்களிலும் இடம் பெற நாம் வழி வகுக்க வேண்டும் என்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். அப்போதுதான் எப்படிப்பட்ட முன்னுரிமைகள் அளிக்கப்படவேண்டும், எத்தகைய ஊக்கங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை அரசு கணித்து முன்னெடுக்க முடியும். ‘குடிஅரசின்’ எழுபத்தைந்து ஆண்டுகால வரலாற்றில் செய்யப்பட்ட முயற்சிகள் போதிய பலனை அளிக்கவில்லை என்றே புள்ளி விவரங்கள் சொல்கின்றன. பார்ப்பன, பனியா மேலாதிக்கம் என்பதே இந்திய சமூக நிலையாக இன்றும் பெருமளவில் உள்ளது. அதனால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் அனைத்து தள பங்கேற்பினை உறுதிசெய்ய ஜாதிவாரி கணக்கெடுப்பினை மேற் கொண்டால்தான் ‘குடிஅரசு’ தன் வரலாற்றுப் பயணத்தில் தொடர முடியும்.
அந்த வகையில் பாரதீய ஜனதா கட்சி அமைச்சர வையே இந்த முடிவை ஏப்ரல் 30ஆம் தேதி எடுத் திருப்பது, மே 2ஆம் தேதி ‘குடிஅரசு’ ஏடு தொடக்கத்தின் நூற்றாண்டிற்கான வரலாற்றுக் காணிக்கை என்று கொள்வது மிகையாகாது.
நன்றி: ‘மின்னம்பலம்’
‘முரசொலி’, 6.5.2025