திராவிடர் கழகத்தின் சார்பில் புரட்சிக் கவிஞர் விழா, தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா மற்றும் “குடிஅரசு” இதழின் நூற்றாண்டு விழா ஆகியவை கடந்த 2 ஆம் தேதி (2.5.2025) அன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றன.
இந்த விழாவில் “குடிஅரசு நூற்றாண்டு’’ எனும் தலைப்பில் உரையாற்றும் ஒரு மாபெரும் வாய்ப்பை எனக்குத் தந்தார் நம் மானமிகு ஆசிரியர் அவர்கள். விழாவில் பேசுவதற்காக தயாரிக்கப்பட்ட உரையை ‘விடுதலை’ இதழுக்கு தரும்படியும் அன்போடு கேட்டுக் கொண்டார். வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் உரையாற்றும் வாய்ப்பை தந்ததோடு அதை விடுதலை ஏட்டில் கட்டுரையாக்கும் வாய்ப்பையும் தந்த ஆசிரியர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
முன் தயாரிக்கப்பட்ட இந்த உரையின் ஒரு சில செய்திகளை நேர மேலாண்மை காரணமாக அன்று மேடையில் பேச இயலவில்லை. மேடையில் பேச விடுபட்டுப் போன அச்சில செய்திகளையும் உள்ள டக்கிய கட்டுரையை உங்கள் பார்வைக்குத் தருவதில் மகிழ்ச்சி.
‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு கொண்டாடப்படுவ தென்பது “பத்தோடு பதினொன்று. அத்தோடு இது ஒன்று” என்பதைப் போல் அல்ல. உள்ளபடியே இது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்று. சமகாலத்தில் பெரியார் சொல்லாத கருத்துகளைச் சொன்னதாகவும், செய்த தொண்டுகளை செய்யவே இல்லை என்பது போலவும் துளியும் கூச்சமின்றி ஆரிய சக்திகளும் அதன் கை கூலிகளும் பெரியாரை இழித்தும் பழித்தும் பேசி வருவதைப் பார்க்கின்றோம்.
பெரியார் வாழ்ந்த காலத்தில் இன்றைய காலகட்டம் போல், வீடியோக்கள், ஆடியோக்களாக அவர் பேசிய கருத்துகள் அனைத்தையும் பதிவு செய்யும் அளவிற்கு தொழில் நுட்பம் வளராத நிலை இருந்தது. பெரியார் என்னென்ன செய்தார். அவர் வாழ்நாள் முழுவதும் எதற்காகப் போராடினார் என்பதை பதிவு செய்து வைத்திருக்கும் ஆவணங்களில் மிக முக்கியமான ஒன்று ‘குடிஅரசு’ பத்திரிகை.
இதை ஆவணம் என்பதை விட பெரியாரின் கருத்து களைக் கொண்டு சேர்த்த, சேர்த்துக் கொண்டிருக்கின்ற ஆயுதம் என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த விழாவை நான் இரண்டு வகையில் மிக முக்கியமான விழாவாகப் பார்க்கிறேன்.
பெரியார் – அவர் வாழ்ந்த காலத்தில் அவரது கருத்து களை அன்றைய ஊடகங்கள் புறக்கணித்தபோது, அவர் 1925-லேயே தமது கருத்துகளை எடுத்துச் செல்ல ஒரு பத்திரிகை வேண்டும் என்பதை சிந்தித்ததோடு அதை செயல்படுத்தியும் காட்டிச் சென்றுள்ளார்.
தந்தை பெரியாரின் பேரன்கள்!
பெரியாரின் இந்த துணிவுதான், அவரது பேரன்களாகிய என்னைப் போன்றோருக்கு பெரும் உத்வேகத்தை தந்து கொண்டிருக்கிறது. பிரதான ஊடகங்களில் பார்ப்பனிய சக்திகளின் சதியால் என் குரல் நெரிக்கப்பட்ட போது, தனியே “தமிழ் கேள்வி” என்ற பெயரில் ஒரு டிஜிட்டல் மீடியா தொடங்கி நம் மனசாட்சிக்கு சரி எனப் பட்டதைப் பேச இயலும். அவ்வாறு பேசும் போது மக்கள் நிச்சயம் அதனை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தந்தது பெரியாரின் ‘குடிஅரசு’ இதழ்.
அடுத்து அப்படி பெரியாரால் தொடங்கப்பட்டு அவரின் சிந்தனைகளைத் தாங்கி வந்த பத்திரிகையை பாதுகாத்து அச்சு வடிவில் புதுப்பித்து அதை காலத்திற்கேற்றவாறு டிஜிட்டல் வடிவிலும் மாற்றி அடுத்த தலைமுறைக்கு பெரியாரின் பெரும் பணிகளைக் கடத்தியுள்ள மானமிகு ஆசிரியரின் பெருந்தொண்டு.
இந்த இரண்டுமே போற்றத்தக்க பாராட்டத்தக்க பெரும் பணிகள்.
காரணம், சமகாலத்தில் கோடரிக்காம்புகளைப் போல் மாறிப்போன. பார்ப்பனியத்திற்கு விலைபோன சில விஷமிகள் பெரியாரைக் குறி வைத்து தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. அவர்கள் பரப்பும் பொய்களில் பிரதானமான சில பொய்களை ஆதாரத்துடன் தோலு ரிக்க வரலாறு எனக்களித்த வாய்ப்பாக இதை நான் பார்க்கிறேன்.
விஷமிகள் தொடர்ந்து பரப்பும் பொய்களில் பிரதானமான பொய்கள்
தமிழ்ச் சமூகத்தில் ஜாதிய தீண்டாமையே இல்லாமல் இருந்தது. பெரியாரும் அவரது பெரும் தொண்டர்களும்தான் தமிழர்களிடையே ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் இருந்தது போன்ற தோற்றத்தைத் தருகிறார்கள்.
பெரியார் இடைநிலை ஜாதிகளின் விடுதலைக்காக மட்டும்தான் பேசினார். அவர், தாழ்த்தப்பட்ட, பட்டியலின சமூகங்களின் விடுதலை குறித்து எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை
பெரியார் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆதரித்தார்.
பெரியார் நவீனமயத்தை ஆதரித்தார். அவர் தொழி லாளர்கள் நலன் குறித்து ஏதும் பேசவில்லை.
பெரியார் திருக்குறள், மீதும் தமிழ் மொழியின் மீதும் எதிர்மறையான கருத்துகளைக் கொண்டிருந்தார்.
பெரியாரைச் சுற்றி பல்வேறு பொய்களை பார்ப்ப னீயம் காலம்தோறும் கட்டவிழ்த்து விட்டாலும், மேற்கண்ட 5 பொய்களும்தான் பிரதானமான பொய்கள்.
இவை அனைத்துமே பொய்கள் என்பதை தரவுக ளோடு உரைக்க நமக்கு கிடைத்த பெரும் ஆயுதம்தான் ‘குடிஅரசு’ பத்திரிகை.. 1925 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி வெளியாகிய ‘குடிஅரசு’ இதழின் முதல் பக்கமே திருக்குறளைத் தாங்கித்தான் வெளியானது.
முத்தான மூன்று குறள்களில் முதல் குறளாக குடிஅரசில் இடம்பெற்ற குறள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
இரண்டாவது குறள்
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
மூன்றாவது குறள்
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
1925 ஆம் ஆண்டிலேயே தனது பத்திரிகையின் முதல் பதிப்பிலேயே திருக்குறளை அச்சிட்ட பெரியார் எப்படி ஒட்டுமொத்த திருக்குறளுக்கும் எதிரியாய் போவார்!
தனது முதல் இதழிலேயே முதல் குறளாக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் வரிகளை அச்சிட்டதன் மூலம் திருக்குறளில் உள்ள சமூக நீதி சார்ந்த கருத்துகளில் பெரியாருக்கு உள்ள உடன்பாடு மிகத்தெளிவாக விளங்கக் கூடியது .
பிறப்பின் அடிப்படையில் யாரும் உயர்ந்த குலத்தோன் அன்று, ஒழுக்கமானவர்களே உயர்குலத் தோர் என்ற பெரியாரின் சிந்தனைக்கு ஒத்த குறளை அவர் இரண்டாவதாக பயன்படுத்தியுள்ளார்.
வலிமையான ஆயுதங்களைக் கொண்டு பெறுவ தல்ல வெற்றி ஆட்சியாளர்கள் தம் மக்களுக்கு நல்லாட்சி தருவதே வெற்றி என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் குறளை மூன்றாவதாக இடம்பெறச் செய்துள்ளார் பெரியார்.
‘குடிஅரசின்‘ முதல் இதழ்!
ஆக, குடிஅரசின் முதல் இதழிலேயே நமக்கு ஒன்று விளங்கிக் கொள்ள முடிகிறது. அது பெரியார் ஒருபோதும் திருக்குறளை வெறுத்து ஒதுக்கியவர் அல்லர் என்ற செய்தியை நமக்கு உறுதிப்படுத்துகிறது ‘குடிஅரசு’ இதழ்.
இரண்டாவது மிக முக்கியமாக பெரியார் இடை நிலை ஜாதிகளின் உரிமைகளை மட்டுமே பேசியவர் போலவும் பட்டியலின தோழர்களின் உரிமைகளைப் பற்றி அவர் கவலை கொள்ளாதிருந்தார் என்பது போல வும் ஒரு பொய்யை ஆர்.எஸ்.எஸ். அடிவருடிகள், அம்பேத்கரியவாதிகள் வேடம் பூண்டு மீண்டும் பரப்பத் தொடங்கியுள்ளனர்.
மீண்டும் எனில், ஏற்கெனவே இதுபோன்ற அவதூறு பரப்பப்பட்டதா எனில் ஆம், இதற்கு முன்பும் இதுபோன்ற மலினமான பொய்க்கதைகளை சிலர் பரப்பி வந்தனர். தற்போது பார்ப்பனீயத்திடம் பெற்ற ஆதாயத்திற்காக சில விஷமிகள் இன்னும் வேகமாய் அப்பொய்களை பரப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால், ‘குடிஅரசு’ இதழை வாசிக்கின்ற போது பெரியார் ஆதி திராவிட மக்களுக்கு ஆற்றிய பணிகளும், அவர்களின் சமூக, பொருளாதார வாழ்வியல் மேம்பாட்டிற்காக நடத்திய போராட்டங்களும் நமக்குத் தெளிவாக புலப்படுகின்றன.
தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான…
முன்னதாக அக்காலத்தில் எந்த அளவிற்கு ஜாதியத் தீண்டாமைக் கொடுமைகள் இருந்தன என்பதையும் அவற்றைக் கண்டித்தும் தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ இதழில் எழுதிய செய்திகளை நாம் தேதி வாரியாக பார்க்க இயலும்.
பஞ்சமர்களும், நாய்களும், பெருநோய்க்காரர்களும் நுழையக் கூடாது என்று அன்றைய மதராஸ் மாகாணப் பேருந்துகளில் எழுதிப் போட்டிருந்ததைக் கண்டிக்க அப்போது ‘குடிஅரசு’ இதழையும், பெரியாரையும் விட்டால் வேறு யாரும் இல்லை.
பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று நாடக சபாக்கள் எழுதிப்போட்டிருந்ததையும் ‘குடிஅரசு’ இதழில் கடுமையாகச் சாடினார் தந்தை பெரியார்.
திருப்புரணம் ஆவிவூரைச் சேர்ந்த பெரிய கருப்பக் குடும்பன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் உயர் ஜாதியினர் வசிக்கும் தெருவில் வந்துவிட்டார் என்று சொல்லி அவரை தாக்கியதோடு அவருடைய நிலத்தையும் கடுமையாக சேதப்படுத்தினர் மேட்டுக்குடி ஜாதி வெறியினர்.
நீதி கேட்டு அவர் அரசு அதிகாரிகளிடம் இது குறித்து புகார் தெரிவித்தபோது, கூடுதலாக அவருக்கு 50 ரூபாய் அபராதமும் விதித்தனர். இச்செய்தியைக் கேட்ட தந்தை பெரியார் அவர்கள் “கொடுமை கொடுமை” என்ற தலைப்பில் இச்செய்தியை 24.11.1929 ‘குடிஅரசு’ இதழில், வெளியிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்கிறார்.
பல்லாவரம் கொளத்து மேட்டைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்ற மாணவன் படித்துவிட்டு வரும்போது, அக்ரகார வீதியின் வழியே வந்து விடுகிறான். இதனால் அக்ரஹாரமே தீட்டுப்பட்டுவிட்டது என்று சொல்லி ரங்கசாமி அய்யர் என்பவர் அம்மாணவனை செருப்பாலேயே அடித்துள்ளார். இக்கொடுமை கண்டு கொதித்த பெரியார் மதம் மாறியும் இழிவுபடுத்தும் பார்ப்பனத் திமிரை 24.03.1936 ‘குடிஅரசு’ இதழின் செய்தி மூலம் கடுமையாகச் சாடுகிறார்.
தமிழ்ச் சமூகம் ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமூகமாக இருந்தது என்பது கனவுலகில் வாழ்வோர் கற்பனையில் கட்டிய கதை என்பதை இச்செய்திகள் தெளிவாக உணர்த்துகின்றன. இக்கால தலைமுறைக்கு கடந்த காலத்தில் நடைபெற்ற ஜாதியத் தீண்டாமையின் வலியும், வேதனையும் புரியவில்லை என்பதையும், அக்காலத்தில் ஜாதியத் தீண்டாமை எத்துனைக் கொடூரமாக இருந்தது என்பதையும் நம் கண்முன் நிறுத்துகின்றன இச்செய்திகள்.
‘‘மோட்டார் பஸ்களும்–
ஆதிதிராவிட கிருத்தவர்களும்’’
ஆதிதிராவிட கிருத்தவர்களும்’’
19.12.1926 தேதியிட்ட ‘குடிஅரசு’ இதழில், “மோட்டார் பஸ்களும் ஆதிதிராவிட கிருத்துவர்களும்” என்ற தலைப்பில் வெளியான செய்தியில், சமீபத்தில் ஜான்பால் உபாத்தியாயர் என்பவர் கோயம்புத்தூர் போவதற்காக காங்கேயத்தில் ஊத்துக்குளி போகும் சர்வீஸ் கார் நம்பர் 425 இல் டிக்கெட் வாங்கி உட்கார்ந்திருந்தவரை ஆதிதிராவிடர் என்று சிறிது நேரத்தில் தெரிந்து கொண்ட டிக்கெட் விநியோகஸ்தர் இன்னபிற ஜாதி இந்துக்களின் உதவியோடு அந்த உபாத்தியாயரை மோட்டார் வண்டியில் இருந்து பலவந்தமாக இறக்கிவிட்டுள்ளார். என்பதை பதிவு செய்து கண்டித்துள்ளார் பெரியார்.
இப்படி பல்வேறு செய்திகளைச் சொல்ல முடியும்…
ஜாதிய தீண்டாமைச் சிக்கலை வெறும் செய்தி யாக சுட்டிக்காட்ட மட்டும் செய்யவில்லை பெரியார் அதை எதிர்த்து கடும் போராட்டங்களைச் செய்துள்ளார். குறிப்பாக ஆதி திராவிடர் சமூகத்தினரின் விடுதலைக்காக மட்டுமே பெரியார் செய்த பெரும் தொண்டை நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது ‘குடிஅரசு’ இதழ்.
1929 இல் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில், அரசுப் பணிகளில் காலியாகும் இடங்களை நிரப்பும் போது, தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியும், தாழ்த்தப்பட்ட சிறுவர், சிறுமியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, புத்தகம், உடை, உணவு உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க வேண்டுமென்றும் முக்கியமானதொரு தீர்மா னத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தார் தந்தை பெரியார்.
அலை அலையான ஆதிதிராவிட மாநாடுகள்!
ஆதி திராவிட மக்களின் மீது நடத்தப்பட்ட ஜாதியக் கொடுமைகளைக் கண்டித்து மட்டுமே பல்வேறு மாநாடுகளை பெரியார் நடத்தியுள்ளார் என்ற செய்தியை நாம் ‘குடிஅரசு’ இதழின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
15.1.1928 சென்னை 11 ஆவது ஆதிதிராவிட மாநாடு
10.2.1929 சென்னை தீண்டாமை விலக்கு மாநாடு
21.7.1929 சென்னை ஆதிதிராவிட மாநாடு
25.8.1929 இராமநாதபுரம் ஆதிதிராவிட மாநாடு
13.10.1929 ஆதனூர் 2 ஆவது ஆதிதிராவிட மாநாடு
16.5.1931 சேலம் ஆதிதிராவிட மாநாடு
7.6.1931 லால்குடி தாலுகா ஆதிதிராவிட மாநாடு
4.7.1931 தஞ்சை ஜில்லா ஆதிதிராவிட மாநாடு
5.7.1931 திருச்சி ஆதிதிராவிட மாநாடு
7.12.1931 கோவை ஆதிதிராவிட மாநாடு
7.2.1932 லால்குடி தீண்டப்படாத கிருத்துவர் மாநாடு
7.5.1933 லால்குடி தாலுகா ஆதிதிராவிட கிருத்துவர் மாநாடு
மேற்கண்ட மாநாடுகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ ஏட்டின் மூலம் அறிந்து கொள்ளும்போது நமக்கு கிடைக்கிற செய்தி ஒன்றுதான், பெரியார் ஒட்டுமொத்த மானுட சமூகத்தின் விடுதலைக்காகத்தான் போராடியிருக்கிறார். அதிலும் குறிப்பாக ஆதிதிராவிட சமூகத்தின் உரிமைகளுக்காக அவரின் குரல் கூடுத லாகவே ஒலித்திருக்கிறது.
இதை ‘குடிஅரசு’ இதழில் வந்த செய்திகள் மட்டுமல்ல. டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் தலையங்கமும் உறுதிப்படுத்துகின்றது.
அண்ணல் அம்பேத்கருக்கு வழிகாட்டிய
வைக்கம் போராட்டம்!
வைக்கம் போராட்டம்!
“டாக்டர் அம்பேத்கரின் வாழ்வும், மேற்கண்ட பணிகளும்” என்ற தனஞ்செய் கீர் எழுதிய புத்தகத்தில் கீழ்க்காணும் செய்தி இடம்பெற்றுள்ளது.
திருவாங்கூர் ராஜ்யத்தில் உள்ள வைக்கம் எனும் ஊரில் தாழ்த்தப்பட்டவர்கள் சில தெருக்களில் நடமாடக்கூடாது என்று உயர்ஜாதி வெறியர்களால் தடுக்கப்பட்டதைக் கண்டித்து அமைதியான முறையில் தாழ்த்தப்பட்டோருக்காக பார்ப்பனரல்லாத
திரு.இராமசாமி நாயக்கர் அவர்கள் நடத்திய போராட்டம் 1924 ஆம் ஆண்டின் நிகழ்ச்சிகளில் சிறப்பாக நினைவில் நிற்கக் கூடியது.
அம்பேத்கர் அவரது மகத் சத்யாகிரகம் பற்றி எழுதிய தலையங்கங்களில் வைக்கம் போராட்டம் குறித்து நெஞ்சு நெகிழ்ந்து குறிப்பிட்டெழுதுகிறார்.
இது தாழ்த்தப்பட்டோருக்காக பெரியார் நடத்திய போராட்டங்களை அம்பேத்கரும் பாராட்டியதற்கான சான்று. ஆனால் தற்போது பார்ப்பனியத்திடம் விலைபோன சிலர் தங்களை அம்பேத்கரிஸ்டுகளாக வேடமிட்டுக் கொண்டு பெரியாரும், திராவிடர் கழகமும், பெரியாரியத் தொண்டர்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பெரியார் பார்ப்பனர்களின் ஜாதி ஆணவத்தை எதிர்த்த அளவிற்கு இன்னபிற சமூகங்களிடம் இருந்த ஜாதிய ஆணவப் போக்கை எதிர்க்கவில்லை என்பது போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.
திருச்சியை அடுத்த மான்பிடிமங்கலத்தில் பேசிய பெரியார், “திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர்ஜாதிக்காரர்களுமில்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பதும் எனக்குத் தெரியும்” என்கிறார் பெரியார்.
மேலும், ‘‘ஒரே இனத்தைச் சார்ந்த (திராவிடர்கள்) நாம் நமக்குள் பிரிவுகளாக சொல்லளவிலும் இருக்கக் கூடாது என்பதே எனது தீவிர எண்ணமாகும். இன்னும் விளக்கமாகக் கூறுகிறேன். திராவிடர் இயக்கத்திற்கு முக்கியக் கொள்கை என்னவென்பதை இந்நாட்டில் பறையர் என்றும் பார்ப்பனர் என்றும் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்றுமிருப்பதையும், சூத்திரன் பஞ்சமன் என்றுமிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம் என்பதை நடைமுறையில் செய்வதேயாகும்“ என்று பேசினார்.
இப்படி தொடர்ந்து ஆதிதிராவிட சமூகத்திற்காக பேசியும் எழுதியும் போராடியும் வந்த பெரியாரை அம்பேத்கரிஸ்டுகள் என்ற பெயரைத் தாங்கி ஒரு சிலர் விமர்சிப்பது அயோக்கியத்தனத்தின் உச்சம். இச்செய்திகள் எல்லாம் நமக்கு ‘குடிஅரசு’ இதழின் மூலம் கிடைக்கப் பெறாமல் போயிருந்தால் இந்த பொய்யர்கள் சொல்லும் கட்டுக் கதைகளை மக்கள் நம்பும் சூழல் உருவாகியிருக்கும் என்பதையும் நாம் இந்த இடத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.
பிரிட்டிஷார் ஆட்சியும் – தந்தை பெரியாரும்!
அடுத்து பிரிட்டிஷார் ஆட்சியில் ஏதோ பெரியார் சுதந்திரமாக எல்லாம் செய்ய அனுமதிக்கப்பட்டார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
‘குடிஅரசு’ இதழின் நூற்றாண்டைக் கொண்டாடும் இச்சூழலில் நாட்டு மக்களுக்கு நாம் ஒன்றைச் சொல்ல வேண்டும். 1935 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ‘குடிஅரசு’ இதழ் தடைசெய்யப்பட்டது என்பதையும் நாம் சொல்லியாக வேண்டும்.
அதேபோல், பெரியார் நவீனத்துவத்தை, தொழில் நுட்ப வளர்ச்சியை ஆதரித்தார். அதனால் அவர் தொழிலாளிகளின் நலனைப் பற்றி சிந்திக்கவில்லை என்பது போன்ற விஷமக்கருத்துகளை பரப்பும் கூட்டமும் உள்ளது.
ரஷ்யா சென்று திரும்பி வந்த பெரியார் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை தமிழில் ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்டார் என்பதை நாம் அறிவோம்.
பலரும் அறிந்திடாத செய்தி ‘குடிஅரசு’ இதழில், ரஷ்யாவில் உள்ள பொது சுகாதாரம், ரஷ்யாவில் பெண்கள் நிலை, அழகைப் பற்றிய கவலை அணு அளவும் இல்லை, மாதர்களுக்கு சம உரிமை உள்ள நாடு ரஷ்யா போன்ற பல்வேறு தலைப்புகளில் தொடர் கட்டுரைகளும் ‘குடிஅரசு’ இதழில் வெளியாகின.
மே தினத்தை சமதர்மப் பெருநாளாக சுயமரியாதை இயக்கத்தினர் கொண்டாட வேண்டுமென்று 1933 ஆம் ஆண்டு பெரியார் அறிவித்தார். பெரியாருக்கு ஜாதி ஒழிப்பில் இருந்த பார்வை வர்க்க ஒழிப்பில் இல்லை என்ற விமர்சனங்கள் காலம் காலமாய் வைக்கப்பட்டு வருகிறது.
பெரியார்தான்,
தொழிலாளர் மாநாடு
விவசாயிகள் மாநாடு
ஜமீன்தார் ஒழிப்பு மாநாடு
லேவாதேவி ஒழிப்பு மாநாடு
ஜமீன்தார் அல்லாதார் மாநாடு
போன்ற மாநாடுகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தியவர்.
பொதுவுடைமைக் கருத்துப் பிரச்சாரம்!
“ஒவ்வாரு தொழிலாளியும் பொதுவுடைமைக் கட்சியில் சேர வேண்டியது ஏன்?” என்ற கட்டுரையை பெரியார் ‘குடிஅரசு’ இதழில் தொடர்ந்து வெளியிட்டார். பெரியாரும், எஸ்.ராமநாதனும் சேர்ந்து லெனின் எழுதிய “ மதத்தைக் குறித்து’’ என்ற தலைப்பிலான கட்டுரைகளை தமிழாக்கம் செய்து குடிஅரசில் வெளியிட்டனர். பொதுவுடைமைச் சித்தாந்தவாதி ம.சிங்காரவேலர் எழுதிய ஏராளமான கட்டுரைகள் ‘குடிஅரசு’ இதழில் தொடர்ந்து வெளியாகின.
நூற்பாலைகள் வந்தபோது, தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தைச் சுட்டிக்காட்டி பேசிய பெரியார் உழைக்கும் தொழிலாளர்களின் பக்கமே நின்றார். அறிவியல் வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சி , நவீனத்துவம் உள்ளிட்டவற்றை பெருமளவு ஆதரித்த பெரியார்தான் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் போராடினார்.
இவை அனைத்தையும் நமக்கு தேதி வாரியாக உறுதிப்படுத்துகின்றன ‘குடிஅரசு’ இதழில் வெளியான செய்திகளும், கட்டுரைகளும்.
மொழி உணர்வுப் போராட்டங்கள்!
1938 இல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பற்றி பலரும் அறிவோம். ஆனால் அதற்கும் முன்பாகவே 1926 ஆம் ஆண்டு வெளியான ‘குடிஅரசு’ இதழில், “தமிழுக்கு துரோகமும், ஹிந்தி யின் ரகசியமும்“ என்ற கட்டுரையில் ஹிந்தித் திணிப்பை கடுமையாக சாடிய பெரியார் தமிழை அழித்தொழிக்க நினைக்கும் பார்ப்பனச் சதியையும் சுட்டிக்காட்டியிருப்பார்.
இப்படித் தொடர்ந்து தமிழைக் காக்க போராடி யவரை, தமிழர்களுக்கு எதிரி என்பது போலவும், தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காக போராடிய வரை, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி என்பது போல வும், பிரிட்டிஷார் ஆட்சியில் அடக்குமுறையைச் சந்தித்தவரை பிரிட்டிஷாருக்கு இணக்கமானவர் என்பது போலவும், தொழிலாளர்களுக்காக போராடியவரை வர்க்க விடுதலை பற்றி அறியாதவர் என்பது போலவும் பேசுவது என்பது பச்சை அயோக்கியத்தனம். பார்ப்பனியத்தின் சதிக்கு உடந்தையன்றி வேறில்லை. பெரியாருக்கு எதிராக காலம் காலமாக பரப்பப்படும் அவதூறுகளின் பின்னால் ஆரியமும் ஆர்.எஸ்.எஸ்.-சுமே இருந்து வருகின்றன.
பொதுவாக நோய் வந்தபின் மருந்து உட்கொள்வது ஒரு முறை. நோய் வருமுன் தடுப்பூசி எடுத்துக் கொள்வது ஒரு முறை. 1925 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி பெரியாரால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்றுதான் குடிஅரசு அதே 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று உருவான பேரழிவுக் கிருமிதான் ஆர்.எஸ்.எஸ். அந்த கிருமியால் வடஇந்தியா இன்றைக்கு சந்திக்கும் பேரழிவை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதேபோன்ற பேரழிவை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த அக்கிருமி துடிக்கின்றபோதெல்லாம் நாம் எடுத்துக் கொண்ட பெரியார் எனும் தடுப்பூசி நம்மை அரணாக காத்து நிற்கிறது.
ஒவ்வாரு தமிழரும் பெரியார் எனும் தடுப்பூசியை எடுத்துக் கொள்வோம். ஆரியம், ஆர்.எஸ்.எஸ். பரப்பும் பிளவுவாத பெரும் நோயில் இருந்து தமிழ்நாட்டைக் காப்போம் என்று சொல்லி நிறைவு செய்கின்றேன். நன்றி வணக்கம.
– “தமிழ் கேள்வி’’ தி.செந்தில் வேல் –
மூத்த ஊடகவியலாளர் 02-05-2025 ஆம் தேதியன்று சர்பிட்டி தியாகராயர் அரங்கில்
ஆற்றிய உரையின் தொகுப்பு.