காதுகளில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்பட்டாலோ, மெழுகு அதிகமாக சேர்வதாலோ வலியை ஏற்படுத்தும். தொண்டையின் பின் பகுதிக்கு இடையேயுள்ள யூஸ்டேசியன் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் காதில் திரவம் சேர்ந்து வலி உண்டாகும்.
சைனஸ் தொற்றினால் யூஸ்டேசியன் குழாயில் அழுத்தத்தை ஏற்படுத்தி காது வலியை ஏற்படுத்தும்.
விமானப் பயணத்தின்போது, விமானம் புறப்படும்போதோ, தரை யிறங்கும்போதோ காற்றழுத்தத்தால் ஏற்படும் மாற்றங்களால் காதுகளில் அடைப்பை ஏற்படுத்தி வலியை உண்டாக்கும்.
நீர் வற்றிப் போய் இருக்கும் குளம், பாதுகாப்பற்ற, பராமரிப்பற்ற நீச்சல் குளங்களில் மூழ்கி குளித்துவிட்டு வருகிறவர்களுக்கு காதில் காளான்கள் வந்து வலியால் அவதிப்படுவார்கள்.
சைனஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவர். குளத்தில் குளித்து விட்டு வரும் ஒரு சிலருக்கு மூக்கு வழியாக தண்ணீர் உள்ளே சென்ற காரணத்தால் காதுக்கும், மூக்குக்கும் இடையே உள்ள டியூப் அடைத்துக் கொண்டால் காதில் இருக்கிற ஜவ்வு உள்ளே இழுத்துக்கொண்டு அடைப்பு உண்டாகி வலி வரும். இதைப் புரிந்துகொண்டு மூக்கில்தான் மருந்து போட வேண்டும்.
நீராவி
நீராவி பிடிப்பது சிறந்தது. காதில் வலி ஏற்பட்டால் மருத்துவரின் அறிவுரையின்றி பிற மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தி காதில் ஊற்றினால் காளான் வரலாம். இரவு நேரங்களில் பரோட்டா போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதை சாப்பிடும்போது உணவு சரியாக செரிமானம் ஆகாமல் அதன் மூலம் அமில சுரப்பு அதிகமாகி எதுக்களிப்பு வந்து தொண்டை வலி வரலாம்.
காதில் உருவாகும் மெழுகு பாதுகாப்பானது. காதில் புகும் தொற்றுக் கிருமிகள், தூசு போன்றவை இம்மெழுகில் ஒட்டிக் கொள்ளும். அதனால் காது தொற்று தடுக்கப்படும். மெழுகை எந்தக் காரணம் கொண்டும் எடுக்கக் கூடாது. மெழுகு தானாகவே வெளியே வந்துவிடும். காதை சுத்தம் செய்வோம் என்ற எண்ணத்தில் பஞ்சு சுற்றி குச்சி (Buds). ஹேர் பின்கள் மூலம் குடைவதினால் காது குழாயின் உள்புறத்தில் புண்களாகி பாக்டீரியாக்கள் தொற்று ஏற்பட்டு வலி உண்டாகும். இது பொறுக்க முடியாத வலியாக இருக்கும்.
வீக்கம் வரும். காது குழாயில் அடைபடும் அளவுக்கு வீக்கம் வரும். சீழ் பிடிக்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதிக தொந்தரவு ஏற்படும்.
குழந்தைகளிடமும் கவனமாக இருக்க வேண்டும். காதுகளில் பூச்சிகள் புகுவதற்கு வாய்ப்புள்ளது. பூச்சி புகுந்துவிட்டது என்று உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர் கையில் கிடைக்கும் எண்ணையை உள்ளே ஊற்றினால் அது செத்துப்போகும். பிறகு மருத்துவரிடம் சென்று எடுத்துக் கொள்ளலாம். மெழுகு எடுக்கும் முயற்சியில் குச்சிகளை பயன்படுத்தினால் ஜவ்வு கிழிந்து விடும். இதனால் காது கேட்கும் திறன் குறைந்து குழந்தைகளின் படிப்புத் திறனும் குறையும்.
நாள் முழுவதும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெதுவெதுப்பான உப்பு கலந்து தண்ணீரில் வாய் கொப்பளித்தால் தொண்டை வீக்கதில் இருந்து விடுபட முடியும். சளி பிடிக்கும்போது காது அடைத்துக்கொள்ளும்.
யூஸ்டேஷியன் குழாயில் சளி சென்று விடுவதால் இது நிகழ்கிறது. பல சமயங்களில் பூஞ்சைத் தொற்று காதில் ஏற்படும். காதில் எந்த தொல்லை ஏற்பட்டாலும் காது மருத்துவரிடம் செல்ல வேண்டுமே தவிர நாமாக மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி பயன்படுத்தக் கூடாது.