கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தக்காலகட்டத்தில் அனைவரும் விரும்புவது குளிர்பானம் மற்றும் அய்ஸ்கிரீமைத்தான். குழந்தைகளை விடுமுறை நாட்களில் வெளியே கூட்டிச் சென்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி அய்ஸ்கிரீம் வாங்கி தாருங்கள் என்பதுதான். அய்ஸ்கிரீம் சாப்பிடுவது என்பது தவறான ஒன்றல்ல. உண்மையில் சொல்லப்போனால் அய்ஸ்கிரீம் குழந்தைகளுக்கு ஒரு அருமையான உணவு.
ஆனால், அந்த அய்ஸ்கிரீம் சரியாக உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். பால், சர்க்கரை மற்றும் இதர சில பொருட்களையும் சேர்த்து உருவாக்கப்பட்ட அய்ஸ்கிரீம் High Calorie உணவாக பிள்ளைகளுக்குக் கிடைக்கிறது.
வயது வித்தியாசம் என்று பார்க்காமல் அய்ஸ்கிரீம் அனைவராலும் விரும்பப்படும் உணவுப் பொருள். சர்க்கரை நோயாளிகள்கூட தங்கள் நோயை மறந்து அய்ஸ்கிரிமை விரும்பிச் சாப்பிடுவர்.
திருமண விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் அய்ஸ்கீம் தவறாம்ல் இடம் பெறும். ஆனால், அதே சமயத்தில் அது சரியான வகையில் உருவாக்கப்படாமல் இருந்தால் ஆபத்துதான். பால், சர்க்கரை மற்றும் அனுமதிக்கப்பட்ட பொருள்களை வைத்து சுத்தமான முறையில் பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு முறையான வகையில் பெரிய நகரங்களில் இருந்து அனுப்பப்படும் அய்ஸ்கிரீம் பாதுகாப்பானவை என்று சொல்லலாம். தயாரிக்கப்பட்ட நாள், எத்தனை நாட்கள் உபயோகிக்கலாம் என்ற தகவல்களுடன் அய்ஸ்கிரீம் விற்பனைக்கு வருகிறது. அவை குளிரூட்டப்பட்ட வேன்களில் கொண்டு வரப்படுகிறது. அதற்காக உருவாக்கப்பட்ட தனிப்பட்ட பிரிட்ஜ்களில் வைக்கப்பட வேண்டும். மின்சாரம் தடைப்பட்டாலும் பல மணி நேரங்கள் அந்த பதம் மாறாமல் காக்கப்படுகின்ற Ice Lined Refrigerator வைத்து விற்பனை செய்யப்படுகிறது. பாதுகாப்பற்ற முறைகளில் சுகாதாரம் இல்லாமல் இருந்தால் கிருமித் தொற்று எற்பட வாய்ப்பு உண்டு.
குளிர்பானம்
அந்தக் காலத்தில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்பட்ட குளிர்பானம் சர்பத்தான். அந்த சர்பத்தில் போடுவதற்கு உபயோகப்படுத்துகின்ற அய்ஸ் சுத்தமானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் மூலமாகவும் கிருமித் தொற்று ஏற்படும்.
Fresh Juice நேரடியாக ஒரு பழத்தைப் பிழிந்தால் 30 மில்லி அல்லது 50 மில்லி சாறு மட்டுமே கிடைக்கும். அது சுத்தமான முறையில் பிழியப்பட வேண்டும். அதில் ஊற்றப்படும் தண்ணீர் சுத்தமானதாக இல்லையென்றால் கிருமித் தொற்றும் தொண்டை வலியும் வரலாம்.
கோடைக்காலத்தில் இளநீர், நுங்கு இயற்கை கொடுத்த கொடையாக உள்ளது. அவை மிகவும் சுத்தமான பானமாகும். அதில் கிடைக்கிற தாது உப்புகள் உடலுக்கு அவசியமான பொருளாக அமைகிறது.
சுகாதாரமற்ற அய்ஸ்கிரீம் சிலருக்கு தொற்றை உருவாக்கி தொண்டை வலியை ஏற்படுத்தலாம். தொடர்ச்சியாக சீழ் வைக்கலாம். அதில் ஏற்படும் கிருமிகள் சிறுநீரகத்தைக் கூட பாதிக்கும்.
குளிர்ச்சி அதிகமாக இருக்கும்போது, ஏற்கெனவே ஆஸ்துமா, அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் அதிகம் பாதிக்கக்கூடிய நிலை உருவாகும்.
ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். மருந்து, மாத்திரைகள் மட்டுமல்லாமல் பச்சைக் காய்கறிகளை உண்ணுவது, சரிவிகித உணவை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது.
வெளியில் செல்லும்போது வீட்டில் கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரை பாட்டில்களில் எடுத்துச் செல்லலாம். மதியம் 12 மணிக்குப் பிறகு 3 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
இரவு நேரத்தில் படுக்கப்போகும் முன்பு தாங்கக் கூடிய அளவுக்கு சுடுநீரில் கல் உப்பைப் போட்டு (அதிகம் கரிப்பு இல்லாமல்) கலக்கி வாயை கொப்பளிப்பது (Gargling) என்பது அவசியம்.