நாகப்பட்டினம், மே 5- நடுக்கடலில் மீன்பிடித் துக்கொண்டு இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சர மாரியாக தாக்கியதுடன் பல லட்சம் மதிப் பிலான பொருட்களையும் பறித்துச் சென்றனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள்
நாகை அக்கரைப்பேட் டையை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 37). இவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 1-ஆம் தேதி காலை நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆனந்த், அதே பகுதியை சேர்ந்த முரளி (38), சாமி நாதன் (30), வெற்றி வேல் (38), அன்பரசன் (36) ஆகிய 5 பேர் மீன்பிடிக்க சென்றனர்.
கோடியக்கரைக்கு கிழக்கே 30 நாட் டிக் கல்மைல் தொலைவில் 2.5.2025 அன்றிரவு இவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது 2 பைபர் படகுகளில் 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் அங்கு வந்தனர்.
அவர்கள், ஆனந்தின் படகை சுற்றி வளைத்து தாங்கள் வைத்து இருந்த இரும்பு கம்பியால் நாகை மீனவர்கள் 5 பேரையும் சரமாரியாகதாக்கினர். பின்னர், தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்த 2 அலைபேசிகள், 1 வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தங்களது படகில் சென்று விட்டனர்.
வெள்ளப்பள்ளம் மீனவர்கள்
இதேபோல வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் பிரவீன் (24), இவரது சகோதரர் பிரதீபன் (22), குட்டியப்பன் (40), விஷால் (21), நதீஷ் (21) ஆகிய 5 பேர் ஆறுகாட்டுத்துறைக்கு தென்கிழக்கே 15 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது 4 படகுகளில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள், அந்த மீனவர்கள் 5 பேரையும் தாக்கி 2 என்ஜின்கள், 3 செல்போன்கள், டிவி, ஜிபிஎஸ் கருவி, வாக்கி-டாக்கி ஆகியவற்றை பறித்து சென்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூரைச் சேர்ந்த 9 மீனவர்கள் இருவேறு படகுகளில் வெவ்வேறு இடங்களில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களை தாக்கி அய்ஸ்பெட்டி, மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.
மேற்படி 4 சம்பவங்களிலும் காயமடைந்த மீனவர்கள் 19 பேரும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர் பாக கடலோர காவல் குழும காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் தமிழ்நாடு மீனவர் கள்மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி பல லட்சம் மதிப் பிலான பொருட்களை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.