‘நீட்’ தேர்வு மோசடி!
2024-ஆம் ஆண்டு நீட் யுஜி (National Eligibility cum Entrance Test – Undergraduate) தேர்வில் ஏற்பட்ட மோசடி நிகழ்வைத்தொடர்ந்து, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஅய் (CBI) விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. ‘நீட்’ தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக 250-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் மீது ஒன்றிய புலனாய்வுதுறை விசாரணை செய்து வருகிறது.
நாட்டின் மருத்துவக் கல்விக்கான உயர்மட்ட ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission – NMC), 2024-2025 கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்துள்ளது. இந்த மாணவர்கள், மோசடி செய்து தேர்வு எழுதியதாக (ஆள் மாறாட்டம் மற்றும் விடைத்தாள் மாற்றம்) குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், மருத்துவப் படிப்புகளில் ஏற்ெகனவே சேர்ந்திருந்த 26 மாணவர்கள், உதவியதாகக் கண்டறியப் பட்டு, உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு தேசிய மருத்துவ ஆணையம் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, 42 தேர்வர்கள் 2024, 2025 மற்றும் 2026 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு நீட் யுஜி தேர்வு எழுதுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளனர்..
2024-ஆம் ஆண்டு நீட் யுஜி தேர்வு முடி வுகள் வெளியானபோது, 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720-அய் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், சில மாணவர்கள் 719 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர், இது தேர்வு முறையின்படி (ஒவ்வொரு சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்கள், தவறான பதிலுக்கு -1 மதிப்பெண்) சாத்தியமற்றது என சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கேள்வித்தாள் வெளியானது உறுதி செய்யப் பட்டது
பீகார் மாநிலத்தின் ஹசாரிபாக் மற்றும் பாட் னாவில் கேள்வித்தாள் மூறைகேடு நடந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிபிஅய் இந்த வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது. 2024 ஆகஸ்ட் 1-ஆம் தேதி, பாட்னாவில் உள்ள நீதிமன்றத்தில் சிபிஅய் ஒரு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இதில், பீகாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கேள்வித்தாள் கசிவு தொடங்கியதாகவும், இதற்கு பலர் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிபிஅய் அறிக்கையின்படி, 2024 மே 5-ஆம் தேதி, பீகாரின் ஹசாரிபாக்கில் உள்ள எஸ்பிஅய் வங்கி காப்பகத்தில் இருந்து நீட் யுஜி தேர்வுக்கான அசல் கேள்வித்தாள்கள் அடங்கிய இரண்டு பெட்டிகளை ஹசாரிபாக்கில் உள்ள ஓயாசிஸ் பள்ளி என்ற தேர்வு மய்யத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
பீகார் அரசின் இளநிலை பொறியாளரான சிகந்தர் பிரசாத் யாதவேந்து, தேர்வர்களைத் தொடர்பு கொண்டு, 30-40 லட்சம் ரூபாய் கட்டணத்திற்கு தேர்வுக்கு முன்பே கேள்வித்தாள்களுக்கான விடைகளை எழுதிக்கொடுத்து அவர்களை தேர்ச்சி பெறச்செய்வதாக உறுதியளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவரது காரை பாட்னா காவல்துறை தடுத்து நிறுத்தி, அபிஷேக் குமார், சிவ் நந்தன் குமார், ஆயுஷ் ராஜ் மற்றும் அனுராக் யாதவ் ஆகிய தேர்வர்களின் நுழைவுச் சீட்டு நகல்களை பறிமுதல் செய்தது.
நீட் யுஜி 2024 கேள்வித்தாள் கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சஞ்ஜீவ் முகியா, பாட்னாவில் நள்ளிரவு நடவடிக்கையின் மூலம் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சிறப்புப் பணிக்குழுவால் கைது செய்யப்பட்டார். இவர், நலந்தாவில் உள்ள உத்யான் வித்யாலயாவில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றியவர். இவரது கும்பல், பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
முகியாவின் கும்பல், தேர்வு முறைகேடுகளை ஒரு “ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தொழில்முறை”யில் நடத்தியதாக பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இவர், தேர்வர்களின் பெற்றோரிடம் 10-15 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலித்ததாகவும், கேள்வித்தாள்களை மொபைல் போன் மூலம் பெற்று மாணவர்களுக்கு வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த ஆண்டு 5,500 தேர்வு மய்யங்கள் அமைக்கப் பட்டிருந்தன. இது கடந்த ஆண்டு இருந்த 4,750 மய்யங்களை விட அதிகமாகும்.
‘நீட்’ மோசடி குறித்து ஏப்ரல் 26-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஓர் அமைப்பின் மூலம் 1,500-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.
நீட் தேர்வுக்கு எதிராக தொடக்க முதல் திராவிடர் கழகம் போராடி வருகிறது. தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசும் தொடர்ந்து எதிர் குரல் கொடுத்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஒன்றிய அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசு நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏப்ரல் 9-ஆம் தேதி நடத்தியதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை விவாதிக்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளார்.
தகுதி – திறமையை சோதிக்கத் தான் ‘நீட்’ என்பது மாறி, ‘நீட்’ வினாத்தாளை முன் கூட்டியே வெளியாக்கு வதில் தான் திறமை காட்டப்பட்டு வருகிறது!
ஒன்றிய பிஜேபி அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டாமா?