சென்னை, மே 5 நீட் என்றாலே தொடக்கம் முதல் குளறுபடிகள்தான் – மோசடிகள்தான். இவ்வாண்டும் நீட் தேர்வில் நடைபெற்ற மோசடி தொடர்பாக 250–க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மற்றும் தேர்வர்கள்மீது புலனாய்வுத் துறை விசாரணையை மேற்கொண்டுள்ளது.
நுழைவுச்சீட்டில் தேர்வு மய்யத்தின்
ஊர் குறிப்பிடாததால் குழப்பம்!
ஊர் குறிப்பிடாததால் குழப்பம்!
தருமபுரியில் உள்ள மய்யத்திற்குப் பதிலாக சேலத்திற்கு ‘நீட்’ தேர்வு எழுத வந்த தருமபுரி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 9 பேரில், 7 பேர் மீண்டும் தருமபுரி சென்று தேர்வு எழுதினர். 2 பேர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி 2025-2026 ஆம் ஆண்டிற்கான ‘நீட்’ தேர்வு நேற்று (4.5.2025) நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்பட 22 மய்யங்களில் ‘நீட்’ தேர்வு நடந்தது.
சேலம் குமாரசாமிப்பட்டி யில் உள்ள அரசு கலைக்கல்லூரி ‘நீட்’ தேர்வு மய்யத்திற்குக் காலை 9 மணிக்கே வெளியூர்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் வரத் தொடங்கினர். அப்போது, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவி தமிழரசி என்பவர் தனது தந்தை ஞானசேகருடன் காலை 10.30 மணிக்கு தேர்வு மய்யத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரது தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தேர்வு கண்காணிப்பு அதிகாரிகளிடம் காண்பித்தார்.
நுழைவுச்சீட்டை பார்த்த அங்கிருந்த அதிகாரிகள், மாணவி தமிழரசி, தருமபுரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் தேர்வு எழுத வேண்டும் எனவும், சேலத்திற்கு எதற்காக வந்தீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினர். இதனை கேட்டவுடன் மாணவி கண்ணீர்விட்டு கதறி அழுதார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக கால் டாக்சி வரவழைத்து அந்த மாணவி மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரையும் தருமபுரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சென்று தேர்வு எழுதினார்.
முன்னதாக தமிழரசியின் நுழைவுச்சீட்டில் அரசு கலைக் கல்லூரி, சேலம் பைபாஸ் ரோடு என்று மட்டும் குறிப்பி டப்பட்டிருந்தது. ஆனால் சேலம் அல்லது தருமபுரி என்று ஊர் பெயர் எதுவும் குறிப்பிடவில்லை. அதில் அஞ்சல் குறியீட்டு எண் (பின்கோடு) மட்டும் இடம் பெற்றிருந்ததால் தேர்வு மய்யம் குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஏமாற்றம் அடைந்தனர்
இதேபோல் தருமபுரியில் இருந்து வந்த 6 மாணவ, மாணவிகள் சேலம் மய்யத்தில் இருந்து கால் டாக்சி பிடித்து மீண்டும் தருமபுரிக்குத் திரும்பிச் சென்று தேர்வு எழுதினர்.
அதில் அரூரைச் சேர்ந்த இளமாறன் என்பவரும், மற்றொரு மாணவரும் தருமபுரி அரசு கலைக்கல்லூரி தேர்வு மய்யத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை!
மேல்மருவத்தூர் அருகே நீட் தேர்வுக்கு பயந்து மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட் டம் மேல்மருவத்தூர் அடுத்த அகிலி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகள் கயல்விழி (வயது 17). அச்சரப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். மேலும் நீட் தேர்வுக்காகவும் விண்ணப்பித்திருந்தார். நீட் தேர்வு நேற்று (4.5.2025) நடைபெற்றது. மாணவி கயல்விழிக்கான தேர்வு மய்யம் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.
நேற்று (4.5.2025) தேர்வு எழுத மாணவி கயல்விழி தாம்பரம் செல்ல வேண்டும் என்பதால் அவரது தாயார் அதிகாலை 4 மணிக்கு மகளை எழுப்புவதற்காக அவரது அறைக்குச் சென்றார்.
அங்கு கயல்விழி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். இதனால் அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக மேல்மருவத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் கயல்விழியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மதுராந்தகம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பூணூலை
அகற்றக் கூடாதா?
அகற்றக் கூடாதா?
நீட் தேர்வு எழுத செல்கின்ற இருபால் மாணவ, மாணவர்களின் உடைகள், துப்பட்டா, ஹிஜப், அணிகலன்கள் என்று எல்லாம் சோதனைக்கு ஆளாக்கப்படுகின்றன. திருமணமான பெண்களின் தாலியும் கழற்றப்படுகின்றன. சட்டையின் பொத்தான் வரை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கருநாடக மாநிலம் கலபுரகியில் தனியார் கல்லூரியில் சீபாத் பட்டில் என்ற மாணவன், நீட் தேர்வு எழுத வந்தான். அவனை சோதனை செய்ததில், பூணூல் அணிந்து இருந்தது தெரிந்தது. அதனைப் பார்த்த காவல்துறையினர் பூணூலை நீக்கக் கூறினர். மாணவன் மறுத்தான்; அப்படியானால் தேர்வு எழுத முடியாது என்று கூறப்பட்டது. அதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. கடைசியாக அந்த மாணவன் பூணூலை நீக்க ஒப்புக்கொண்டான்.
இதைப் பார்த்த மாணவனின் பெற்றோர், தொலைப்பேசியில் சிலரைத் தொடர்பு கொண்டு இத்தகவலைக் கூறினர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பார்ப்பன சங்கத்தைச் சேர்ந்தவர்கள், இந்து அமைப்பினர் தேர்வு மய்யத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர் என்று செய்தி வந்துள்ளது.
இதற்கு முன்பு பலவகைகளில் மாணவ, மாணவி களிடத்தில் சோதனை நடத்திய போது, ‘‘நீட் தேர்வு என்றால் அப்படித்தான்‘‘ என்றெல்லாம் வக்காலத்து வாங்கி பேசியவர்கள், பூணூலை கழற்றச் சொல்லும் போது மட்டும் துடியாய் துடிப்பது ஏன்?
புரிந்து கொள்வீர், பார்ப்பனரின் ஜாதி ஆணவ ஆதிக்கத் திமிரை!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில்
நீட் பயிற்சி மாணவி தற்கொலை
நீட் பயிற்சி மாணவி தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் 17 வயது மாணவி ஒருவர், ஒரு பயிற்சி மய்யத்தில் ‘நீட்’ தேர்வுக்குப் பயிற்சி பெற்று வந்தார். மத்திய பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்ட அவர், கோட்டா வில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
நேற்று (4.5.2025) நீட்தேர்வு எழுத இருந்த நிலையில், 3.5.2025 அன்று மாலை, அவர் வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது, அவருடைய பெற்றோர் வீட்டில்தான் இருந்ததாக தெரிகிறது. இருப்பினும், இரவு 9 மணிக்குத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்தனர். மாணவி தற்கொலை குறிப்பு எதுவும் எழுதி வைக்கவில்லை.
மாணவியின் பெயரை காவல்துறையினர் வெளியிடவில்லை. இந்த ஆண்டில், கோட்டாவில் உள்ள பயிற்சி மய்யங்களில் படித்து தற்கொலை செய்து கொண்ட 14 ஆவது நபர் இவர் ஆவார். கடந்த ஆண்டு, கோட்டா பயிற்சி மய்ய மாணவர்கள் 17 பேர் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனை என்ற பெயரில்…
திருச்சியில் மாணவி ஒருவரின் தலைமுடியை விரித்து தலைமுடிக்குள் எதுவும் வைத்துள்ளார்களா என்று பொது வெளியில் சோதனையிட்டதால் அம்மாணவி கண்ணீர் விட்டு அழுதார்.
திருப்பூரில் இரண்டு மாணவிகளின் சட்டையில் இருந்த உலோகப் பட்டன்களை கத்தரிக்கோலால் வெட்டியுள்ளனர். பொதுவெளியில் இவ்வாறு செய்ததால் மாணவி அவமானம் தாங்காமல் அழுதவாறே இருந்தார்
சென்னையை அடுத்த செய்யாறில், ஒரு மாண விக்கு வந்த ஹால் டிக்கெட்டில் மாவட்டத்தின் பெயரைக் குறிப்பிடாமல் விட்டதால் அவர் அதிகாலையில் இருந்து அலைக்கழிக்கப்பட்டதால் சென்னைக்கு சிறிது தாமதமாக வந்ததால் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. ஹால் டிக்கெட்டில் நடந்த தவறு என்று கூறியும் அவரைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவர் கதறி அழுதார். இரண்டு ஆண்டுகளாக இந்தத் தேர்விற்காக தயாரானதாகவும் மீண்டும் ஓராண்டு காத்திருக்கவேண்டுமா என்ற மனநிலையில் இருப்ப தாகவும் கூறினார்.
அங்கும் – இங்கும்!
தலைநகர் டில்லியில் உள்ள தேர்வு மய்யத்தில் நீட் தேர்வு எழுதிவிட்டு ரிலாக்ஸாக திரும்பும் வட இந்திய மாணவ, மாணவிகள்.