‘தீபாவளி’ அறிவுக்கும் – அறிவியலுக்கும் பொருந்துகிறதா?
தீபாவளி கொண்டாடுவதால் காற்று மாசு – உயிருக்கு ஆபத்து – தீ விபத்துகள் ஏராளம்!
மக்களுக்கு அறிவை ஊட்டும் விழாக்களைக் கொண்டாடுவீர்!
அறியாமை என்னும் பள்ளத்தில் வீழ்ந்து அறிவைத் தொலைக்காதீர்!
மனிதப் படுகொலை செய்யப்பட்ட நாள்கள் பண்டிகைகளா?
விழா என்றால் அறிவுக்கும், மக்களின் உண்மையான மகிழ்ச்சிக்குரியதாகவும் இருக்கவேண்டும். தீபாவளி, அசுரனாகிய திராவிடனைப் படுகொலை செய்த நாள்! மேலும் தீபாவளியால் காற்று மாசு உள்பட பல்வேறு விபத்துகள் நடைபெறுவதை எண்ணிப் பாரீர்! மக்களுக்காக விழாக்களே தவிர, பண்டிகைகளுக்காக மக்கள் அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
பகுத்தறிவுள்ளோர்களான பக்தர்களே, பண்டிகைப் பிரியர்களே, அந்த மூடநம்பிக்கையை முதலாக்கி லாபம் – வருவாய் தேடும் நண்பர்களே!
தீபாவளிபற்றி பகுத்தறிவாளர்
விடுக்கும் கேள்விகளுக்குப் மெய்ப்பொருள் காண முயற்சியுங்கள்!
நாங்கள் எடுத்து வைக்கும் வாதங்களைச் சற்று பொறுமையாகப் படித்து, ‘‘மெய்ப்பொருள்” காண முயற்சியுங்கள்.
வெறும் வசவும், எரிச்சலும் எங்களது காரண காரியங் களான கேள்விகளுக்கு ஒருபோதும் உங்களது விடை யாகிவிட முடியாது.
அறிவியல் உண்மைகள் முதலில் ஏற்க முடியாத வைகளாகவும், ஏளனங்களைச் சந்திக்கும் களங்களா வுமே இருப்பதும், பிறகு, மக்கள் அப்பக்கம் திரும்பி ஏற்பதும், சரித்திரத்தின் நிரந்தரப் பக்கங்கள்தான்!
பண்டிகைகளைக் கொண்டாடுகிறோம்; தனி வாழ்விலும், சமூக வாழ்விலும் பண்டிகைகள், விழாக்கள் – மக்கள் மகிழ்ச்சிக்கும், உழைப்பின் அசதிகள், அயர்வுகள், கடுமைகள் – இவற்றிலிருந்து மீளுவதற்குத் தேவைதான், ஒப்புக்கொள்கிறோம்!
ஆனால், அவை அறிவுப்பூர்வமாகவும், வாழ்வியல் ரீதியாகவும் நமக்குப் பாதிப்புகள் ஏற்படுத்தாத தன்மை யில், உண்மையான மகிழ்ச்சியையும், தலைநிமிர்ந்து பெருமைப்படவுமான வகையிலும் அமையவேண் டாமா?
அறிவியலுக்குப் பொருந்துகிறதா?
‘தீபாவளி’ என்று கொண்டாடப்படும் ஆரிய மதப் பண்டிகையை, மிகவும் பிரபலப்படுத்த – பல வகையிலும் விளம்பரப்படுத்தப்பட்டு, குடும்பங்களில் புத்தாடை, புது விருந்து, ‘வெளிச்சம்’ போட்டு, வெடிவெடித்துக் கொண்டாடும் பண்டிகை என்றாக்கியுள்ளனர்.
பகுத்தறிவு அடிப்படையில் அந்தப் பண்டிகையின் கதை அறிவுக்கோ, அறிவியலுக்கோ ஏற்புடைத்ததா? நம்ப முடியாத கற்பனைகளைத் தாண்டிய பண்பாட்டுப் படையெடுப்பின் பின்னணி கொண்டதாகவும் அது உள்ளது.
ஹிந்து மதப் பண்டிகைகளைக் குறை கூறுகிறோம் என்று ஆத்திரப்படுகின்ற ‘அரைவேக்காடு’களைக் கேட்கிறோம் –
இந்து மத முக்கிய பண்டிகைகள் எல்லாம் ‘அசுரர்களை அவதாரம் எடுத்து அழித்த கதை’ என்றுதான் பெரும்பாலான விழாக்களில் கடவுளைக் கொலைகாரர்களாகவேதான் காட்டப்படுகிறது?
இருவேறு பண்பாட்டு அடிப்படை!
‘கடவுள் கருணையே வடிவமானவர்’ – என்பதை மாற்றி, ஏமாற்றி ஒரு தீமையை வென்று நன்மைக்கான விழா என்று கூறுவது!
அதன் கதையோ புரட்டு!
அடிப்படையோ, இனப் போராட்டம் – இரு வேறு பண்பாட்டு அடிப்படைப் பின்னணி.
ஒவ்வொன்றிலும் ‘அசுரர்கள்’ அழிப்பு!
‘அசுரன்’ என்றால் யார்?
சுரபானம் குடித்த குடிகாரன் சுரன்.
சுரபானம் குடிக்க மறுத்தவன் (சுரன் அல்லாதவன் – குடியை மறுத்தவன்) அசுரன்.
கதை ஒருபுறமிருக்கட்டும். நடைமுறையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த ‘தீபாவளி’ போன்ற பண்டி கைகளால் ஏற்படும் இழப்புகள் எவ்வளவு என்பதை எண்ணிப்பாருங்கள்.
‘காசைக் கரியாக்குவது’ ஒருபுறம்; மறுபுறம் காற்று மாசு, நுரையீரல், உடல்நலக் கோளாறு, பட்டாசால் ஏற்படும் தீ விபத்துகள்.
நேற்று (12.11.2023) மட்டும் தமிழ்நாட்டில் 364 விபத்துகள்! தேவையா?
பொங்கலும் – தீபாவளியும்!
தைப் பொங்கல் விழா – அறுவடைத் திருநாள் – புதுநெல், புத்துருக்கு நெய், உழவுக்கு, உழைப்பிற்கு உதவும் மாடுகளுக்கும் உற்சாகம் – இப்படி அதில் உள்ள பண்பாட்டுப் பெருமை; ஆனால், தீபாவளி என்பதோ பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவுபற்றி – ஒப்பீடு செய்யுங்கள்!
நமது பழந்தமிழ் இலக்கியங்கள் எதிலாவது ‘தீபாவளி’பற்றிய குறிப்புகள் ஏதும் உண்டா?
இதைப்பற்றி எந்தப் புலவர்களோ, அரசியல் அறிஞர் களோ பேசுகிறார்களா? கேட்டால் வயிற்றைக் காட்டுவது நியாயமா?
எல்லோரும் ‘‘வாழ்த்துக் கூறி” வாக்கு வங்கியைக் குறி வைக்கின்ற மலிவான அரசியல் கூத்துக் காட்சிதான் இங்கே!
தீபாவளியால் ஏற்படும் நிகழ்காலக் கேடுகள்!
‘கடவுள் சர்வசக்தி வாய்ந்தவன்’; ‘கடவுள் சர்வதயாபரன்’ என்பது உண்மையா? எந்தக் கடவுள் நன்மை செய்கிறது பண்டிகையின்போது, யாரையாவது காப்பாற்றுகிறதா?
1. தலைநகர் டில்லியில் காற்று மாசு 300-க்குமேல் போயிற்று.
2. குஜராத் சவுமிய நாராயணன் கோவில் பூங்காவில் தீ விபத்து! (இத்தனைக்கும் ‘அக்னி’யும் கடவுளாகக் கும்பிடப்படும் நாட்டில் – தீயணைப்புத் துறை மூலமே மனிதர்களுக்குப் பாதுகாப்பு!)
3. சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் கோபுரத்தில் தீ விபத்து.
4. உத்தரப்பிரதேசத்தில் 22.5 லட்சம் அகல் விளக்கு ஏற்றிய வெளிச்சத்தால் பாட்டாளிகளின், ஏழைகளின் வாழ்வு மேம்படவில்லை. ஏழைப் பெண்கள், குழந்தை கள் எண்ணெய் தேடி ஓடும் அவலம் அயோத்தியில்.
5. டில்லியில், காற்று மாசுபாட்டால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனை நிரம்பும் காட்சிகள்.
இந்த விழாவினால் ‘சர்க்கரை நோயாளிகளின்’ எண்ணிக்கை அதிகமானது.
இதுபோல விநாயகர் சதுர்த்தி என்கிற பண்டிகையால் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து மாசுபடுத்து கின்றார்கள். அதனால், அதற்குத் தடை – சுற்றுச்சூழல் பாதிப்பு – பண்டிகைகள் குறித்து கண்காணிப்பு.
மதச் சுதந்திரம்கூட அரசமைப்புச் சட்ட விதிகள் கூறு 25, 26 இல் – பொது அமைதி, சுகாதாரத்திற்கே முன் னுரிமை தந்துள்ள சட்டம்பற்றி கவலைப்படுகின்றார்களா?
மகிழ்ச்சிக்குப் பதில் எதிர்மறைவான கேடுகள்!
போனஸ் வாங்கும் தொழிலாளி, அதனை பொறுப் பாக ஆக்கப்பூர்வ வகையில் செலவழிப்பதில் எத்தனை மதிப்பெண் பெற்றவராவார்? சொல்லிக் கொடுக்க எத்தனை சங்கங்கள் உண்டு?
சமூகமும், குடும்பமும் மகிழ்ச்சி அடைவதற்குப் பதில், அதனால் ஏற்படும் விளைவுகள் எதிர்மறை யானதே!
‘‘தீபாவளி கொண்டாடதவர்கள் எத்தனைப் பேர்?” என்று நம்மைப் பார்த்து கேலியாகக் கேள்வி கேட்போர் – இதற்குப் பதில், மெஜாரிட்டி பண்டிகை கொண்டாடு வோர் என்பதாகக் கூறுவது சரியா? அதனை ஏற்க வேண்டுமா?
‘படிக்காத தற்குறிகள்’ முன்பு அதிகம் இருந்தனர். அதைக் காட்டி, ‘படித்தவர்கள் சிலர்தானே’ – சிறுபான்மை தானே என்று கூறி, கல்வி பரப்புவோரை நியாயப்படுத்த முடியுமா?
விஞ்ஞானிகளும், டாக்டர்களும் சிலர்தான். அதற் காக அஞ்ஞானம் வளர, நோயாளிகள் பெருகவேண்டும் என்று வாதிட முடியுமா?
மனிதர்களுக்காகத்தான் விழாக்கள் – பண்டிகைகளுக்காக மனிதர்கள் இல்லை!
மக்களே அறிவுப் பாதையிலிருந்து – மூடநம்பிக்கை என்ற பெருவெள்ளத்தில், அறியாமை என்ற பள்ளத்தில் விழும் விபத்துக்கு ஆளாகாத – பகுத்தறிவு திரு விழாக்களைக் கொண்டாட முன்வாருங்கள்!
மனிதர்களுக்காகத்தான் பண்டிகைகள், விழாக்கள்!
பண்டிகைகளுக்காக மனிதர்கள் இல்லை என்ற அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து, மூடத்தனத்தை, மூர்க்கத்தனத்தைக் காப்பாற்ற ஒருபோதும் முயற்சிக் காதீர்கள் – முன்வராதீர்கள்.
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
13.11.2023