சென்னை, மே 4 தமிழ் வார விழாவின் நிறைவு விழா 5.5.2025 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளார்கள். இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்விழாவில் தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியதன் தொடர்பாக அவர்களின் குடும்பத்தினருக்குப் பரிவுத் தொகையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் முதலமைச்சர் அவர்கள் வழங்குகிறார்கள்.
இவ்விழாவில் பல்லவி இசைக்குழுவின் வாயிலாக ‘பாவேந்தரின் எழுச்சி பாடல்களும்’, நரேந்திர குமார் நடன அமைப்பில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவியர்களின் ‘தமிழ் அமுது-நாட்டிய நிகழ்ச்சி’யும், அனர்த்தனா குழுவினரின் ‘சங்கே முழங்கு’ மாபெரும் நடன நிகழ்ச்சியும், கலைமாமணி திண்டுக்கல் அய்.லியோனி அவர்களின் தலைமையில் ‘பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா! சமூக உணர்வா! என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளன.
இலங்கை சிறையில் இருந்து 25 ராமேசுவரம் மீனவர்கள் விடுதலையாகி சென்னை வந்தனர்
மீனம்பாக்கம், மே 4 இராமேசுவரம் பகுதியை சேர்ந்த 25 மீனவர்கள், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடல் எல்லையை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடலோரப்படையினர் 25 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களின் விசைப்படகு, மீன்பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்களை இலங்கை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இலங்கை நீதிமன்றம், கடந்த சில நாட்களுக்கு முன்பு 25 மீனவர்களை யும் விடுதலை செய்தது. அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய தூதரக அதிகாரி கள் ராமேசுவரம் மீனவர்கள் 25 பேரையும், விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த 25 மீனவர்களையும் விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் தமிழ்நாடு அரசு செலவில் மீனவர்கள் அனைவரும் வாகனங்களில் இராமேசுவரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.